உலக பக்கவாத நாள் (அக்டோபர் 29)
இன்று உலக பக்கவாத நாள். உலகில் பக்கவாதத்தால் (ஸ்ட்ரோக்)ஆண்டுக்கு ஒன்றரை கோடிப் பேர் பாதிப்படைகிறார்கள். அதில், இந்தியாவில் மட்டுமே ஆறு லட்சம் பேர் என்று எச்சரிக்கை செய்கிறது மருத்துவத்துறை. பக்கவாத நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, ஆண்டுதோறும் அக்டோபர் 29 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பக்கவாதமானது திடீரென ஏற்படக் கூடிய ஒரு நோயாகும். அதாவது மூளைக்கான இரத்தக்குழாயில் திடீரென அடைப்பு ஏற்பட்டு, மூளைக்கான இரத்தவோட்டம் தடைபடும் போது இந்நோய் வெளிப்படும். இல்லாவிட்டால் மூளைக்கான இரத்தக்குழாயில் திடீரென ஏற்படும் வெடிப்புக் காரணமாக இந்நோய் வெளிப்படும். இவற்றின் விளைவாக மூளைக்குக் கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் கிடைக்காது போகும். இதனால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இந்நோய் வெளிப்படுகின்றது. இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் தான் பக்கவாதம் ஏற்படுகின்றது.
மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நரம்புகளுக்கு பத்து நிமிடம் சரியாகச் செல்லவில்லை என்றாலே, உடல் செயலிழக்க ஆரம்பித்துவிடும். இந்நோய் ஏற்படும் முன் 48 மணி நேரத்துக்குள் வழக்கத்திற்கு மாறான சில அறிகுறிகள் திடீரென உடலில் தோன்றி, சில நிமிடங்களில் தானாகவே பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.
தீவிரத் தலைவலி, பார்வைக் குறைபாடு அல்லது பார்வை மங்குதல், விழுங்க முடியாத நிலைமை, நா குழறுதல், கை, கால் செயலிழந்த உணர்வு, முகம், கை மற்றும் காலின் ஒரு பகுதி விறைப்பு என்பன குறிப்பிடத்தக்க அறிகுறிகளாகும். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால், தாமதியாது உடனடியாகச் செயற்பட வேண்டும். காலத்தை வீணாக்கக் கூடாது.
இந்த அறிகுறிகள் பேராபத்திற்கான முன் அறிவிப்புகளாக அமையும். அதனால் இவ்வறிகுறிகள் தென்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று அறிகுறிகளை விவரமாக எடுத்துக் கூறி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பக்கவாதத்தின் பேராபத்தைப் பெரிதும் தவிர்க்கலாம்.
உயர் ரத்த அழுத்தம், உடம்பில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது, இரத்தக் குழாயில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றால் முதியவர்களுக்கு இப்பாதிப்பு வருகிறது. அதேபோல, நீரிழிவு நோயாளிகளுக்கும் சில காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது.
1. உங்கள் குடும்பத்தில் யாருக்கவாது பக்கவாதநோய் இருந்திருந்தால், உடனே பக்கவாதம் ஏற்படுத்தக் கூடிய காரணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
2. இரத்தக் கொதிப்பு தான் பக்கவாதம் ஏற்படுவதற்கான முழு முதற் காரணம், உடனே உங்கள் மருத்துவரை அணுகி, உங்களுக்கு இரத்தக் கொதிப்பு உள்ளதா என்பதை உறுதிச் செய்து கொள்ளுங்கள். அதைக் கட்டுப்படுத்தத் தேவையான உணவு வகைகளையும், உடற்பயிற்சிகளையும் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள தேவையான மருந்துகளை மருத்துவரிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
3. அடுத்தது, இருதய நோய் & முழுவதுமான இருதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இருதயத்தில் ஏற்படும் சில நோயாலும், அடைப்புகளாலும் கூட, பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சையின் தேவை குறித்தும், இரத்தக் கட்டுகளைக் கரைக்கும் மருந்துகள் குறித்தும் ஆலோசனை செய்து தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
4. உயர் கொழுப்புச் சத்து, உங்கள் இரத்த நாளங்களில் படிந்து, இரத்த நாளத்தின் விட்டத்தை குறுகச் செய்கிறது. இதனால் மூளைக்கு செல்ல வேண்டிய இரத்த அளவு குறைந்து பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொழுப்பு இல்லாத உணவுகளை உண்ணப் பழகுங்கள், உடற்பயிற்சி செய்து கொள்ளுங்கள். மருத்துவரிடம் கேட்டு, கொழுப்பைக் குறைப்பதற்கான மருந்துகளை உட்கொள்ளுங்கள்.
இனிய வளமான வாழ்விற்கு, மனமார்ந்த வாழ்த்துகள்