31 டிசம்பர், 2021

இந்திய தேசியக்கொடி முதன்முதலில் ஏற்றப்பட்ட நாள்

 'முப்பது கோடி முகமுடையாள் - உயிர்
மொய்ம்புற ஒன்று டையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில்
சிந்தனை ஒன்று டையாள்' 


    இன்றைய டிசம்பர் 31-ம் தேதிக்கு, இந்திய  விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. அப்படியே தெரிந்திருந்தாலும் அவர்கள் அதை அநேகமாக மறந்துபோயிருப்பார்கள்.
 

       இந்தியா விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு இருப்பது போன்ற முக்கியத்துவம் டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் உண்டு. உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்ந்த அந்த நாளை, வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை தினமாகவே கருதுவார்கள்.

         
1929 டிசம்பர் 31-ம் தேதி லாகூர் ராவி நதிக்கரையில் பெரும்திரளாகக்கூடிய தொண்டர் கூட்டத்துக்கு நடுவில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த பண்டித ஜவாஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றிய நிகழ்வு மறந்து விடக்கூடியதா என்ன? அதற்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்களின் நீட்சியாகத்தான் 1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை நாம் பார்க்க வேண்டும்.

      1927-இல் இந்திய அரசியல் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் பிரிட்டிஷ் காலனிய அரசு ஜான் சைமன் குழுவை அமைத்தது. அந்த சைமன் குழுவுக்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் பெரும் திரளாக எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தப் போராட்டத்தின்போது லாலா லஜபதி ராய் மீது போலீஸ் தடியடி நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தது மக்களின் ஆத்திரத்தை மேலும் அதிகரித்தது. 

     இர்வின் பிரபு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவதாக அறிவித்தார். அதை இந்தியத் தலைவர்கள் பலர் வரவேற்றனர். ஆனால் பிரிட்டனில் அதற்கு எதிர்ப்பு அதிகரித்ததால் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. 

       இதற்கிடையில்  'முழுமையான சுதந்திரம்' என்கிற அறைகூவலை பகத் சிங் விடுத்திருந்தார். பண்டித நேருவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸூம் அதை ஆதரித்தனர். லாகூரில் கூட இருந்த காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுதந்திரம் கோரிக்கையை நிறைவேற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது.  

      அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு லாகூர் நகரம் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது லாகூரிலுள்ள பார்ஸ்டல் சிறையில்  பகத் சிங், ராஜ குரு, சுக தேவ் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். லாலா லஜபதி ராயை தாக்கியதற்கு பழிவாங்கும் நோக்கில் நடத்திய கொலைக்காக அவர்கள் மரண தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். 1929 டிசம்பர் மாதம் அதே பார்ஸ்டல் சிறையில் இன்னும் பல விடுதலைப் போராளிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். 

     சிறையில் இருந்த விடுதலைப் போராளிகள் லாகூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கும் பரிபூரண சுதந்திரம் தீர்மானத்தால் உற்சாகம் அடைந்திருந்தனர்.  கடுமையான தடையுத்தரவுகளையும் மீறி லாகூர் நகரம் காங்கிரஸ் மாநாட்டுக்காகவும், அதில் நிறைவேற்றப்பட இருக்கும் பூர்ண ஸ்வராஜ் தீர்மானத்தை ஆதரித்தும் மகிழ்ச்சியில் திளைத்திருந்ததாக பல வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 

       டிசம்பர் 30 நள்ளிரவில், ராவி நதிக்கரையில் ஜவாஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றுவதாக இருக்கிறார் என்கிற செய்தியும், அங்கிருந்தபடி பூர்ண ஸ்சுவராஜ் கோஷத்தை அவர் முன்வைப்பார் என்கிற தகவலும் பார்ஸ்டல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் போராட்ட போராளிகளை எட்டியதும் அவர்கள் ஒரு முடிவெடுத்தனர். தண்டனைக் கைதி ஒருவர் மூலம் பகத் சிங்கிடம் தொடர்பு கொண்டார் ஒரு போராளி. 

    அன்று நள்ளிரவில் ஜவாஹர்லால் நேரு ராவி நதிக்கரையில் மூவர்ணக் கொடியை ஏற்றும்போது பார்ஸ்டல் சிறைச்சாலையில் உள்ள விடுதலைப் போராளிகள் அனைவரும் அதை வரவேற்றுக் கொண்டாட வேண்டும் என்கிற அந்தக் கோரிக்கையை பகத் சிங்கும் வரவேற்றார். சிறைச்சாலையில் இருந்த போராளிகள் அனைவருக்கும் தகவல் பரவியது. 

     நள்ளிரவு 12 மணி, ராவி நதிக்கரையில் பெருந்திரளான மக்கள் கூட்டத்துக்கு நடுவே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்த ஜவாஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அதே நேரத்தில் பார்ஸ்டல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த அத்தனை விடுதலைப் போராளிகளும் ஒரே குரலில் "வந்தே மாதரம், வந்தே மாதரம்' என்று முழங்கத் தொடங்கினர். அங்கிருந்த காவலர்கள் அவர்களை அமைதியாக இருக்கும்படி கெஞ்சிப் பார்த்தும் விண்ணைப் பிளக்கும் அந்த கோஷம் அடுத்த அரை மணி நேரத்துக்கு ஒலித்தது.

      ஆச்சரியம் அதுவல்ல. லாகூர் பார்ஸ்டல் சிறைச்சாலையைப் போலவே, மேற்கு வங்கத்து அலிப்பூர் சிறைச்சாலையிலும்,  இந்தியாவின் தென்கோடியிலுள்ள கண்ணனூர் சிறையிலும், ஏனைய பல சிறைகளிலும் 1929 டிசம்பர் 31 ஆம் தேதி அதேபோல வந்தேமாதரம் கோஷம் எழுப்பப்பட்டதே, எப்படி? யார் சொல்லி அவர்களுக்குத் தகவல் போனது?

      இப்போதுபோல தகவல் தொடர்புகள் இல்லாத, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட அந்த காலத்தில் விடுதலை வேட்கையும் தேசிய உணர்வும் அவர்களை இணைத்திருக்க வேண்டும்.

நன்றி : தினமணி, 31.12.2021 தலையங்கம்

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...