5 டிசம்பர், 2021

வால்ட் டிஸ்னி பிறந்தநாள்

 

     குழந்தைகளைக் களிப்பூட்டும் கதாபாத்திரங்களைப்படைத்த வால்ட் டிஸ்னி என்னும் உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிறந்த நாள் இன்று. 

  இவர்,ஒரு மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவனத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் இணைந்த உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.

    இருபதாம் நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கத்திற்காகப் பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் பல வணிக நோக்குடைய பூங்கா வடிவமைப்பு மற்றும் அசைவுப்படம் அமைப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் மிக்கி மவுஸ் போன்ற கற்பனைக் கதாப்பாத்திரங்கள். 

   இவர் ஐம்பத்து ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் விருதுகளும் வென்றுள்ளார். இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகச்சாதனை . இதனால், இவரே மற்றவரை விட அதிக நியமனங்களும்,விருதுகளும் பெற்றவர்.

    ஏழு எம்மி விருதுகள் வென்றார். இவர் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள டிஸ்னிலாந்து பூங்கா(அனஹெயிம்) 

 மற்றும் வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் பொழுதுபோக்கு பூங்காக்கள், டோக்கியோ டிஸ்னி (ஜப்பான்) மற்றும் டிஸ்னிலாந்து ,சீனா (ஹாங்காங்) போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார்.

    வால்ட் டிஸ்னி தினமும் 4.30 மணிக்கு எழுந்து தினசரி பத்திரிக்கைகளை விற்பனை செய்து வந்தார். அதனால் பள்ளிகளில் போதிய நேரம் செலவிட இயலாத காரணத்தினால் மோசமான தரங்களையே (grades) பெற்றார். ஆனாலும் தன்னுடைய தினசரி பத்திரிக்கைகளை விற்பனை செய்வதனை ஆறு வருடங்கள் தொடர்ந்து செய்தார். மேலும் சனிக்கிழமை தோறும் கேலிச்சித்திரம் வரைவதற்காக சிறப்பு வகுப்புகளுக்கும் சென்றார். 

    1917 ஆம் ஆண்டில் எலியாஸ் ஓ ஷெல் என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். எனவே அவர்கள் மறுபடியும் தங்களுடைய இடங்களுக்கு சென்றனர். வால்ட் டிஸ்னி மெக்கின்லே உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவர் பள்ளி அளவில் செயல்படும் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரையும் பணியினைப் பெற்றார். அதில் இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமான கேலிச்சித்திரங்களை வரைந்தார். மேலும் சிகாகோ அகாதமியில் இரவு படிப்பினை மேற்கொண்டார்.

      1920 ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி , ஐவெர்க்ஸ் ஆகியோர் இணைந்து தொழில் துவங்கினர். ஆனால் அவர்கள் தொடங்கிய தொழிலில் வாடிக்கையாளர்களைக் கவர இயலவில்லை. எனவே அதனை தற்காலிகமாக விட்டுவிடலாம் என முடிவு செய்து விளம்பர நிறுவனம் ஒன்றினை தொடங்கினர். அதனை ஏ.வி.குகர் எனவரின் தலைமையில் மேற்கொண்டனர். பின் அவர்களுடன் ஐவெர்கஸ் இணைந்தார். அதனை அவர்கள் பிரிவகம் அசைவுப்படம் மூலம் செயல்படுத்தினர். அப்பொழுதுதான் டிஸ்னிக்கு அசைவுப்படத்தின் மீது ஆர்வம் வந்தது. மேலும் அவர் மட் அண்ட் ஜெஃப் (Mutt and Jeff) மற்றும் கோகோ தெ க்ளொவ்ன் (Koko the Clown.) போன்ற அசைவுப்படங்களை வரையத் தொடங்கினார்.

       1923 ல் டிஸ்னி ஹாலிவுட் பக்கம் சென்றார். மேலும் அப்பொழுது அமெரிக்காவில் கேலிச்சித்திரத்திற்கான நிறுவனங்கள் அங்கு அதிகமாக இருந்தன. அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தினை தேர்வு செய்தார். ஏனெனில் அவருடைய தம்பிக்கு காசநோய்க்கான சிகிச்சையினை அங்குதான் எடுத்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு அவரும் அவருடைய தம்பியும் இணைந்து “தி வால்ட் டிஸ்னி” என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்கள். இந்த நிறுவனத்தின் பெயரிலேயே அவர்கள் படங்களைத் தயாரித்தனர்.

    ஓஸ்வல்ட் என்பதற்கு பதிலாக டிஸ்னி மற்றும் ஐவெர்க்ஸ் இணைந்து மிக்கி மவுஸ் என்பதனை உருவாக்கினர். ஆனால் அது எவ்வாறு உருவானது என்பது பற்றிய தெளிவான வரலாறு தெரியவில்லை. அதற்கு முதலில் மோர்ட்டிமர் எலி (Mortimer Mouse) அல்லது மிக்கி மவுஸ் என்றும் பெயர் வைக்க நினைத்தனர். ஐவெர்க்ஸ் இதற்கான உருவத்தினை சற்று மேம்படுத்தினார். 1947 ம் ஆண்டு வரையில் மிக்கி மவுஸிற்கு ஒலிவடிவம் கொடுத்து வந்தனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர் பின்வருமாறு கூறினார், யுபி (Ub) மிக்கிகு உருவம் கொடுத்தார் ஆனால் டிஸ்னி இதற்கு உயிர் கொடுத்தார்.

   மிக அதிக முறை ஆஸ்கர் விருதுக்கான நியமனம் மற்றும் ஆஸ்கார் விருது வாங்கிய முறைக்காக வால்ட் டிஸ்னி செய்த சாதனை. இவர் வாங்கிய நான்கு ஆஸ்கார்கள், சிறப்பு விருதுகள் மற்றும் ஒன்று அவர் மறைவுக்கு பின் வழங்கப்பட்டது.


உலகத் தன்னார்வலர் தினம் (International Volunteer Day)

  


    பன்னாட்டுத் தன்னார்வலர் நாள் (International Volunteer Day) என்பது ஆண்டு தோறும் டிசம்பர் 5 ஆம் நாள் உலகெங்கும் நினைவு கூரப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1985 ஆம் ஆண்டில் இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. 

    இந்நாள் உள்ளூரிலும், சர்வதேச அளவிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, தன்னார்வ முயற்சிகளை ஆதரிக்க அரசாங்கங்கள் ஊக்குவிப்பதோடு, நிலையான, முன்னேற்ற இலக்குகளை அடைவதற்குத் தன்னார்வர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் வழி வகுக்கிறது. 

 தன்னார்வலர் என்போர் யார்? 

     தன்னார்வலர் என்பவர் தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைப்பவர் ஆவார். பல தன்னார்வலர்கள் அரசு சார்பற்ற அமைப்புக்கள் மூலம் சேவை செய்கின்றனர். இவர்கள் சில வேளைகளில் முறைசார்ந்த தன்னார்வலர்கள் எனப்படுகின்றனர். 

   பல தன்னார்வலர்கள் இவ்வாறன்றித் தனிப்பட்ட முறையிலோ அல்லது சிறு,சிறு குழுக்களாகவோ சேவை செய்கின்றனர். வரைவிலக்கணப்படி, தன்னார்வலர்கள் தம் சொந்தப் பணத்தில் செலவு செய்ததைத் திரும்பப் பெறுவதன்றி, தாம் செய்யும் வேலைகளுக்காக எவ்வித கொடுப்பனவுகளையும் பெறமாட்டார்கள். 

      தன்னார்வலர் மேலாண்மை 

      மருத்துவ நிலையங்கள் போன்ற பல அமைப்புகளுக்குத் தொடர்ச்சியாகத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். பெரிய அளவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகள்,இயற்கைப்பேரிடர்,போர் பாதிப்பு போன்றவற்றுக்கு நூற்றுக்கணக்கில் அல்லது சில வேளை ஆயிரக் கணக்கில் கூடத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர்.

    திருவிழாக்கள் போன்று மக்கள் அதிகளவு கூடும் வேளைகளில் காவல்துறைக்கு உறுதுணை புரியத் தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் இத் தேவை தொடர்ச்சியானதாக அன்றி, ஒரு தடவையோ, ஆண்டுக்கு ஒருமுறையோ சில ஆண்டுகளுக்கு ஒருமுறையோ மட்டுமே வேண்டியிருக்கும்.

    இத்தகைய நிகழ்வுகளின் வெற்றி உள்ளூர்ப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், தன்னார்வலர் தொடர்பான பொருளியல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. 

   இந்தியாவில் தன்னார்வலர்களின் போக்கில் மாற்றம் உள்ளதால் பல தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 

        ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் உலக நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகளின் அமைப்பாகும். இது உலகளாவிய தன்னார்வலர்களை, ஐக்கிய நாடுகளின் பங்காளர்களுக்கு உதவும் வண்ணம் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர் திட்டமானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் நிர்வாகிக்கப் படுகின்றது. இதன் தலைமை அலுவலகமானது பான், ஜெர்மனியில் அமைந்துள்ளதுடன் ஏனைய நாடுகளில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்த் திட்ட நாட்டு அலுவலகத்திற்கூடாக (country offices) செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. 

       ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 1970 இல் உருவாக்கப்பட்டதாகும். தன்னார்வலர்களை, வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இருந்து சேர்த்துக்கொள்கின்றார்களெனினும் தற்போது 70% பேர் வளர்ச்சியடைந்த நாடுகளையே சேர்ந்தவர்கள். 

       ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் அடிக்கடி அடையாளம் காணப்பட்டு, நேர்காணப்பட்டு, ஐக்கிய நாடுகளுடன் கூட்டியங்கும் ஒரு அமைப்பால் திட்டங்கள் பற்றி விளக்கப்படுகிறது. 

      1971 இல் இருந்து 30, 000க்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் 140 நாடுகளில் பல்வேறுபட்ட திட்டங்களில் பயனபடுத்தப்பட்டனர்.

உலக மண் நாள்

 


       # ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 5ஆம் நாள் உலக மண் நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஐந்து நிமிடமும்,கால்பந்து மைதான அளவு  மண்,மண்ணரிப்பின் மூலம் சேதமடைகிறது.

      # ஆரோக்கியமான மண் வளத்தை மேம்படுத்துவது, நன்மை பயக்கும் வகையில் மேலாண்மை செய்வது ஆகியவற்றுக்காக இந்தநாளை ஐ.நா அர்ப்பணித்துள்ளது. 

      # மண் அறிவியலுக்கான சர்வதேச சங்கம் இப்படிஒரு நாள் கடைபிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை 2002இல் ஐநாவுக்கு வலியுறுத்தியது. ஐ.நாவின் துணை அமைப்பான, உணவு மற்றும் விவசாய நிறுவனமும் (FAO)உலக மண் நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தது.

      # உலகமண் நாள் அனுசரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்த முக்கியமானவர்களில் ஒருவரும், உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவருமான, தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜின் பிறந்த நாள் டிசம்பர் 5. அவரைக் கெளரவிக்கும் விதமாக இந்த நாள் உலக மண் நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    # உலகின் இயற்கைச் சூழலில் மண் வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். 

     # ஒரு தேக்கரண்டி நல்ல மண்ணில், உலகத்தில் உள்ள மக்கள் தொகையை விட கூடுதல் எண்ணிக்கையில் நுண்ணுயிரிகள் உள்ளன (சுமார் 5 இலட்சம் கோடி நுண்ணுயிர்கள் உள்ளன).

அத்தனை கழிவுகளையும் மட்கவைக்கும் சக்தி மண்ணுக்கு உண்டு. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களே அப்பணியைச் செய்கின்றன.இவ்வுலகில் இறந்துபோன தாவர, விலங்குகளையும், கழிவுகளையும் மட்கச் செய்து உரமாக்குவதில், நுண்ணியிர்களின் பங்கு மகத்தானது.

      # நீரின் அசுத்தத்தை வடித்துச் சுத்தமாக்கித் தரும் மகத்துவம் மண்ணிற்கு உண்டு. உறிஞ்சும் பஞ்சு போல, தண்ணீரை தன்னுள்ளே உறிஞ்சி வைத்து, பூமியில் வெள்ளம் வராமல் பாதுகாக்கிறது. ஒரு ஹெக்டேர் நிலம் 3,750 டன் தண்ணீரைத் தேக்கி வைத்துப் பாதுகாக்கும் திறன் பெற்றது. 

  # கருவிலிருந்து மனிதன் உருவாகப் பத்து மாதங்கள் போதும். ஆனால் ஒரு சென்டி மீட்டர் மண் உருவாக, 500 ஆண்டுகள் ஆகும்.

    # மண்ணைக் கடவுளாய் மதித்துத் திருநீறு போல நெற்றியில் இட்ட நாம், அறிந்தும், அறியாமலும் இயற்கையைச் சிதைக்கத் துவங்கி விட்டோம். இரசாயன உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லிகளால் மண் மாசுபட்டு மனிதஇனம் நோய்வாய்ப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பஞ்ச பூதங்களில் முதன்மையானது நிலம். நிலமான மண்ணில் மாசுபட்டால் நீர், காற்றுடன் அனைத்தையும் பாதிக்கும்.

     # 1960 க்கு முன்பு, இந்தியாவில் பல பஞ்சங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக கோடைகாலத்தில் வெறும் 2-3 மாதங்களில் முப்பது லட்சம் மக்களின் உயிரைப் பறித்தது. ஆறுகள் வறண்டு, மண் குறைந்துவிட்டால் நாம் மீண்டும் அந்த மாதிரியான நிலைக்குச் செல்வோம். நாம் இப்போது சரியான காரியங்களைச் செய்யாவிட்டால், இந்த நிலம் எதிர்காலத்தில் மக்களைத் தக்கவைக்காது.

     # உண்மையில், நாம் செயல்பட வேண்டிய நேரம் இதுதான். இன்னும் பத்து முதல் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு நிலையான முயற்சி எடுத்தால், முழுச் சூழ்நிலையையும் நாம் மிக எளிதாக மாற்ற முடியும்.

   * நீடித்த நிலையான வேளாண்மைக்கு மண்வள பாதுகாப்பினை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும், தனிமனித ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதை நாம் உணர்ந்து, வருங்கால தலைமுறைக்கு, மண்ணை மலடாக்காமல் வளமாக்கிச் செல்வோம் எனச் சூளுரை ஏற்போம்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...