28 டிசம்பர், 2021

ரத்தன் டாட்டா பிறந்த நாள்

  “உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்!" - ரத்தன் டாட்டா

       இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபாரக் குழுமத்தை, உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலகச் சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் நாவல் டாடா அவர்களின் பிறந்த நாள் இன்று.

       உலக அரங்கில், இந்தியாவின் தொழில் முகமாகப் பார்க்கப்படுபவர் ரத்தன் டாட்டா.சம்பாதித்த பணத்தில் 60 சதவிகிதத்தை மக்களுக்கான சமூகப்பணிகளுக்கு செலவிட்டு வருபவர் இவர். மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் ரத்தன் டாடா.   

     பிறப்பிலிருந்து தற்போது வரை தாய், தந்தையர் அன்பை தவிர அளவு கடந்த செல்வம், பெயர், புகழ் என அனைத்தும் அவருக்குக் கிடைத்தன. முறையாகப் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெற்றார். இன்றளவும், பல இந்தியர்களின் கனவு நிறுவனமாக இருக்கும் IBM நிறுவனத்தில் அன்றே இவருக்கு வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைக்கும் போது, தன்னிடம் 'ரெஸ்யூம்' என்ற ஒன்றே இல்லை என ஒரு நாள் மேடையில் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 

   இந்தியாவில்தான் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, தாய்நாட்டிற்கே திரும்பினார். தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் பணியிலமர்ந்தார் ரத்தன் டாடா. சொந்த நிறுவனமாய் இருந்தாலும் அடிப்படையான, சிறிய பொறுப்புகளையே செய்து வந்தார் அவர். அதனால் உழைப்பின் அருமையை அறிந்திருந்தார். 30 வருடங்கள், டாடா குழுமத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்குப் பங்காற்றிய ரத்தன் டாடா, 1991 இல் டாடா குழுமங்களின் தலைவராக, நிறுவனரும் அன்றைய தலைவருமான ஜே.ஆர்.டி டாடாவால் நியமிக்கப்பட்டார். 

     “எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் மிகப்பெரிதாய் அனைவரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்று கூறுவார். அப்படித்தான் மிகப்பெரிய அடிகளை உலக மார்க்கெட்டில் எடுத்து வைத்தது டாடா குழுமம். 

     உலகின் ஒவ்வொரு நாட்டிலும்,ஒவ்வொரு சந்தையிலும் தனக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்தார். இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என அனைத்துத் துறைகளிலும் அசுர வளர்ச்சி கண்டது இந்நிறுவனம். இவர் பொறுப்பேற்ற பின் டாடா குழுமம் கால் வைக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம். 

     ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது டாடா குழுமம். சொகுசுக் கார்களைத் தயாரிப்பதில் வல்லுநர்களான லேன்ட்ரோவர், ஜாக்குவார் ஆகிய கம்பெனிகளின் இந்திய உரிமையை 2008ல் வாங்கினார் டாடா. கோரஸ் என்ற உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனத்தை டாடா வாங்க, உலகின் முன்னனி இரும்பு உற்பத்தியாளராய் உருப்பெற்றது டாடா ஸ்டீல்ஸ்.

      உலகமயமாக்கலால் பல நிறுவனங்கள் இந்தியாவிற்குள் காலடியை எடுத்து வைக்க, உலகச் சந்தையில் சத்தமின்றி தன்னிகரற்ற ஒரு இடத்தைப் பெற்றது டாடா குழுமம். தற்போது இந்நிறுவனத்தின் வருவாயில் 65% வெளிநாடுகளிலிருந்துதான் ஈட்டப்படுகிறது.

      சாமானிய மனிதனும் நான்கு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று கருதினார். அதனால் உதித்ததுதான் ‘டாடா நானோ’ திட்டம். வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார்கள் வெளிவரும் என்று டாடா நிறுவனம் அறிவித்தபோது உலகமே கேலி செய்தது. தரம் குறைவாயிருக்கும், சிறு அடிபட்டாலும் கார் நொறுங்கிவிடும் எனப் பழித்தனர். இது நிச்சயம் சாத்தியமில்லை என்று அனைவரும் சொல்ல, அனைத்தையும் பொய்யாக்கி இந்திய சாலைகளில் நானோவை கம்பீரமாய் வலம்வர வைத்தது டாடா நிறுவனம். விலை முன்பு சொல்லப்பட்டதை விட சற்றுக் கூட இருந்தாலும் (1.25 லட்சம்) , உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையை தனதாக்கியது நானோ. உலகின் அனைத்து கார் கம்பெனிகளும் டாடாவிற்குத் தலை வணங்கின.

           "நீங்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை? " எனக்கேட்டதற்கு “4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேறாமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளன” என்று சிரித்துக்கொண்டே வெளிப்படையாகச் சொன்னார் டாடா. 

   உலகச் சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்ததிலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் டாடா குழுமத்தின் பங்கும், ரத்தன் டாடாவின் பங்கு அளப்பரியது.

     நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய், நாம் அணியும் நகையாய் ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்துள்ளது டாடா.  

   “என்னால் இறக்கை விரித்து பறக்க முடியாத நாளே, என் வாழ்க்கையின் சோகமான நாள்” என்பார் ரத்தன் டாடா.

 அவரது சிறகுகள் இன்னும் பல்லாண்டு காலம் பல இடங்களில் விரிந்து பறக்கட்டும்!

திருபாய் அம்பானி பிறந்தநாள்

  "உன் கனவுகளை, நீ நனவாக்கத் தவறினால், பிறர், அவர்களது கனவுகளை நிறைவேற்ற, உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்” 
                                                                                       - திருபாய் அம்பானி 

         50,000 ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டு, இன்று இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாய் உயர்ந்து நிற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் துவக்கி, மிகப்பெரும் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட திருபாய் அம்பானி பிறந்த தினம் டிசம்பர் 28.

         1932 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் சோர்வாத் நகரில் பிறந்தார் அம்பானி. நடுத்தரக் குடும்பம். இவரது கையில் செல்வம் புரளவில்லை. ஆனால் மனதில் நம்பிக்கையும், திறமையும் வற்றாத ஜீவநதி போல் ஊற்றெடுத்தது. தனது 16 வயதில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார் அம்பானி. இதனால் இவரது வலது கரம் செயலிழந்தது.

         இவர் என்றுமே இயலாமை என்ற வார்த்தையைப் பற்றி நினைத்தது இல்லை. தனது குறைகளைத் துச்சமாய் நினைத்து, வெற்றியை மட்டும் தனது இலக்காய் நிர்ணயித்துப் பயணித்தார். ஏமன் சென்ற அம்பானி, அங்கு பெட்ரோல் பங்கில் வேலை செய்தார். சிறிது காலம் கழித்து அப்பெட்ரோல் பங்கிலேயே நிர்வாகம் பார்க்கத் தொடங்கினார். பின்னர் இவர் 1958 இல் இந்தியா திரும்பி, சொந்தமாகத் தொழில் செய்யத் தொடங்கினார்.


        1958 இல் தனது நண்பர் சம்பக்லால் தமானியுடன் இணைந்து ‘மஜின்’ என்ற நிறுவனத்தைத் துவக்கினார் அம்பானி. 50,000 ரூபாய் முதலீட்டில் 350 சதுரடியில் தொடங்கப்பட்டது இந்நிறுவனம். 1966 இல் இவர் ரிலையன்ஸைத் தோற்றுவித்தார். டெக்ஸ்டைல் மூலம், சந்தையில் அடியெடுத்து வைத்த ரிலையன்ஸ் அதிபர், தனது அண்ணன் மகனான விமலின் நினைவாக ‘விமல்’ என்ற பெயரில் தங்களது பொருட்களைத் தயாரித்து வெளியிட்டார். கூடிய விரைவில் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் பெயரானது விமல். அதன்பிறகு பாலியஸ்டரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார்.

       லாபத்தை அதிகரிக்க, பாலியஸ்டரை, தானே தயாரிக்க நினைத்தார் அம்பானி. அதற்கான கனரக இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து பாலியஸ்டர் தொழிற்சாலையை உருவாக்கினார். உலக வங்கியிலிருந்து அத்தொழிற்சாலையை பார்க்க வந்த வல்லுநர்கள், 'வெறும் 14 மாதங்களில் இவர்கள் இத்தொழிற்சாலையை அமைத்த விதம் அபாரமானது. உலகத்தரத்தில் இத்தொழிற்சாலை அமைந்துள்ளது' என்று சான்றளித்தனர். இதுதான் அம்பானியின் தொலைநோக்குப் பார்வை.


        1986 இல் இவர் நடத்திய பங்குதாரர்கள் மாநாட்டிற்கு, உலகமே வியக்கும் வகையில் சுமார் 30,000 பங்குதாரர்கள் பங்கேற்று பிரமிக்க வைத்தனர். பாலியஸ்டர் உற்பத்தியில் இவர் எடுத்த முயற்சிகள் பெரும் லாபத்தை ஈட்டியது. இதனால் ‘பாலியஸ்டர் பிரின்ஸ்’ என்று அழைக்கப்பட்டார்.

      1990 களுக்குப் பிறகு ரிலையன்ஸ் கண்டதோ அசுர வளர்ச்சி. டெக்ஸ்டைல் மட்டுமல்லாது பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என ஒவ்வொரு துறையிலும் கால்பதித்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

       கால்பதித்த ஒவ்வொரு துறையிலும் விருட்சமடைந்து இன்று உலகின் மிகப்பெரிய சக்தியாய் நிற்கிறது ரிலையன்ஸ். உலக வணிக சந்தையில் ஒரு பெரும் இடம்பிடித்த ரிலையன்ஸை தனது அறிவு, திறமையால் செதுக்கிய திருபாய் அம்பானி, மூளை பாதிப்பால், மீண்டும் வலிப்பு ஏற்பட்டு தனது 69 ஆவது வயதில் 2002-ம் ஆண்டு ஜூலை 6 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

      இன்று அவரது கனவுகளை நனவாக்கும் முயற்சியில், அவரது மகன்களான,முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் ஈடுபட்டு, நம் நாட்டின் பெருமையை, உலக அளவில் நிலைநாட்டி வருகின்றனர்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...