7 நவம்பர், 2021

உலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள் - நவம்பர் 7

        


   புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, குணப்படுத்துவதை வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7-ந் தேதி, நாடு முழுவதும் ‘உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம்' அனுசரிக்கப்படுகிறது. 

     உண்மையில் புற்றுநோய் ஒரு புரியாத புதிர் என்றே சொல்லலாம்.உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும் ‌புற்றுநோய் பாதிப்பின் அளவு ஒவ்வொரு வருடமும் 1 சதவிகிதம் அதிகரித்தே வருகிறது. 1984 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 60 பேருக்கு இருந்த புற்றுநோயின் தாக்குதல், தற்போது 90 முதல்100 பேராக அதிகரித்துள்ளது. 

    இந்த உலகளாவிய அவசரநிலையைச் சமாளிக்கவும் நோயைக் கட்டுப்படுத்துவதில் நமது பங்கு என்ன என்ற முக்கியமான செய்தியைப் பரப்ப இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த நாளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், நோய் குறித்த தவறான கருத்துக்கள், புற்றுநோயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் அறிகுறிகளை அடையாளம் காணவும், சரியான சிகிச்சையைப் பெறவும் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் மக்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 

 இந்த தினத்தின் பின்னணியில் உள்ள வரலாற்று உண்மைகள்:

    1993 இல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் UICC  கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது. உலகளவில் புற்றுநோய் விழிப்புணர்வை ஒருங்கிணைத்துப் பரப்புவதற்கான முயற்சிகளில் WHO மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் UICC-ஐ ஆதரித்து வருகின்றன.

         2021-ஆம் ஆண்டு உலக புற்றுநோய் தினத்திற்கான தீம்

 ஒவ்வொரு வருடமும் UICC இந்த தினத்திற்கு ஒரு கருப்பொருளை உருவாக்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் ‘I can, we can’ என்பது தீர்மானமாக இருந்தது. புற்றுநோய் சுமையை எதிர்த்து என்னால் போராடமுடியும். நம் அனைவராலும் போராட முடியும் என்பது தான் அதன் அர்த்தம். எனவே, புற்றுநோய் ஆபத்து காரணிகளைக் குறைக்கவும், ஆரம்பகால நோயறிதல், சிகிச்சைகள் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சையின் சவால்களை சமாளிக்கவும் நம்மால் முடியும்.

  அதன்படி 2021 இன் தீம் என்னவென்றால் ‘I Am and I Will’ என்பது தான். இதன் பொருள் புற்றுநோயை எதிர்த்து இந்தப் போரில் வெற்றி பெறுவதற்கான திறனை நான் கொண்டுள்ளேன் என்பதாகும். 

 பாதிப்புக்கு காரணம் 

     கார்சினோஜென் கார்சினோஜென்கள் எனப்படும் ஒருவகை ஊக்கிதான் நமது உடம்பில் புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. இது புகையிலையில் மட்டுமே இல்லை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் வழியாகவும் உடலுக்குள் நுழைகின்றது. செயற்கை வேதிப்பொருட்கள் செயற்கை வேதிப்பொருட்களான சோடியம் பென்சோயிட், சோடியம் நைட்ரேட் ஆகியவை குழந்தைகளைப் பாதிப்பதுடன், பெரியவர்களுக்கு வயிற்றுப் புற்றுநோய் வரக் காரணமாகின்றன. 

     செல்கள் பாதித்தால் கட்டியாகும். மரபுவழி, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணிகள் சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய்க்கான கட்டியா என்று தீர்மானிக்கின்றன. 

   புற்றுநோய்கள் பல வகை உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டவை. எந்த அளவு பாதிப்பு, குணப்படுத்த முடிவு, எவ்வளவு காலமாகும் என்பதை புற்றுநோயின் காலம்தான் முடிவு செய்யும். 

   ஆரம்ப நிலையில் நோய் கண்டறியப்பட்டால் நோயை குணப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் எளிது 

    மார்பகம், கர்ப்பப் பை பெண்களின் மார்பு பகுதியில் ஏற்படும் இந்த வகை புற்றுநோய் மிகவும் ஆபத்தானது என்றே கூறலாம். ஏனென்றால், 2018-ம் ஆண்டில் மட்டும் 21 லட்சம் பேருக்கு மார்பகப் புற்றுநோய் வந்துள்ளது. அதில் இந்தியாவில் 1,62,468 பதிவாகியுள்ளது. 50-64 வயதுடைய பெண்களுக்கு இவ்வகை அதிகமாக வருகிறது. 

  உலகம் முழுவதும் 2018-ல் 6,27,000 பேரை, இந்தியாவில் 87,090 பேரையும் பலிவாங்கியுள்ளது இந்தப் புற்றுநோய். இதற்கு அடுத்தப்படியாக 21-67 வயதுடைய பெண்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் வருகிறது. இந்தியாவில் 2018ல் 96,922 பேருக்கு இவ்வகை புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 60,078 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

   நுரையீரல் புற்றுநோய் புகைப்பழக்கம் அல்லது மாசு அதிகம் உள்ள காற்றை அதிகம் சுவாசிப்பதால் இந்த வகை புற்றுநோய் ஏற்படுகிறது. 2018ல் 67,795 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 63, 475 பேர் பலியாகினர். 

 ஆண்களுக்கு வாய்ப் புற்றுநோய் 

     இந்தியாவில் உள்ள ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் 16 சதவீதம் இவ்வகை புற்றுநோய்தான். புகையிலை, குட்கா, பான்மசாலா போன்றவை உட்கொள்வதால், இந்த புற்றுநோய் வருகிறது. 2018-ல் 72,616 பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

 கல்லீரல் புற்றுநோய் 

   அதிவேகமாகப் பரவும் புற்றுநோயில் 2ஆவது இடம் வகிக்கிறது கல்லீரல் புற்றுநோய். சர்வதேச அளவில் ஒவ்வோர் ஆண்டும் 7,50,000 பேர் இதனால் இறக்கின்றனர். அதேபோல, ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 7,80,000 நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இந்தியாவில் 2019ல் ஜூலை வரை 25,999 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதேபோல், 19,676 பேர் பலியாகியுள்ளனர். 

 மனவலிமை வேண்டும் 

      புற்றுநோய் ஒன்றும் பரவும் நோய் இல்லை. ஆனால், பரவும் என்று எண்ணி புற்றுநோயாளிகள் பலர் தனிமைப்படுத்தப் படுகிறார்கள். இதனாலே மனவலிமையற்று, பல நோயாளிகள் நடைபிணமாக மாறிவிடுகின்றனர். உணவுப் பழக்கம், உடற்பயிற்சி தினமும் உடற்பயிற்சி செய்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது புற்றுநோயிலிருந்து மட்டுமன்று எந்த நோயில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.

    ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி, நோய்க்குத் தீர்வு கண்டு வாழ்வை மீட்டு எடுக்கலாம். பரிசோதனை அவசியம் புற்றுநோய் ஒரு நாளில் ஊருவாவதில்லை. நாள் பட்ட புண் போன்றதுதான். எனவே குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது முழு உடலைப் பரிசோதனை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை இல்லை என்றாலும், இதற்காக ஒரு தொகையை தனியார் மருத்துவமனையில் கொடுப்பதில் தவறேதுமில்லை. 

       இந்தியாவிலேயே வசதி புற்றுநோயின் தீவிரத்துக்கு ஏற்றாற்போல அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சுச் சிகிச்சை, கீமோதெரபி, நோயெதிர்ப்பு சிகிச்சை, இலக்குச் சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை போன்ற பலவகையான சிகிச்சை முறைகள் இந்தியாவிலே உள்ளன.

    புற்றுநோய் வந்து, அதை மன உறுதியோடு அதை எதிர்த்துப் போராடி வெற்றிகொண்டவர்கள் பலர் நம்மிடையே உள்ளனர் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்தநாள்

 



    சிறுவயதில் நாம் பல பாடல்களைப் பாடியிருப்போம்.

     "கைவீசம்மா கைவீசு!',... "தோசையம்மா தோசை!',... "அம்மா இங்கே வா வா!',....."மாம்பழமாம் மாம்பழம்” இந்த பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் யார் தெரியுமா?


     பள்ளியில் சக மாணவன் ஒருமுறை தட்டு கிட்டு, லட்டு, கட்டு, மட்டு, வட்டு, விட்டு, பிட்டு என்று வேடிக்கையாக சொற்களை  அடுக்கிக் கொண்டே போனான்! ஒத்த ஓசையுடைய அந்தச் சொற்கள் சிறுவன் மனதில் ஒரு பாடலைத் தோற்றுவித்தன.

    அதை உடனே தனது குறிப்பேட்டில் எழுதிக்கொண்டான். அது பிற்காலத்தில் ஒரு பெரிய குழந்தை இலக்கியப் பாடலாக மாறப்போகிறது என்பது அன்று அவனுக்குத் தெரியாது! அந்தப் பாடல்தான் எளிய பொருள் நிறைந்த பல பாடல்கள் அச்சிறுவனால் பிற்காலத்தில் எழுதக் காரணமானது. அவர் யார் தெரியுமா?

     அவர்தான் பிற்காலத்தில் 'குழந்தைக் கவிஞர்' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட கவிஞர் திரு.அழ.வள்ளியப்பா ஆவார்.

    இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள "ராயவரம்' என்னும் சிற்றூரில் 7.11.1922 அன்று பிறந்தார். குடும்பப் பொறுப்புகள் காரணமாக அவரால் கல்வியைத் தொடர முடியவில்லை. எனவே தனது 18-ஆவது வயதில் சென்னையில் இருந்த "சக்தி' பத்திரிகை அலுவலகத்தில் சேர்ந்தார். இவர் எழுதிய முதல் கதை "ஆளுக்குப் பாதி' என்பதாகும்.

     1941 ஆம் ஆண்டு இவருக்கு வங்கியில் வேலை கிடைத்தது. வங்கியில் பணிபுரிந்து கொண்டே பாலர் மலர், சங்கு போன்ற சிறுவர் இதழ்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1951 முதல் 1954 வரை "பூஞ்சோலை' என்ற சிறுவர் இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார்.அந்நாளில் சிறுவர் இதழ்களில் பலர் எழுதிவந்தனர். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, 1950 இல் "குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்.

      இவர் எழுதிய சிறுவர் பாடல்கள் யாவும் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளி வந்தன.1944 ஆம் ஆண்டு "மலரும் உள்ளம்' என்ற தொகுதியும்,1954 ஆம் ஆண்டு 135 பாடல்கள் கொண்ட தொகுதியும் ,1961இல் மற்றொரு தொகுதியும் வெளிவந்தன.

     "நம் நதிகள்' என்ற தலைப்பில், இவர் தமிழகத்தின் ஆறுகள் பற்றிய நூல் ஒன்றை எழுதினார். இந்நூலை, புதுதில்லியில் உள்ள "தேசியப் புத்தக டிரஸ்ட்' (National Book Trust) பதினான்கு இந்திய மொழிகளில் வெளியிட்டது! இது, தமிழக எழுத்தாளர் ஒருவருக்கும் கிடைக்காத பெருமையாகும். இவர் 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம்,1 ஆய்வு நூல், 2 மொழி பெயர்ப்பு நூல்கள், 1தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.

     இவற்றில் 2 நூல்களுக்கு மத்திய அரசின் பரிசுகளும், 6 நூல்களுக்கு மாநில அரசின் பரிசுகளும் கிடைத்துள்ளன. இவர் ஒரு எழுத்தாளர் மட்டுமல்லாது தலை சிறந்த பேச்சாளரும் ஆவார். 1979ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்திலும், 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்” என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரைகள் மிக முக்கியமானவையாகும்.

      பல தொண்டு நிறுவனங்கள் இவருக்கு "குழந்தை இலக்கிய முன்னோடி', "பிள்ளைக் கவியரசு,' "மழலைக் கவிச் செம்மல்” போன்ற பல விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளன .1982 ஆம் ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்ற விருது அளித்தது.

      வள்ளியப்பா குழந்தைகளோடு பழகும் பொழுது, தானும் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார். அவர்களோடு மனம் விட்டுப் பேசி ஆடிப்பாடி மகிழ்வார். அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளை அழைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் கதை சொல்வார். இதற்காக ஏராளமான குழந்தைகள் அவர் வீட்டுக்கு வருவர். 

       ஒருநாள் சிறுவன் ஒருவன் புதுச்சட்டை அணிந்து வந்தான். காரணம் கேட்டதற்கு, "எனக்கு இன்று பிறந்தநாள்!' என்று கூறினான். உடனே சிறுமி ஒருத்தி, "நான் வெள்ளிக்கிழமை பிறந்தேன்!' என்று கூறினாள். மற்றொரு சிறுமி குறுக்கிட்டு, "நான் புதன்கிழமை பிறந்தேன்!' என்று கூறினாள்.


வள்ளியப்பாவிற்கு உடனே ஒரு பாடல் தோன்றியது அதுதான். 

"ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை நன்றாய் 

பாடம் படித்திடுமே!

திங்கள்கிழமை பிறந்த பிள்ளை தினமும் 

உண்மை பேசிடுமே!'

இவ்வாறு ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு சிறப்பைக் கூறி, "இந்தக் கிழமை ஏழுக்குள் எந்தக் கிழமை நீ பிறந்தாய்?' என்று முடித்திருப்பார். 




        அவரது திறமைக்கு இந்தப் பாடல் ஒன்றே சான்றாகும். குழந்தைகளோடு ஒன்றி வாழ்ந்த நம் கவிஞர் 16.3.1989 அன்று காலமானார்.

தகவல் துளிகள்

(1) வள்ளியப்பா ஓய்வு பெற்றபின் 1983 முதல் 1987 வரை கோகுலம் இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

(2) இவரது பல பாடல்கள் நூல்களாக மட்டும் இல்லாமல் குறுந்தகடு வடிவிலும் வெளிவந்துள்ளன.

(3) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இவரது பாடல்களை மிகவும் நேசித்தார் . "குழந்தை உள்ளம் கொண்டவர் மட்டுமே குழந்தைகளுக்கு எழுத முடியும்!' என்று கூறினார்.

(4) மூதறிஞர் வ.சு.ப. மாணிக்கம், வள்ளியப்பா பற்றி இப்படி குறிப்பிட்டார்."தமிழில் நான்கு வகையான பாக்கள் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் என்னை பொருத்தவரை பா வகைகள் ஐந்து. அவை ஆசிரியப்பா ,வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா மற்றும் வள்ளியப்பா!'

(5) கவிஞரும், எழுத்தாளருமான கொத்தமங்கலம் சுப்பு, வள்ளியப்பா அவர்களை பின்வருமாறு பாராட்டினார்.

"வள்ளியப்பா ஒரு புள்ளியப்பா! அவர் வரையும் பாக்கள் வெள்ளியப்பா! வளரும் பிள்ளைகளுக்கு பள்ளியப்பா!'

(6) இவருக்கு "குழந்தைக் கவிஞர்' என்ற பட்டத்தை வழங்கியவர் திரு தமிழ்வாணன் ஆவார்.

(7) இவர் இறக்கும் பொழுதும் குழந்தை இலக்கியம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். "குழந்தை இலக்கியத்தை பல்கலைக்கழக அளவில் பாடமாக வைக்க வேண்டும்' என்று பேசி முடித்து மயங்கிச் சரிந்தார், இந்தத் தமிழ் குழந்தை இலக்கியத்தின் முன்னோடி.

       குழந்தைகளின் கவனத்தைக் கவர்வது அத்தனை எளிதான காரியம் அல்ல. குழந்தைக் கவிஞர் என்று சொன்னாலே அழ. வள்ளியப்பாதான் மனதில் தோன்றுவார். இந்தச் சாதனையை குழந்தைகள் உலகம் என்றும் கொண்டாடும்.

6 நவம்பர், 2021

போர் மற்றும் ஆயுத மோதல் வரலாற்றில் சுற்றுச்சூழல் சுரண்டலைத் தடுப்பதற்கான சர்வதேச தினம்

       

     போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் 2001 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் தொடங்கப்பட்டு,ஆண்டுதோறும் நவம்பர் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 

     போர் மற்றும் ஆயுத மோதல்கள் இயற்கைச் சூழலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, பயிர்கள் அழிக்கப்படுகின்றன, நீர் வழங்கல்கள் விஷமாகின்றன,காடுகள் எரிக்கப்படுகின்றன. போருக்குப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழலின் அழிவுக்கும் சேதத்திற்கும் காரணமாகின்றது. அதைவிட நீண்டகால விளைவுகள் மோசமாக இருக்கும். 

    இறந்த மற்றும் காயமடைந்த வீரர்கள் மற்றும் குடிமக்கள், அழிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் வாழ்வாதாரங்களின் அடிப்படையில் மனிதகுலம் எப்போதுமே போர் இழப்புகளைக் கணக்கிட்டாலும், சுற்றுச்சூழல் பெரும்பாலும் போரின் விளம்பரப்படுத்தப்படாத பலியாகவே இருந்து வருகிறது. 

     போர் அல்லது மோதலின் போது, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்நாள் முயல்கிறது. 

இந்த நாளின் நோக்கங்கள் இரண்டு வகையானவை. 

1. தங்கம், எண்ணெய், மரம், வைரங்கள் அல்லது பிற அரிய வளங்கள் போன்ற அதிக மதிப்புள்ள சுற்றுச்சூழல் வளங்கள் மீது ஏற்படும் மோதல்களைக் கட்டுப்படுத்துவது. 

2. மக்களின் வாழ்க்கையை நிலைநிறுத்தும் இயற்கை வளங்கள் சேதமடைந்தால் நீண்ட காலத்திற்கு அமைதி இருக்காது என்பதை ஐக்கிய நாடுகள் சபை உணர்ந்துள்ளது.எனவே அவற்றைக் காப்பது.

    எனவே போர்கள் மற்றும் மோதல்களின் சுற்றுச்சூழல் அம்சத்தில் போர்த் தடுப்பு, அமைதி காத்தல், மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற நோக்கங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தின்படி, கடந்த 60 ஆண்டுகளில், அனைத்து உள்நாட்டு மோதல்களில் 40% இயற்கை வளங்களை சுரண்டப்பட்டுள்ளன. 

     மோதல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, உலகின் பெரும்பாலான நாடுகளை விட, மிகப்பெரிய இராணுவங்கள் அதிக கார்பன் டை ஆக்சைடு வாயுவை உருவாக்குகின்றன. 

   பல ஆண்டுகளாக, ஆப்கானிஸ்தான், கொலம்பியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் இயற்கை வளங்களின் பெரும் இழப்புகளுக்குப் போர்களே வழிவகுத்தன. ஐ.நா சுற்றுச்சூழல் திட்டத்தின் படி, 2018 இல் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் காடழிப்பு விகிதம் 95% அளவை எட்டியது.

     இத்தகு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும், போர்களைப் புறந்தள்ளுவோம். சுற்றுச்சூழலைக் காத்து, உயிர்கள் வாழ ஏதுவான இடமாக இவ்வுலகை மாற்றுவோம்.

5 நவம்பர், 2021

சுனாமி விழிப்புணர்வு நாள் - நவம்பர் 5

உலக சுனாமி விழிப்புணர்வு நாள்



 உலக சுனாமி விழிப்புணர்வு தினம் என்பது ஜப்பானின் சிந்தனையாகும்.

     சுனாமி என்பது ஜப்பான் சொல். சு (tsu) என்றால் துறைமுகம். நாமி (nami) என்றால் அலை. எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உள்ளன. தமிழில் “ஆழிப்பேரலை " என்று அழைக்கப்படுகிறது.

காரணங்கள்:

     கடலில் உள்ள தரைப்பகுதிக்கு அடியில் நிலத்தட்டுகள் நகரும்போது அல்லது ஒன்றுடன் ஒன்று மோதும்போது அங்கு திடீர் மாற்றம் ஏற்படும். அப்போது கடல் கொந்தளித்து இராட்சத அலைகள் உருவாகி அருகில் உள்ள அனைத்துக் கடலோரப் பகுதிகளிலும் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இதைச் சுனாமி என்று அழைக்கிறார்கள்.

     கடல் அடியில் பூகம்பம் மட்டுமல்லாமல், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு மற்றும் விண்வெளியில் இருந்து விண்கல் விழுதல் ஆகியனவற்றின் காரணமாகவும் ‘சுனாமி’ ஏற்படுகிறது.

பரவும் விதம்:

     சுனாமி என்பது அடுக்கடுக்கான பல அலைகளால் உருவாகும். இந்த அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும். இந்த அலைகளின் வேகம், ஜெட் விமானத்தின் வேகத்துக்குச் சமமானதாக, சில சமயத்தில் கூடுதலாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. சுனாமியின் வேகம் ஒவ்வொரு முறையும் வேறுபடுகிறது.

விழிப்புணர்வு:

     2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் எடுக்கப்பட்ட முடிவின் படி,  நவம்பர் 5-ஆம் தேதியை, உலக சுனாமி விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடுவது என முடிவெடுக்கப்பட்டது.

     சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பைப் பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கம்.இதனால் உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தில் மக்களிடம் சுனாமி பாதிப்புகள், அதுபோன்ற அவசர காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப் படுகின்றன.

     எப்போதாவது ஒரு முறை அதிசயமாக நேரக்  கூடிய ஓர் இயற்கைச் சீற்றம்தான் சுனாமியாகும். ஆனால் மிகவும் பயங்கரமானது.  

       கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட 58 சுனாமிகளால்  மட்டும் 2 லட்சத்து 60ஆயிரம் பேர்  மாண்டிருக்கிறார்கள். சராசரியாக ஒரு சுனாமிக்கு 4600 பேர் என்ற வீதத்தில்  பலியாகியிருக்கின்றனர்.

விழிப்புடன் இருப்போம்; வரும் முன் காப்போம்

நன்றி: NHK Tv

4 நவம்பர், 2021

தீபாவளி வாழ்த்துகள்

 


அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்


பறவைகள் கற்பிக்கும் பாடங்கள்

 பறவைகள் கற்பிக்கும் பாடங்கள்! 


     பறவைகள், தங்களுக்கான உணவு கிடைக்கும் இடத்தை தேடிச்சென்றுதான் உணவை உண்ணும். உணவு தேடி அலையும் பறவை எதுவும் பட்டினியால் இறந்ததாக, இதுவரை தகவல் இல்லை. இதன் மூலம் உழைத்தால் மட்டுமே உணவு கிடைக்கும், சோம்பேறியாக இருக்கக் கூடாது என்பதைப் பறவைகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. 


   குயில், அழகாகப் பாடும் பறவை, ஆனால் அதற்கு கூடு கட்டத் தெரியாது. காகம் இல்லாத நேரத்தில் அதன் கூட்டில் காகத்தின் முட்டைகளோடு தனது முட்டையையும் வைத்து விட்டுப் போய்விடும். தனது கூட்டில் இருக்கும் முட்டை குயிலின் முட்டை என்று தெரிந்தும், அந்தக் குயில் குஞ்சையும் தனது குஞ்சாகவே பாவித்து பாதுகாக்கும் காகத்தின் மனப்பான்மை, ஊராா் பிள்ளையை ஊட்டி வளா்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. உணவைப் பாா்த்தவுடன் தனது இனம் முழுவதையும் அழைத்து அவற்றோடு சோ்ந்து உண்ணும் காகம், ஒற்றுமைப் பண்புக்கு சிறந்த உதாரணம். தினமும் மாலையில் நீா்நிலையில் குளித்த பிறகே கூட்டுக்கு செல்வது காகத்தின் வழக்கம். புறத்தூய்மை அவசியம் என்பதை காகங்கள் நமக்கு உணா்த்துகின்றன. தனது பெற்றோா் உயிரிழந்த நேரத்தில், தான் வெளியூரில் இருப்பதால் வர முடியாது என்று கூறும் பிள்ளைகள் நிறைந்த உலகில், ஏதேனும் ஒரு காகம் இறந்து விட்டால் பிற காகங்களையும் அழைத்து ஒன்று கூடி அஞ்சலி செலுத்தும் அற்புத குணம் காகங்களுக்கே சொந்தமானது. தனது இணையுடன் மட்டுமே கூடும் காகம், நமக்கு வாழ்வியல் நெறிமுறைகளை கற்றுத் தருகிறது. 


     இறந்துவிட்ட தம் முன்னோரின் பிரதிநிதியாகவே காகத்தைக் கருதி பலரும் தினசரி காகத்திற்கு உணவு படைத்த பிறகே உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். காகம் கூடு கட்டும்போது சிறுசிறு குச்சிகள், கம்பிகள் இவற்றையெல்லாம் கொண்டு வந்து அவற்றை ஒரு மரக்கிளையில் வைத்து அழுத்திப் பாா்க்கும். ஒரு காகம் கொண்டு வந்து கொடுத்தால் அதை அதன் இணை காகம் சரிபாா்க்கும். இரு காகங்களுமே அப்போது கட்டடப் பொறியாளா்களாக மாறி விடும். மனிதா்கள் தாங்கள் குடியிருக்கப் போகும் வீட்டை எப்படிக் கட்ட வேண்டும் என்றும் காகங்கள் நமக்கு கற்றுத் தருகின்றன.      


       நாம் சில வாா்த்தைகளைச் சொன்னால், உடனே அவற்றை அப்படியே திருப்பிச் சொல்லும் கிளிகள் நினைவாற்றலுக்கு நல்ல உதாரணம். எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் தனக்குப் புரியவில்லை என்று ஆசிரியா்களிடம் முறையிடும் மாணவா்கள் கிளிகளை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். 


      மழை வரப்போவதை முன் கூட்டியே தெரிவிக்கும் நடமாடும் வானிலை ஆய்வு மையமே மயில். ஆண் மயில், தனது அழகிய தோகையால், பெண் மயிலை ஈா்க்கிறது. அது மட்டுமல்ல, பிற விலங்குகள் தன்னைத் தாக்க வரும்போது திடீனெ தனது தோகையை விரித்து அவற்றை பயமுறுத்தி, தப்பித்தும் விடுகிறது. அழகாக இருந்தால் மட்டும் போதாது, ஆபத்து நேரத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது மயில் நமக்குக் கற்றுத்தரும் பாடம். மேலும், நீண்ட தூரம் பறக்க முடியாத பறவை மயில். அழகாக இருப்பவா்களிடம் பெரிய திறமை எதுவம் இல்லாமலும் இருக்கலாம். எனவே அழகைப் பாா்த்து மட்டும் மயங்கி விடாதீா்கள் என்றும் சொல்லாமல் சொல்கிறது மயில். 


      கழுகு, தனது குஞ்சுகள் கூட்டுக்குள் இருக்கும்போதே அவற்றுக்குப் போராட்ட குணத்தைக் கற்றுத் தருகிறது. கூடுகளில் இதமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மென்மையான புற்களையும், சிறகுகளையும் தாய் கழுகு நீக்கி விடுகிறது. இதனால் கரடு முரடான கூட்டிலிருந்து குஞ்சுகள் தாமாகவே முயன்று வெளியே வருகின்றன. நம் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போதே அவா்களுக்கு வாழ்வின் கஷ்ட நஷ்டங்களைப் புரிய வைக்க வேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். 

     மேகங்கள் மழைக்காகக் கூடத் தொடங்கியதுமே, புயல் காற்று வீசத் தொடங்கியதுமே பறவைகள் மரங்களின் கிளைகளைத் தேடிச்சென்று தங்கள் கூட்டில் பாதுகாப்பாக அடைந்து விடும். ஆனால் கழுகோ அப்போதுதான் உற்சாகமாகி, காற்றை கிழித்துக் கொண்டு தனது சிறகுகளை விரித்து உயரே பறக்கத் தொடங்கும். பெரும்பாலான பறவைகள் கூட்டங்கூட்டமாகத்தான் பறக்கும். ஆனால் கழுகுகள் கூட்டமாகப் பறக்காது. ஒவ்வொன்றும் தனித்தனியாகவே பறக்கும் இயல்பு கொண்டவை. 

   ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ 

என்கிற திரைப்பாடல் கழுகைப் பாா்த்தபின்தான் எழுதப்பட்டிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், தனது கூா்மையான பாா்வைத்திறனால் இரையைக் கண்டதும் கண்ணிமைக்கும் நேரத்தில், பல மடங்கு வேகத்தில் கீழே பாய்ந்து தனது இரையை கவ்விச் செல்லும் திறமை உடையது கழுகு.

    வெற்றியாளா்கள் சவால்களை சந்தித்த பிறகே சிகரங்களைத் தொடுகிறாா்கள் 

என்பதற்கும், 

எத்தனை தடைகள் வந்தாலும், நாம் துல்லியமாக இலக்கை நிா்ணயித்து, அதனை அடையக் கடுமையாகப் போராடி வெற்றிபெற வேண்டும் 

என்பதற்கும் கழுகே சிறந்த உதாரணம். வேட்டையாடும் உத்தி, தொலைநோக்குப் பாா்வை, குறையாத தன்னம்பிக்கை, அதீத மன ஒருமைப்பாடு இவை அனைத்துக்கும் சிறந்த உதாரணம் கழுகு. அதனால்தான் அதனைப் ‘பறவைகளின் சக்கரவா்த்தி’ என்கிறாா்கள்.


      எங்காவது, திடீரென்று பலத்த சத்தம் கேட்டால் வாத்துகள் தங்கள் கூட்டத்தோடு போய் சோ்ந்து கொள்ளும். எனெனில், அவை மிகவும் பயந்த சுபாவம் உடையவை. பலவீனமானவா்கள் எப்போதும் கூட்டத்துடனேயே இருக்க விரும்புவாா்கள் என்பதற்கு வாத்தும், தன்னம்பிக்கை நிரம்பியவா்கள் தன்னந்தனியாகவே இருந்து சவால்களை துணிவுடன் சந்திப்பாா்கள் என்பதற்கு கழுகும் சிறந்த உதாரணங்கள். 

     பேராசை, பொறாமை, கோபம், தாழ்வு மனப்பான்மை, சோம்பேறித்தனம் இவை அத்தனையையும் நாம் தூக்கி எறிந்து விட்டு பறவைகள் உணா்த்தும் பாடங்களின் மூலம் வானம்பாடிகளாய் வாழ்க்கையெனும் வானில் மகிழ்ச்சியுடன் சிறகடித்துப் பறப்போம்.


நன்றி : தினமணி நாளிதழ்


3 நவம்பர், 2021

தேசிய இல்லத்தரசிகள் தினம்

 தேசிய இல்லத்தரசிகள் தினம்




         குடும்பத்தையும், வீட்டையும் நிர்வகிக்கும் தலையாய பொறுப்பு இல்லத்தரசிகளுக்கே உண்டு. கணவன், குழந்தைகள் மற்றும் வீட்டையும் பராமரிக்கும் பெண்கள் ஒரு குடும்பத்தின் கண்களாக இருக்கிறார்கள். அவர்களின் மனநிலை நலமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தின் மகிழ்ச்சியும் இல்லத்தரசிகளின் மகிழ்ச்சியை சார்ந்தே உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கும் குடும்பத் தலைவிகளால் தான் வீட்டின் தரத்தை உயர்த்த முடியும். நாட்டின் வளச்சியில் இல்லத்தரசிகளின் பங்கு மிகவும் இன்றியமையாதது.

       வீட்டில் இருக்கும் பெண்கள், பணிக்குச் செல்லும் பெண்களுடன் தங்களை ஒப்பிட்டு, தன்னால் வீட்டிற்கு வருமானம் பெற்றுத் தர முடியவில்லை, வீட்டிலேயே கிடப்பதால் யாரும் மதிப்பதில்லை என்பது போன்ற எண்ணங்களால் மனதில் பெரிய பாரத்தைச் சுமக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வீட்டைப் பராமரிப்பதும், நிர்வகிப்பதும் கூட ஒரு வேலை தான் என்பதை, குடும்பத் தலைவிகள் உணர்ந்திட வேண்டும்.

      மனதிற்கும் உடலுக்கும் ஊக்கமும், மகிழ்ச்சியும் தரும் தோட்டக்கலை, புதிய வகை உணவு தயாரித்தல், யோகா, உடற்பயிற்சி, ஓவியம், நடனம், பாட்டு, புத்தகம் வாசித்தல், கவிதை, கதை மற்றும் கட்டுரைகள் எழுதுவது, படிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனம் இலேசாகி சிந்தனைகளுக்குச் சிறகு முளைத்து, நீல வானில் பரவசமாய் பறக்கும்.

 'வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் 

மற்றைய எல்லாம் பிற'. 

       அதாவது மற்றவை எல்லாம் இருந்தும், ஒருவரது மனதில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது. உறுதியுடன் செயல்பட்டு, பயனுடன் ஈடுபட்டால், மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். இம்மகிழ்ச்சி குடும்பத்துடன் கலந்து வாழ்வியில் சூழலை அழகாக்கும். பயனுள்ள செயல்கள், சமுதாயத்தையும் நல்வழிப்படுத்தும். தீய எண்ணங்களும் அறவே ஒழியும். 

       நாடும் பொருளாதார வகையில் மேம்பட வேண்டுமெனில், அதன் துவக்கம், வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். நவீன கால இல்லத்தரசிகள் தங்கள் பங்களிப்பை செயல்படுத்தி வீட்டையும் நாட்டையும் தரம் உயர்த்த முன்வர வேண்டும்.

        இவ்வாறு நாட்டையும், வீட்டையும் முன்னேற்றப் பின்புலமாய் இருக்கும் இல்லத்தரசிகளைப்போற்றி, அவர்களின் மனம் நிறையும் வண்ணம், அவர்தம் சேவைகளை உணர்ந்து, மனமாற வாழ்த்துவோம்.


( பொறுப்புத் துறப்பு : இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் எனது சொந்தக் கருத்துகள் அல்ல )😀😀😀

தேசிய மன அழுத்த விழிப்புணர்வு தினம்

 மன அழுத்த விழிப்புணர்வு தினம்



     ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் முதல் புதன்கிழமை மன அழுத்த விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

     மன அழுத்த விழிப்புணர்வு தினமானது நமது வாழ்வில், மன அழுத்தம் செலுத்தும் பங்கினையும், அதன் விளைவுகளையும் பற்றி தெரிந்து கொள்ள நாம் நேரம் ஒதுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

      மன அழுத்தமானது நமது பணியிடத்திலும், அன்றாட வாழ்விலும் நமக்கு கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாம் பணியில் எதிர் கொள்ளும் சவாலோ, அல்லது உறவு நிலைகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளோ நம்மை கடுமையான மன அழுத்தத்திற்கு ஆட்படுத்தும் அபாயம் உண்டு.

      உலகளவில் ஏற்படும் நோய்களில் மன அழுத்தம்தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் பலரும் இதை ஒரு நோய் என்றே உணருவதில்லை. மன அழுத்தம் என்பது ஒரு தீவிரமான மனநோய். 

      நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது பதிமூன்று கோடி பேருக்கு இந்த தாக்கம் இருக்கிறது. தற்கொலை செய்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மனநோய் பாதிக்கப்பட்டவர்கள். பொதுவான புள்ளிவிபரங்களை பார்த்தால் ஏழை நாடுகளை விட பணக்கார நாடுகளில்தான் தற்கொலையும் அதிகம், மனநோயும் அதிகம். இந்தியாவை பொறுத்தவரை தற்கொலையும், மனஅழுத்த பாதிப்பும் அதிகம் இருந்த மாநிலம் கேரளா. இந்த பாதிப்பை வரிசைப்படுத்தும் போது கடந்த ஆண்டு வரை கேரளா முதலிடத்தில் இருந்தது. கடந்த ஆண்டுவரை 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது தற்கொலையிலும், மன அழுத்த பாதிப்பிலும் முதலிடத்தில் உள்ளது கவலைக்குரிய விஷயம்.

மன அழுத்தம் தவிர்க்க ஆலோசனைகள்:

* வாழ்க்கையில் பிரச்னைகளே வரக் கூடாது என்று எண்ணாதீர்கள். அது வரத்தான் செய்யும். பிரச்னையில்லாமல் வாழ்க்கை இல்லை. ஆகவே, அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றித் திட்டமிடுங்கள். 

* உங்களுக்கு ஒரு பிரச்னை வந்தால், அது உங்களுக்கானது மட்டும் அல்ல. அது உங்களைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை உணருங்கள். அதனால், உங்களுடைய  துயரங்கள் அனைத்தையும் நெருக்கமான நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள். 

* அலுவலகத்திலிருந்து வெளியே வந்துவிட்டால், நம்முடைய பிரச்னைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும். வீட்டுக்கு வந்தும், அலுவலக வேலைகளைத் தொடரக் கூடாது. கூடுமானவரை இதைத் தவிர்க்கவேண்டும். வீடு என்பது வாழ்வதற்குத்தான்! 

*வீட்டிலோ , பணி செய்யும் இடத்திலோ, நீங்கள் பாதுகாப்பாய் உணர்பவர்களுடன் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் சூழல் , உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பிரச்சினைகளை எளிதில் கையாளுபவர்களாக இருக்கட்டும்.

*எப்போதும் கேலி, கிண்டல், நகைச்சுவை இருக்குமிடத்தில் நீங்கள் இருந்தாலே போதும். தனிமையை நாடிச் செல்லாதீர்கள்

* தினசரி எட்டு மணி நேர உறக்கம் என்பது அவசியம். அப்போதுதான், அடுத்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளவும் வேலைகளில் கவனம் செலுத்தவும் முடியும். 

* நாம் சாப்பிடும் உணவு எப்படியிருக்கிறது.அந்த உணவுகளால் நம்முடைய மனநிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றியெல்லாம் மனநல மருத்துவர்கள் விவாதித்து வருகின்றனர். எனவே, உணவுப்பழக்கம் முக்கியமான ஒன்று. கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை அறவே தவிர்க்கலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியமானது. 

* வாழ்க்கையில், நாம் நினைக்கிற மாதிரிதான் எல்லோரும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அது சாத்தியமில்லை. எதிர்மறைக் குணங்கள் கொண்டவர்களிடம் பழக வேண்டிய சூழல் ஏற்படும். அவர்களைப் புரிந்துகொள்ளவும் ஏற்கவும் பழகவேண்டும். 

* ஆக்கப்பூர்வமான செயல்களுக்கான நேரத்துக்கு முக்கியத்துவம் தரவும். பொழுதுபோக்கு விஷயங்களுக்கு முன்னுரிமை தருவதைத் தவிர்க்கவேண்டும். நேர மேலாண்மையில் கவனம் செலுத்தலாம். வாழ்க்கைக்கு எது அவசியமானது என்பது பற்றி யோசிக்கலாம். விருப்பத்துக்கும் தேவைக்குமான வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு, அதன்படி செயல்படுவது நலம் தரும். தேவைகள் நிறைவேறிய பின்னரே, விருப்பத்தை நோக்கி நகரவேண்டும். 

* உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த இடத்தில் எப்படியான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றித் திட்டமிடலாம். நம்முடைய உணர்வுகள் பிறரைக் காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்வது மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். 

* தோல்விகள் என்பது பிரச்னையில்லை. ஆனால், அந்தத் தோல்விகளிலிருந்து, நீங்கள் எப்படி வெளியே வருகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதற்குரிய பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். 

     தற்காலிக மன அழுத்தம் என்பது அதுவாகவே சரியாகிவிடும். ஆனால், சில பிரச்னைகளால் சாப்பிட முடியாமல், தூங்கமுடியாமல் போனாலோ, வேலைகளில் பாதிப்பு ஏற்பட்டாலோ அது தீவிர மன அழுத்தம். இதற்கு, மனநல மருத்துவரைச் சந்தித்து, சிகிச்சை எடுத்துக்கொள்வதே சரியானது.

மகிழுங்கள், உங்களைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். 

1 நவம்பர், 2021

IDEI – International Day to End Impunity for Crimes against Journalist

 பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை விலக்களிப்பை தடை செய்யும் நாள் - நவம்பர் 2



       2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் நிறைவேற்றப்பட்ட 68-ஆவது தீர்மானத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாம் தேதி பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை விலக்களிப்பைத் தடை செய்யும் நாளாக (IDEI – International Day to End Impunity for Crimes against Journalist) அறிவிக்கப்பட்டுள்ளது.

      2006 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில், உலகம் முழுவதும் 1200 பத்திரிக்கையாளர்கள், மக்களுக்கு, செய்தி தந்ததற்காகக் கொல்லப்பட்டுள்ளனர். கொலையாளிகளில் 10 இல் 9 பேர், தண்டிக்காமல் விடப்படுகின்றனர். இது போன்ற வன்முறைகள் பத்திரிக்கையாளர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதோடு, சுதந்திரத்தையும் பறிக்கிறது.

       பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்களிக்கும் நடப்பு கலாச்சாரத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் எடுக்கும் வகையில் இத்தீர்மானம் உந்துதல் தரும்.

     2013, நவம்பர் 2-ஆம் தேதி மாலித் தீவில் இரு பிரெஞ்ச் பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக இத்தினம் தேர்வு செய்யப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.

     ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 2021 சர்வதேச தினம், கொலைகளை மட்டுமல்ல, ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்களையும் விசாரிப்பதிலும், விசாரணை செய்வதிலும், வழக்கு நடத்துவதிலும் உள்ள முக்கியப் பங்கையும் எடுத்துக்காட்டுகிறது.

இனிதே பள்ளி திரும்பும் இளந்தளிர்கள்.உளம் மகிழும் வரவேற்பு

        இன்று தொடங்கியது இனிய கல்விக்கூடம்

    2021 -2022 ஆம் கல்வியாண்டில், கண்ணம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, நீண்ட நாள்களுக்குப் பின் வருகை புரியும், மாணவ, மாணவியரை இன்முகத்துடன் வரவேற்று, தகுந்த அறிவுரைகள் கூறி, இனிப்புகள், எழுதுகோல் ஆகியவற்றை வழங்கி, வாழ்த்தினர். 

      பள்ளியின் முன்னாள் மாணவர் அறக்கட்டளையின் தலைவர் திரு. K.R ஈஸ்வரன், துணைத்தலைவர் திரு. துரைசாமி, முன்னாள் செயலர்.திரு. மெளனசாமி (மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர்), நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு.பாலதண்டாயுதம், திரு.வேலுச்சாமி (முத்து ஆட்டோ), திரு. சிவசுப்பிரமணியம், திரு.முத்துக்குமார், அறக்கட்டளையின் ஆயுட் சந்தாதாரர், திரு.மோகன்ராஜ் ஆகியோருக்குப் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.👍


பிரபலமான இடுகைகள்