6 டிசம்பர், 2021

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்

 

          

          1891 ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மாஹூ என்ற பகுதியில் பீமாராவ் அம்பேத்கர் பிறந்தார். சிறுவயதில் கனவுகளுடன் கல்வி கற்கச் சென்ற அம்பேத்கரை,‌‌ தீயாய்த் தீண்டியது தீண்டாமை. 

         புத்தகப் பையுடன், சாக்குப் பையையும் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்‌களின் கனவுகளையும் சுமந்து சென்றார் அம்பேத்கர். ‌தாழ்த்தப்‌பட்ட மக்களின் முன்னேற்றத்தை மூச்சாகக் கொண்டு கல்வி கற்ற அம்பேத்கர், வெளிநாட்டில் சட்டம், மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்‌டம் பெற்றார்.

         அம்பேத்கர்,

“கல்வி என்பது புலிப் பாலைப் போன்றது. அதைக் குடித்த எவராலும் புலியைப் போல உறுமுவதைத் தவிர, அடங்கி நடந்துவிட முடியாது”   என்பார்.

          ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கமாய், குரலற்ற மக்களின் நாயகனாக விளங்கிய அம்பேத்கர் வெறுமனே அரசியல் தலைவர் மட்டுமல்ல, ஒரு பொருளாதார நிபுணர், சட்ட வல்லுநர், தத்துவங்களின் ஆழத்தில் திளைத்தவர், சமயங்களைப் படித்தவர், இசையின் நுட்பம் தெரிந்தவர். 

          புனே ஒப்பந்தத்திற்குப் பிறகு 'இந்திய ராணுவம்' குறித்து நூல் எழுதத் தொடங்கியவர். நீர்ப்பாசனம், மின்னாற்றல் குறித்து கட்டுரைகள் எழுதியவர். மாநிலங்களின் உரிமைகள், மொழி, இனக்குழுக்கள், மக்கள்நலத்திட்டங்கள், அரசின் தன்மை, போராட்டங்களின் வழிமுறை என பலதளங்களில் சிந்தித்து உரையாடல் நிகழ்த்தியவர்.

         படித்து முடித்து இந்தியா திரும்பிய அம்பேத்கர், தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்காக "பகிஷ்கரித் ஹித்தஹாரிணி" என்ற இயக்கத்தை தொடங்கினார். பின்பு சாதி வெறியால் சகித்து வாழும் மக்களுக்கு, தலைவனாக ஓய்வின்றி உழைத்தார். 

       நசுக்கப்பட்டவர்களின் நாயகனாக இருந்த அம்பேத்கர், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் உலகமே வியக்கும் வகையில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காக உரையாற்றினார்.‌‌ 

       த‌னது தன்னி‌கரற்ற உழைப்பால், தாழ்த்தப்பட்டோருக்காக 1946 ஆம் ஆண்டு சித்தார்த்தா சட்டக் கல்லூரியை தொடங்கினார். அபரிமிதமான அறிவாற்றல் கொண்டவராக இ‌ருந்தார்.‌ அல்லும் பகலும் உழைத்து நாடே போற்றும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். 

         அம்பேத்கர் வெறுமனே கற்றறிந்த அறிவுஜீவியாக மட்டும் இருந்திருந்தால், கோடிக்கணக்கான மக்களால் நினைத்துப் பார்க்கப்படும் மாமனிதராக இருந்திருக்க மாட்டார். அவர் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்காகவே அதிகம் படித்தார். தன்னுடைய வாசிப்பையும் அறிவையும் சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்தினார். 

       ‘ஜனநாயகம்’ என்ற அம்சத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அரசியலில் மட்டும் ஜனநாயகம் இருந்தால் போதாது, சமூக ஜனநாயகமும் முக்கியமானது என்பதையே அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். 

       சுருக்கமாகச் சொன்னால் அம்பேத்கர் நமக்குச் சொன்ன செய்தி, ஒன்றே ஒன்றுதான். 

“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்" 

    என்பதுதான் அது.

         இன்றைக்கு மாநில குரூப்1, குரூப்2 என்று அதிகாரிகள் தேர்வாவதற்கு அவரே அடிப்படை. தொழிலாளர் துறை அமைச்சர் என்கிற முறையில் 1942 நவம்பர் 27 ஆம் நாள் அவர் கூட்டிய ஏழாவது இந்திய தொழிலாளர் மாநாட்டில்தான் வேலைநாள் என்பது எட்டுமணி நேரம் என்கிற மகத்தான முடிவினை அறிவித்தார் அம்பேத்கர்.

       தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம், அகவிலைப்படி அறிமுகம், ஆழ்துளைச் சுரங்கங்களில் பெண் தொழிலாளர்களை பணி செய்ய வைப்பதற்கு தடை, மகப்பேறு விடுப்பு என தொழிலாளர்கள் அனுபவித்து வரும் பல்வேறு உரிமைகள் அவர் வழியாக வந்தவையே.

       பொதுநிதி, வங்கித்துறை சீர்திருத்தங்கள் பற்றிய சமீபத்திய விவாதங்களில் அம்பேத்கரின் வழிகாட்டுதல் போற்றப்படுகிறது. ரிசர்வ் வங்கி உருவாக்கம் அவரது சிந்தனைக்குழந்தை தான் எனப்படுகிறது. இன்சூரன்ஸ் அரசுடைமையாக்கம், மத்திய மின்தொகுப்பு, சுரங்கங்கள் மீதான அரசுரிமை, தொழில் மயமாக்கம் என்று தேசிய கட்டுமானத்தில் அவரது பங்களிப்பு எல்லையற்று விரிகிறது.

         இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியராகவும் இருந்தார்..

       “எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன் என்பேன்” 

        என்ற டாக்டர் அம்பேத்கர், 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் தனது வாழ்க்‌கைப் பயணத்தின் கடைசிப் பக்கத்தை எழுதி முடித்தார். 

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...