ஐக்கிய நாடுகள் அவை (ஐ.நா சபை) தினம்
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ஆம்தேதி ஐக்கிய நாடுகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பு 1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம்தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவது இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐ.நா.வில் உலகில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
2ஆம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவு காரணமாக அப்போரை நிறுத்தும் நோக்கத்துடன் சில உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி சமாதானத்தை நிலைநாட்டவும், எதிர்காலத்தில் இத்தகைய யுத்தங்கள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் உருவாக்கிய அமைப்பே ஐ.நா. சபை ஆகும்.
1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் இந்த அமைப்புக்கு அஸ்திவாரமிட்ட பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளும் நிரந்தர பாதுகாப்புக்குரிய உறுப்பு நாடுகளாகும்.
ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும்.ஐ.நா.வின் தலைமை அலுவலகம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது