17 ஜனவரி, 2022

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்

 


    இலங்கையில் தேயிலை உள்ளிட்ட பிற தோட்டங்கள் நிறைந்த கண்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கோபால மேனன், தாய் மருதூர் சத்யபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார் எம்ஜிஆர்.

    இவரது மூத்த சகோதரர் பெயர் எம்.ஜி. சக்ரபாணி. எம்.ஜி.ஆர் பிறந்த இரண்டரை ஆண்டுகளிலேயே தந்தை கோபால மேனன் இறந்து விட, தாயார் சத்யபாமா பூர்விகமான கேரளத்தின் பாலக்காடுக்கு திரும்ப முடிவெடுத்தார்.

    ஆனால், உறவினர்களின் ஆதரவு கிடைக்காததால் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வேலு நாயரின் வீட்டில் தமது இரண்டு பிள்ளைகளுடன் அடைக்கலமானார் சத்யபாமா. அங்கு வீட்டு வேலை செய்து தனது இரு பிள்ளைகளை சத்யபாமா காப்பாற்றினார்.

    பதினான்கு வயதில் நடிப்புத்துறைக்குள் நுழைந்த எம்ஜிஆருக்கு ஆரம்ப காலத்தில் கைகொடுத்தது மேடை நாடகமும் நாடகக் கலைஞர்களும்தான். பதின்ம வயதில் தனது சகோதரர் எம்.ஜி. சக்ரபாணியுடன் பாய்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேர்ந்தார் எம்ஜிஆர். அங்கு கிடைத்த சிறு, சிறு வேடங்களில் நடித்தாலும் எம்ஜிஆரின் கனவு வெள்ளித்திரை மீதே இருந்தது.

    அந்தக் காலத்தில் நடிப்புத் துறைக்குள் நுழைவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அதுவும் கதாநாயகனாக வேண்டுமானால், அவருக்கு இயல்பாகவே ஆடலும், பாடலும், வார்த்தை சுத்தமாக தமிழ் பேசவும் சரியான உச்சரிப்பும் தெரிந்திருப்பது கட்டாயம்.

    இந்த நேரத்தில் எம்ஜிஆர் மற்றும் அவரது சகோதரரை மேடை நாடகங்களில் பங்கேற்கச் செய்ய ரங்கூனுக்கு அனுப்பி வைத்தார் கந்தசாமி முதலியார். அவர்தான் எம்ஜிஆரின் திரை வாழ்க்கைக்கான ஆதர்ச வழிகாட்டி என பின்னொரு நாளில் எம்ஜிஆரே குறிப்பிட்டார். ரங்கூனில் ஆண் வேடம் மட்டுமின்றி பெண் வேடத்திலும் எம்ஜிஆர் நடித்தார்.


    14 வயதில் மேடை நாடகங்களில் தோன்றிய எம்.ஜி.ஆருக்கு வெள்ளித்திரை செட்டுக்குள் நுழைய ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டன. 1936ஆம் ஆண்டில் தனது 20ஆவது வயதில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் சதி லீலாவதி என்ற படத்தில் ஓர் ஊழல் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார் எம்ஜிஆர்.


    அதன் பிறகு சிறு, சிறு வேடங்கள் அவருக்கு கிடைத்தாலும், எல்லா திரை நாயக, நாயகிகளுக்கும் ஏற்படுவது போன்ற திருப்புமுனை, எம்ஜிஆருக்கு 1950ஆம் ஆண்டில் நடந்தேறியது. அப்போது வரலாறறுக்காவியமான மந்திரி குமாரி என்ற படத்தில் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் நடித்த எம்ஜிஆரின் கதாபாத்திரம், அவரை ஏழை, எளியவர்களின் நாயகனாக உலகுக்கு அடையாளப்படுத்தியது வெள்ளித்திரை.

    1936ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டுவரை அவர் இறப்புக்குப் பிறகு வெளியான இரண்டு படங்கள் உட்பட எம்ஜிஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை 136. அவற்றில் 132 படங்கள் தமிழிலும், இரண்டு படங்கள் மலையாள மொழியிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தலா ஒரு படமும் அடங்கும்.

    அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1953ஆம் ஆண்டில் தன்னை எம்ஜிஆர் இணைத்துக் கொண்டார். தேசிய அரசியலில் இருந்து திராவிட அரசியலுக்கு எம்ஜிஆர் வருவதற்கு உரமாக இருந்தவர் மறைந்த தமிழக முதல்வர்
மு. கருணாநிதி.

    எம்ஜிஆருக்கு, பல விஷயங்கள் அவரை முதன்மையானவராக உலகுக்கு அடையாளப்படுத்தியது. அது இந்திய அரசியல் வரலாற்றில் மாநிலத்தின் முதல்வராக முதலாவதாக பதவிக்கு வந்த நடிகர் என்பது. அதுபோல, இந்தியத் திரைப்பட வரலாற்றில், குறிப்பாக, தென்னிந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதை பெற்ற முதலாவது நடிகராக அவர் அறியப்பட்டார். 1972 ஆம் ஆண்டில் ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு அந்த விருது கிடைத்தது.


    திரையில் முதல் படத்தில் தனக்குக் கிடைத்த புகழ், சாமானிய மக்களுடனான பிணைப்பை அதிகரிக்க வேண்டும் என விரும்பிய எம்ஜிஆர், திரை வாழ்க்கையுடன் சேர்த்து அரசியல் வாழ்க்கையையும் தேர்வு செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட எம்ஜிஆர், கதர் ஆடை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

    1962 இல் தனது 50ஆவது வயதில் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1967 இல் எம்எல்ஏ ஆகவும் இருந்தார் எம்ஜிஆர்.1977இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக, மிகப்பெரிய பலத்துடன் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.


    1977 முதல் 1987 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.


    முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை எளியோர் நலம் பெறுகின்ற வகையில், நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபையால் போற்றப்பட்ட சத்துணவுத்திட்டம், தமிழ் மீது கொண்டிருந்த மாறாதப் பற்றின் காரணமாக அவர் நடத்திய 5 ஆம் உலகத்தமிழ் மாநாடு, 1981ஆம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம், பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசச் சீருடை, காலணி மற்றும் பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவச வேட்டி சேலை வழங்கிடும் திட்டம், சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி ஆகிய குறிப்பிடத்தக்கவை. 


    அரசியலில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், தன் வாழ்நாளின் இறுதிவரையில் கலைஞர் கருணாநிதி உடனான உயர்ந்த, உன்னதமான நட்பினை என்றும் போற்றி வந்தவர். 

    பகுத்தறிவுக்குப் புறம்பான மந்திரக் காட்சிகளிலும் எம்.ஜி.ஆர் நடிக்கத் தயங்கினார். அதைப் பற்றி கேள்விகேட்ட போது, ’படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் சினிமாப் பார்க்கிறார்கள். அவர்கள் நான் படத்தில் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். அவர்களிடம் மந்திரத்தில் மாங்காய் விழும் என்பது போல நான் நடித்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அல்லவா? நடிகன் என்ற முறையில் எனக்கு ஒரு சமூகப் பொறுப்பு இருக்கிறது. அதைக் காக்க நினைக்கிறேன்’ என்று சொன்னார், எம்.ஜி.ஆர்!

    எம்.ஜி.ஆர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். மருதமலை முருகன் ஆலயத்திலும், மூகாம்பிகை ஆலயத்திலும் அவர் பாதம் பட்டிருக்கிறது. ஆனாலும், அவர் பக்திப்படங்களில் நடித்ததில்லை. இதைக் கேட்டபோது, ‘எங்கு பார்த்தாலும் கோயில்கள். இத்தனைக் கோயில்களை வைத்து வளர்க்கமுடியாத பக்தியை, சினிமாப் படங்களா வளர்த்துவிடப்போகிறது? என்னைப் பொறுத்தவரை தாயிடம் அன்பு, ஆசானிடம் பயபக்தி, நண்பனிடம் பாசம், ஏழையிடம் இரக்கம். இந்தப் பண்புகளே மனதை தூய்மையாக்கும். மனத்தூய்மையே பக்தி…’ என்று சொன்னார், எம்.ஜி.ஆர். 


    எம்.ஜி,ஆரின் மொத்த வாழ்க்கையையே நாடோடி மன்னன் என்ற வார்த்தையில் அடக்கிவிடலாம். ஜூபிடர் பிக்சர்ஸூக்கு வந்து தரையில் படுத்துறங்கி திரையில் கதாநாயகனாகும் வரை அவர் நாடோடி. அப்புறம், திரைவானில் கொடிகட்டிப் பறந்து, அரசியலில் நுழைந்து சாதித்து கண்மூடியபோது, அவர் மன்னன்!




Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...