8 டிசம்பர், 2021

SAARC அமைப்பு தினம்

 

        தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் என்றழைக்கப்படும் அமைப்பு உருவாக்கப்பட்ட தினம் இன்று. 

     SAARC (South Asian Association for Regional Cooperation)  இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூட்டான் ஆகிய, ஏழு நாடுகள் இணைந்து, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு என்ற, 'சார்க்' அமைப்பை,  1985 டிசம்பர் 8இல் துவக்கின.1983 இல் டெல்லியில் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த இறுதிமுடிவு எடுக்கப்பட்டது. 

       சார்க் அமைப்பானது தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி , ஒத்துழைப்பு , வர்த்தகம் , முதலீடுகள், சமூக வளர்ச்சி , நட்புறவுடன் கூடிய தலையீட்டின் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றுதல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு என்பனவற்றினைக் குறிக்கோளாகக் கொண்டு, கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும்.

       தெற்காசிய நாடுகளிடையேயான ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் 1940-களிலேயே தொடங்கிவிட்டது. ஏப்ரல் 1947-ல், டெல்லியில் நடந்த ஆசிய நாடுகளுக்கிடையேயான உறவு தொடர்பான மாநாடு, 1950 இல் பிலிப்பைன்ஸில் நடந்த பாகியோ மாநாடு, 1954 இல் இலங்கையில் நடந்த கொழும்பு அதிகாரங்கள் மாநாடு ஆகிய மாநாடுகளில் இதற்கான யோசனைகள் விவாதிக்கப்பட்டன.

      1970 களின் இறுதியில் ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தின. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூட்டாகச் செயல்படுவது உள்ளிட்ட யோசனைகளை, அந்த நாடுகள் முன்வைத்தன. 1981 இல் இலங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட 6 நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு இதுபற்றி விவாதித்தார்கள்.

      தொடக்கத்தில் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற இந்தியாவும் பாகிஸ்தானும் தயக்கம் காட்டின. தெற்காசியாவில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து தனக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் என்று இந்தியாவுக்குச் சந்தேகம் இருந்தது.

      அதேபோல், இந்த நாடுகளில் இந்தியத் தயாரிப்புகளின் வர்த்தகம் பரவுவதன் மூலம், தனக்கு பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் பாகிஸ்தானிடம் இருந்தது. எனினும், தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்கள், நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

      சீனா, ஈரான் நாடுகள், இந்த அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்தன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட, ஒன்பது நாடுகள், 'சார்க்' அமைப்பின் பார்வையாளர்களாக உள்ளன.  

     துவக்கத்தில், ஆண்டுதோறும் நடந்த, 'சார்க்' கூட்டம்,  அதன் பின், இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. 

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece