27 ஜனவரி, 2022

ஆர்.வெங்கட்ராமன் நினைவுநாள்

      திரு.ஆர்.வெங்கட்ராமன் ஒரு விடுதலைப்போராட்ட வீரர்,தொழிற்சங்கத் தலைவர், நிதித்துறை மேதாவி,, சட்ட வல்லுனர், சிறந்த சிந்தனைவாதி. தஞ்சாவூர் மாவட்டம் ராஜா மடம் என்ற கிராமத்தில் பிறந்தவர். பட்டுக்கோட்டை யில் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார்.


    லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். 1935ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலை ஆரம்பித்தார். 1949 இல் ‘லேபர் லா ஜர்னல்’ என்னும் இதழைத் தொடங்கினார். தமிழகத்தில் பல தொழிற்சங்கங்களின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

  தோட்டத் தொழிலாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள், உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்குச் சங்கம் அமைத்தவர் சென்னை மாகாண வழக்கறிஞர் கூட்டமைப்பின் செயலாளராகப் பணியாற்றினார்.தொழிலாளர் சட்ட ஜர்னலின் ஆசிரியர்.1951 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார். சென்னை பிராந்திய பார் பெடரேசனின் செயலாளராகப் பணியாற்றினார். 

     சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் இணைந்து போராடியதால் கைது செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு காங்கிரஸ் இயக்கத்தின் தொழிலாளர் பிரிவில் தீவிரப் பங்காற்றினார். 

     இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950 முதல் 1957 வரை நாடாளுமன்ற உறுப்பினராக, சிறப்பாகப் பணியாற்றினார். சர்வதேச நிதித்துறையில் ஆளுநராகவும், சர்வதேசப் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியிலும் பணியாற்றினார்.

     நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், இவரது சேவை தமிழகத்துக்குத் தேவை என்பதை உணர்ந்த அப்போதைய முதல்வர் காமராஜர், இவரை, தமிழக அமைச்சரவையில் பங்கேற்க வைத்தார். தொழிலாளர் நலத்துறை, மின் துறை, தொழில் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் வணிகத்துறை என பல துறைகளை இவர் நிர்வகித்தார். 

     அரசியல் விவகாரக் குழு, பொருளாதார விவகாரங்களுக்கான குழு உறுப்பினராகவும் பொதுக்கணக்குக் குழுவின் தலைவராகவும் 1975 முதல் 1977 வரை ‘சுயராஜ்ய’ பத்திரிகையின் ஆசிரியராவும் பணியாற்றினார்.1946 ஆம் ஆண்டு மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்று, அங்குள்ள இந்தியர்களின் நலன்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடியுள்ளார். 

     1957ஆல் இருந்து 1967வரை தமிழக மேலவை முன்னவர். கிண்டி மற்றும் அம்பத்தூரில் உள்ள தொழிற் பேட்டைகள் இவர் உருவாக்கியவை. கலை, ஓவியம்,சிற்பங்களுக்கு ஊக்கம் அளித்தவர். மாமல்லபுரம் சிற்ப பள்ளி, சுவமிமலை வெண்கலச் சிற்பக்கூடம், நாச்சியார் கோவிலில் பாரம்பரிய விளக்குகளை உருவாக்கும் கூடம் ஆகியவை இவர் அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டவை. 

     1980 இல் இந்திரா காந்தி தலைமையில் அமைந்த மத்திய அரசில் நிதி அமைச்சராகப் பதவியேற்றார். பிறகு பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அந்த நேரத்தில்தான் இந்திய ராணுவத்துக்கான ஏவுகணை திட்டப்பணிகள் தொடங்கின. 

     1984 இல் நாட்டின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார்.1987இல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1992 வரை அப்பதவியில் நீடித்தார். 4 பிரதமர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

    பாகிஸ்தானுக்குப் பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் இவரே. இவர் குடியரசுத் தலைவராக பதவி வகித்தபோதுதான் மத்தியில் கூட்டணி அரசு தொடங்கியது. பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன.

     காமராஜருடன் இவர் மேற்கொண்ட ரஷ்யப் பயணத்தின் அனுபவங்களை ‘சோவியத் நாடுகளில் காமராஜரின் பயணம்’ என்ற புத்தகமாக எழுதினார். இதற்காக இவருக்கு ‘சோவியத் லேன்ட்’ பரிசு வழங்கப்பட்டது. 

    சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், நிர்வாகியாகவும் திகழ்ந்த ஆர்.வெங்கட்ராமன், தனது 98 ஆவது வயதில் காலமானார்.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece