29 ஜனவரி, 2022

பழம்பெரும் நடிகை பண்டரிபாய் நினைவு நாள்

     பண்டரிபாய் தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்கல் என்ற கிராமம். 1930ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தார். தந்தை ரங்காராவ். தாயார் காவேரிபாய். பண்டரிபாயுடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர். 

    பண்டரிபாயின் தந்தை ஓவிய ஆசிரியர். என்றாலும் நாடகத்தன் மீது தணியாத பற்றுக் கொண்டவர் எனவே, வேலையை விட்டு விலகி, நாடகக் கம்பனி ஆரம்பித்தார். எனினும் தன் மகள்கள் யாரும் நாடகத்தில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்தார். நாடகம் பற்றிச் பேசக் கூடாது என்று தடை உத்தரவு போட்டிருந்தார்.

    நாடகத்துக்குப் பதிலாக, மகள்களுக்குக் கதாகாலட்சேபம் கற்றுக் கொடுத்தார். பண்டரிபாய் தன் 10 வயதிலேயே கன்னடத்திலும், மராத்தியிலும் கதாகாலட்சேபம் செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்றார். இவ்வளவு சிறப்பாக காலட்சேபம் செய்கிற பண்டரிபாய், சினிமாவில் நடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று அவரது அண்ணன் நினைத்தார். அவர் முயற்சியால் “வாணி” என்ற கன்னடப் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு பண்டரிபாய்க்குக் கிடைத்தது.

    எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் மெகாஹிட் படத்தில் பண்டரிபாய்க்கு ஒரு சிறு வேடம் கிடைத்தது. தமிழில் அது தான் அவருக்கு முதல் படம். இந்தப்படத்தில்  பண்டரிபாய் நடித்தபோது அவருக்கு வயது 14 தான்.

    பண்டரிபாய்க்கு தமிழ் கற்றுக் கொடுக்க பி. டி. சம்பந்தம் என்ற நடிகரை ஏ. வி. எம். நிறுவனம் ஏற்பாடு செய்தது.என்றாலும் பண்டரிபாயிடம் இருந்து தமிழ் வார்த்தை தெலுங்கில் தான் வந்தது .பி டி சம்பந்தம் பண்டரிபாயிடமிருந்து தெலுங்கைக் கற்றுக்கொண்டது தான் மிச்சம்.


    பின்னர் சகஸ்ரநாமத்திடம் தமிழ் கற்றார். விரைவிலேயே தமிழில் அழகாக வசனம் பேச, பண்டரிபாய் கற்றுக் கொண்டார். ஏ வி. எம். கூட்டுறவுடன் நேஷனல் பிக்சர்ஸ் 1952 இல் தயாரித்த பராசக்தி படத்தில், சிவாஜியின் ஜோடியாக பண்டரிபாய் நடித்தார்.

    சின்ன வேடங்களில் நடித்த படங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் பண்டரிபாய் முக்கிய வேடத்தில் நடித்த முதல் தமிழ்ப் படம் பராசக்தி தான். அதில் சிறப்பாக நடித்ததுடன் கலைஞரின் வசனங்களை தெளிவாகவும், இனிமையாகவும் பேசி, தேன்மொழியாள் என்று போற்றப்பட்டார்.

    தொடர்ந்து சிவாஜிகணேசனுடன் பல படங்களில் பண்டரிபாய் நடித்தார். “கண்கள்” படத்தில் தங்கை, “திரும்பிப்பார்” படத்தில் அக்காள், “அந்தநாள்” படத்தில் மனைவி….. இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார்.சிவாஜிகணேசனின் தாயாக தெய்வ மகன், கௌரவம் போன்ற படங்களில் தமது அபார நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

     கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 7 மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்துச் சாதனை படைத்தார்.மன்னன் படத்தில் ரஜினி காந்தின் தாயாராக நடித்தபோது, ”அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்ற பாடலில் இக்காலத் தலைமுறையினருக்கும் அறிமுகமானார்.

    ஒரு முறைப் படப்பிடிப்பு ஒன்றிற்காக சென்னையிலிருந்து பெங்களூருவிற்குப் பேருந்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் தனது ஒரு கையை இழந்தபின், திரைப் படங்களில் நடிக்கவில்லை. 2003 ஆம் ஆண்டு மறைந்தார்.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece