26 ஜனவரி, 2022

73 ஆவது குடியரசு தினம்

     73


       ஆங்கிலேயர்கள், தங்களுக்கு எதிரான, தொடர் போராட்டங்களை எதிர்கொள்ள இயலாமல், இந்தியாவை விட்டு வெளியேற  முடிவு செய்தனர்.1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தது.அப்போது கிடைத்த சுதந்திரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி ஆங்கிலேயர் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். 

    சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவிற்கான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க மாமேதை அம்பேத்கர் தலைமையில் 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதி ஒரு குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு அதே ஆண்டு நவம்பர் மாதம் வரைவு அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த வரைவு அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை அறியும் வகையில் விவாதங்கள் நடத்தப்பட்டன. 



     1949 நவம்பர் 26 ஆம் தேதி முழுமையாக வடிவமைக்கப்பட்டு, 1950 ஜனவரி 26ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. நாடு விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ஆம் தேதி, மக்களாட்சி மலர்ந்த நாளாகக் கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை முடிவு செய்தது. 

    308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.அம்பேத்கர் கொண்டு வந்த இந்த அரசியலமைப்புச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்து 73 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த நாளை நாம் குடியரசு நாளாக கொண்டாடுகிறோம்.

    அனைவருக்கும், இனிய குடியரசுதின வாழ்த்துகள். வலிமையான பாரதமே, நமது நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும். நாம், நமது பொறுப்புகளை உணர்ந்து, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்.


Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...