17 டிசம்பர், 2021

ஓய்வூதியர் நாள்

     


      ஓய்வூதியம் என்பது அரசு துறையில் பணி நிறைவு பெற்ற ஊழியர்களுக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் தொகை. அரசு ஊழியர், அரசு மற்றும் உதவிபெறும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஊழியர்கள், உள்ளாட்சி நிறுவன ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வயது முதிர்வின் காரணமாக ஓய்வு/விருப்ப ஓய்வு பெற்று எஞ்சிய வாழ்க்கையில் பொருளாதார நிலையை ஈடுகட்டும் வகையில் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. 

   தனது இளமைக் காலம் தொடங்கி 58 அல்லது 60 வயது வரை அரசுக்கும், மக்களுக்கும் சேவை உணர்வோடு பணியாற்றிய அரசு ஊழியர் ஓய்வு பெற்றபின் தனது முதுமை காலத்தில் நிராதரவாக விடப்படாமல் அமைதியாகவும், கண்ணியமாகவும் வாழ உதவி செய்வது ஓய்வூதியம் தான்.

    பழங்காலத்தில்,மன்னருக்காகவும், நாட்டுக்காகவும் உயிர்த் தியாகம் செய்த ஊழியரின் குடும்பத்திற்கு வீடுகள், நிலம் என மானியம் வழங்கப்பட்டதாக மட்டும் சில வரலாற்று பதிவுகள் உண்டு.அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் என்பது இந்திய தேசத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது 1857- க்குப் பின் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

     1871 ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் 'இந்திய ஓய்வூதியச் சட்டம் - 1871' - இயற்றிச் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தில் 'ஓய்வூதியம் என்பது அரசு வழங்கும் கருணைத் தொகை அது அரசு ஊழியரின் அடிப்படை உரிமை இல்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைக்குப் பின்னரும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.'ஓய்வூதியப்பிதாமகன்’ மத்திய பாதுகாப்புத் துறையில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றிய டி.எஸ்.நகரா என்பவர் 1972இல் தமது பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வூதியத் தந்தை திரு. D S நகரா 

     அவருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தில் சில முரண்பாடுகளும், சிக்கல்களும் இருப்பதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.அந்த வழக்கில் 1982, டிசம்பர்17 இல் அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு டி.எஸ்.நகராவுக்குத் தகுதியான ஓய்வூதியம் வழங்கித் தீர்ப்பளித்தது. 

    அந்தத் தீர்ப்பில்

'ஓய்வூதியம் என்பது அரசின் கருணைத் தொகையோ நன்கொடையோ அல்ல; ஓர் அரசு ஊழியர் பல ஆண்டு காலம் அரசுக்கும், மக்களுக்கும் பணியாற்றியமைக்காகப் பெறும் உரிமைத் தொகையாகும்'
என்று குறிப்பிட்டதுடன்,
'அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பின் அமைதியாக, கவுரவமாக வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்'
என்றும் ஆணித்தரமாகத் தீர்ப்பளித்தது.

     அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், தற்போது ஊதியக் குழு அமைத்துப் பணியில் இருப்பவர்களின் ஊதியம் திருத்தி அமைக்கப்படும் போதெல்லாம், ஓய்வூதியமும் திருத்தி அமைக்கப்பட்டு வருகிறது. 

    பணியில் இருப்பவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் போதெல்லாம் ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட டிசம்பர்17ஆம் நாள் 'ஓய்வூதியர் தினமாக'க் கொண்டாடப்படுகிறது

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece