உலக கருணை தினம் (World Kindness Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 13-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
லூயிஸ் பர்பிட் - டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனித நேயர்கள்தான் முதன்முதலாக,1998-ம் ஆண்டு கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர்.அதன்பின் பல நாடுகள் கருணை தினத்தைக் கடைப்பிடிக்கின்றன. இந்த அமைப்பு மதம், அரசியல் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு விளங்குகிறது.
கருணை என்பது, அனைவரிடமும் அன்பு செலுத்துவது, எவ்விதப் பேதமுமின்றி சமரசமாக இருப்பதே கருணையின் வெளிப்பாடு. ஒவ்வொருவரும் சக மனிதனைச் சமமாகவும், கருணையோடும் அணுகவேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.
நன்மைகள்
கருணையை வெளிப்படுத்துவதால், நம் உடலில் ஆக்ஸிட்டோஸின் அளவை அதிகரிக்கிறது. இது இதயத்துக்கு மிகவும் நல்லது.
கருணையால் எண்டர்ஃபின்ஸும் (endorphins) சுரக்கும். இது இயற்கையான வலி நிவாரணியாக உடலில் செயல்படுகிறது!
கருணைச் செயல்பாடுகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடியது என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள்.
புன்னகையுடன் ஒருவரைப் பார்த்து ’நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று அக்கறையுடன் கேட்டால், அதுகூட ஒருவரின் மனநிலையை நேர்மறையானதாக மாற்றும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
`தி ராபிட் எஃபக்ட் (The Rabbit Effect)`, என்ற புத்தகத்தின் ஆசிரியர் கெலி ஹார்டிங், "கருணையாக இருப்பது நமது நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பிற்கு நல்லது. அது ஒருவரின் ஆயுளைக் கூட்டும், இதை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டாம். இது எளிமையான ஒன்று," என்று கூறுகிறார்.
நீங்கள் கருணையுடன் நடந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?
1. ஒருவர் சொல்வதை உண்மையாக காது கொடுத்து கேளுங்கள். அவர்கள் பேசி முடிப்பதற்கு முன்னரே உங்கள் மூளையில் பதில்களை யோசித்து வைக்காதீர்கள்.
2. உங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடமும் கருணையாக இருங்கள். ஒருவர் உங்களிடம் கடுமையான ஏதேனும் பேசினால், `என்னவாயிற்று, உங்கள் நாள் சரியாக அமையவில்லையா?` என்று கேளுங்கள் நிலைமை அப்படியே மாறிவிடும்.
3. பிறரால் பெரிதும் கவனிக்கப்படாதவர்களை, நீங்கள் கவனியுங்கள். அவர்கள் மீதும் அக்கறை காட்டுங்கள்.
4.நீங்கள் ஏதேனும் கோபப்படும்படியான விஷயம் நடந்தால், ஒரு பெரும் மூச்சை இழுத்துவிட்டுச் சில நிமிடங்கள் பொறுமையாக யோசியுங்கள்.
பிறருக்கு, அவர்கள் மனம் மகிழும் வண்ணம்,பொருள் இல்லாவிட்டாலும் ,நல்ல சொற்களையாவது கொடுத்து உதவுவோம். மற்றவர்களின் மனக்காயத்திற்கு கருணை மருந்து கொடுத்துக் காப்போம்.👍