1971-ம் ஆண்டு நடந்த இந்திய- பாகிஸ்தான் போரில், பாகிஸ்தான் இராணுவம், தனது 90 ஆயிரம் வீரர்களுடன் இந்தியாவிடம் சரணடைந்தது. இதையடுத்து கிழக்குப் பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதி ‘வங்காளதேசம்’ என்ற தனி நாடாக மாறியது. இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் ஆண்டுதோறும் டிசம்பர் 16 ஆம் நாள் ‘விஜய் திவாஸ்’(வெற்றி தினம்) அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளன்று, இந்தியாவின் தலைநகர் புது தில்லி இந்தியவாயிலில் (India Gate) உள்ள அமர் ஜவான் ஜோதியில், முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஞ்சலி செலுத்துவார். அதேபோல் பெங்களூரில் உள்ள தேசிய இராணுவ நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. குடிமக்கள், மாணவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோர் ஆண்டுதோறும் திசம்பர் 16 அன்று மலரஞ்சலி செலுத்தி வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்கின்றனர்.