28 ஜனவரி, 2022

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் பிறந்த நாள்

     இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னோடியும், பஞ்சாப் சிங்கம் (பஞ்சாப் கேசரி)  என்றழைக்கப்படுவருமான, லாலா லஜபதி ராய் பிறந்த தினம் இன்று (ஜனவரி 28)

    லாலா லஜபதி ராய் ஓர் எழுத்தாளரும், அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். 

லால் - பால் -பால்

    லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.

    இவர் 1888 ஆம் ஆண்டில் இந்திய தேசியக் காங்கிரசில் சேர்ந்தார். ராய், சட்டம் பயின்றவரான லஜபதி ராய் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். 1905 ஆம் ஆண்டின் வங்காளப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியதுடன், விடுதலைக்காகப் போராடும் பாதையில் அவரை உறுதியாக நிற்கவும் வைத்தது. 

    ஆங்கிலேய அரசின் அடக்கு முறைகள், மக்கள் மத்தியில் தேசிய எழுச்சியையும், தன்மான உணர்வையும் தூண்டுவதில் அவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்தது. லாலா உள்ளிட்ட முன் குறிப்பிட்ட மூவரும்,ஆங்கிலேயர்களிடமிருந்து ஓரளவு தன்னாட்சியைக் கோரினர். இது அக்காலத்தில் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. முழுமையான அரசியல் விடுதலையை முதன் முதலில் கோரியவர்களும் இவர்களே.

    பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக, பிரிட்டிஷ் அரசு இவரைப் பர்மாவுக்கு நாடு கடத்தியது. அரசுக்கு எதிராகச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாததால், தாய்நாடு திரும்ப அனுமதித்தது. 

    1920 இல் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். 1928 அக்டோபர் 30 அன்று, சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வருகை தந்தபோது, எதிர்த்து, அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுத்தார். எனினும் பிரிட்டிஷ் அரசு கடுமையாகத் தாக்கியதை அடுத்து, சில தினங்களிலேயே உயிரிழந்தார்.

இராஜா ராமண்ணா பிறந்தநாள்

    இராஜா இராமண்ணா, இந்திய அணுஆற்றல் துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞர். இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர். இந்திய அணுக்கரு உலையின் தந்தை எனப் போற்றப்படுபவர்.

    இராஜா ராமண்ணா,ஓர் எழுச்சியூட்டும் தலைவராகவும் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விளங்கியவர். இசைக்கலைஞர், சமஸ்கிருத இலக்கியம் மற்றும் தத்துவங்களில் மேதையாக விளங்கிய பன்முகத்தன்மை கொண்ட ஒரு முழுமையான மனிதர் எனப்போற்றப்படுபவர். 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Budhdha) என்ற மறைமுகச் சொல்லைப் பயன்படுத்தி முதல் அமைதியான ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்.

    1925 ஜனவரி 28 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் பிறந்தார். தந்தையார் பெயர் பி. ராமண்ணா.இவர் நீதியரசராகப் பணியாற்றி வந்தார். தாயார் ருக்மணியம்மா. இவர் நல்ல அறிவாளியாகவும், கவிதை இயற்றுதல், மின்கருவிகளைப் பழுது பார்த்தல் ஆகியவற்றில் திறம் பெற்றவராகவும் இருந்தார். இராமண்ணாவின் வாழ்க்கையில் பெற்றோருக்கு அடுத்து இவரை ஈர்த்தவர், இவருடைய தாயின் சகோதரி இராஜம்மா ஆவார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அவர் கதைகள் புராணக் கதைகள், காப்பியக் கதைகள் ஆகியவற்றை இராமண்ணாவுக்குச் சொல்லி அவரின் அறிவு வளர்ச்சிக்கும் வழிகோலினார். இராமண்ணாவின் பெயரிலுள்ள இராஜா என்பது இராஜம்மா என்ற பெயரின் பகுதியாகும்.

    இராமண்ணா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே இந்திய அணுவியலறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா மீது மதிப்பு கொண்டிருந்தார். 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் விளைவாக இந்தியாவில் தங்கியிருந்த திரித்துவ இசைக்கல்லூரியின் தேர்வாளர் முனைவர் ஆல்பிரெட் மிஸ்டோவ்ஸ்கி என்பவர் மூலம் பாபாவைச் சந்திக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. 

TIFR-Tata Institute of Fundamental Research

    மற்றொரு முறை பாபா லண்டன் சென்றிருந்த போது அங்கு கல்வி பயின்றுகொண்டிருந்த இராமண்ணா அவரை மீண்டும் சந்தித்தார். அப்போது பாபா இந்திய அணு ஆற்றல் நிகழ்வுகளுக்குத் தொட்டிலாய் விளங்கிய அடிப்படை ஆய்வுக்கான டாடா பயிற்சி நிறுவனத்தில் (TIFR-Tata Institute of Fundamental Research) சேர்ந்து பணியாற்ற இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார்.1949, டிசம்பர் 1 இல் இராமண்ணா அப்பணியில் அமர்ந்தார்.

    இங்கு அணுக்கருப் பிளவு மற்றும்ம் சிதறல் பற்றிய ஆய்வுகளை இவர் மேற்கொண்டார். இவர் சேரும்போது இந்நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆகியிருந்தது. அப்பொழுது பாபாவின் காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகள் உலகப் புகழ் பெற்றிருந்தன. பாபாவின் தூண்டுதலால் தொடங்கப்பட்ட அணுக்கரு ஆய்வுக்குழு குறிப்பிடதக்க வகையில் பணியாற்றிய பெருமையுடையதாகும். தொழில்நுட்ப நடவடிக்கைகளும், அணுஆற்றல் திட்டங்களும் இந்தியாவில் தழைத்தோங்கி வளர இக்குழு மிகவும் கடுமையாக உழைத்தது. 

இந்தியாவின் முதல் அணுக்கரு உலை - அப்சரா
    நியூட்ரான், அணுக்கரு, அணுக்கரு உலை இயற்பியல் ஆகிய துறைகளில் இராமண்ணாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. பாபா அணு ஆய்வு மையத்தில் ஹோமி பாபாவின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுகளின் போது இராமண்ணா ஓரு இளைய ஆய்வாளராகப் பணியாற்றினார். 1956 ஆம் ஆண்டு ஆகஸ் 4 ஆம் நாள் முதல் அணுக்கரு உலையான 'அப்சரா' இக்குழுவினரால் உருவாக்கப்பட்டது. இதில் நியூட்ரான் பற்றிய ஆய்வுகளை இராமண்ணாவும், கோட்பாட்டு இயற்பியலில் கே. எஸ். சிங்வியும், மின்னணுத் துறையில் கருவிகள் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவற்றில் ஏ. எஸ். ராவும் பங்களித்தனர். அணுக்கரு உலையில் அமைக்கப்படும் எரிபொருளுக்கான துளைகள் அமைப்பு உருவாக்கத்திற்கு எந்திரப் பொறியாளர் வி. டி. கிருஷ்ணன் என்பர் பொறுப்பேற்றார்.

    இராமண்ணா துடிப்புமிக்க நியூட்ரான் மூலத்தைப் பயன்படுத்தி நீர் மற்றும் பெரிலியம் ஆக்சைடில் அதன் வேகத்தைப் மட்டுப்படுத்தி நியூட்ரான் விரலைத் திர்மானித்தார். நியூட்ரான் வெப்பமேற்றலை நவீன முறைகளில் பல்வேறு ஆய்வுகள் மூலம் மேற்கொண்டார். அவ்வாறு செயல்படும்போது உருவாகும் நியூட்ரான் நிறமாலை பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் கிடைத்த வெப்ப நியூட்ரான்கள் கற்றை, அடிப்படை ஆய்வுகளுக்கு உதவியது. யுரேனியம்-235 இல் அணுக்கருப்பிளவினால் உருவாகும் துணைக்கதிர்வீச்சுகளைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றின் ஆற்றல் மற்றும் கோணங்கள் ஆகியவற்றை அளந்தார். இந்த அளவீடுகள், இக்கதிர்கள். நியூட்ரான்களின் வெளிப்பாடு, பிளவுத்துகள்களின் சராசரி சுழற்சி போன்றவற்றைப் பற்றிப் பல தகவல்களை அறிய உதவின. வெப்ப மற்றும் வேக நியூட்ரான்களினால் தூண்டப்பட்ட அணுக்கருப் பிளவில் வெளிவரும் மின்னேற்றம்,பற்றிய முக்கியத் தகவல்களை அறிய உதவின.



    அணுக்கரு ஆய்வுகளில் ஈடுபட்ட இராமண்ணா, இந்த ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட பல இளம் அறிவியலறிஞர்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டினார். அதற்காக 1975 இல் இவர் தலைமையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பயிற்சிப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது, இவர் எடுத்த முதல் முக்கியமான முயற்சியாகும். இங்கு பல அறிவியல் அறிஞர்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள் அணு ஆற்றல் மற்றும் விண்வெளி ஆய்வு மையங்கள், பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர், பல்வேறு ஆய்வகங்களின் இயக்குநர்கள், இந்திய அரசாங்கத்தின் அறிவியல் துறைச் செயலர்கள் என்று இந்திய நாட்டிற்குள் பல்வேறு வகைகளில் பணியாற்றி வந்துள்ளனர்.

    1972 முதல் 1978 வரை இந்தியத் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும், 1977-78 களில் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராகவும், அனைத்துலக அணுஆற்றல் நிறுவனத்தில் பொது இயக்குநருக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும், 1986 இல் அதன் முப்பதாவது பொது மாநாட்டின் தலைவராகவும் செயல்பட்டார். 1977-79 இல் இந்திய அறிவியல் கழகத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டார். பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் பொது இயக்குநராகவும் பணியாற்றினார். மும்பை பாபா அணுசக்சி ஆய்வு மையத்தின் இயக்குநராக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார்.

    முதல் ஆறாண்டுகளை இராமண்ணாவின் அணுக்கரு விஞ்ஞானச் சாதனைகளின் பொற்காலம் என்று கூறலாம்! அப்போதுதான் குறிமொழிப் பெயர் பூண்ட 'சிரிக்கும் புத்தர்’ என்னும் முதல் அணுகுண்டு, ரகசிய அணு ஆயுதத் திட்டம் அவரது நேரடிக் கண்காணிப்பில் உருவானது. 1974 மே மாதம் 18 ஆம் தேதி இராஜஸ்தானிலுள்ள பொக்ரான் பாலைவனத்தில் நிலத்தடி குண்டு வெடிப்பை இந்தியா நிகழ்த்தி உலக நாடுகளை பேரதிர்ச்சியிலும், பெரு வியப்பிலும் ஆழ்த்தியது. டாக்டர் ஹோமி ஜெ. பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் ஹோமி என். சேத்னா ஆகியோருக்குப் பின்பு அதிபராக, அணுசக்திப் பேரவைக்கு, (Atomic Energy Commission) டாக்டர் ராஜா ராமண்ணா 1983 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்காண்டுகள் பணியாற்றினார்.

    1990 இல் வி. பி. சிங் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.1997-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பணிபுரிந்தார். பெங்களூருவில் உள்ள முன்னேறிய படிப்புகளுக்கான பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் செயல்பட்டார். ஜவஹர்லால் நேரு முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம் [Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research], இந்திய விஞ்ஞானப் பள்ளித் துறை [Indian Academy of Sciences ], மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம் [Indian Institute of Technology, Bombay] ஆகியவற்றின் தலைவராகவும் இராமண்ணா பணியாற்றினார்.

    இவருடைய பணிகளைப் பாராட்டி

1963இல் சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது

1968 இல் குடியரசுத் தலைவரின் பத்மஸ்ரீ விருது

1973இல் பத்ம விபூஷண் விருது

1984 இல் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் மேக்நாத் சாகா பதக்கம்

1985 இல் ஓம்பிரகாஷ் பாசின் விருது

1985-86 இல் ஆர். டி. பிர்லா நினைவு விருது

1996 இல் அசுதோஷ் முகர்ஜி தங்கப்பதக்கம்

ஆகியவை வழங்கப்பட்டன. பல்வேறு பல்கலைக் கழகங்கள் இவரைச் சிறப்பிக்கும் வகையில் மதிப்பியல் முனைவர் பட்டம் வழங்கின.

    இராமண்ணா 2004 செப்டம்பர் மாதம் 24 ஆம் நாள் மும்பையில்  காலமானார்.


Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...