20 நவம்பர், 2021

சர்வதேசக் குழந்தைகள் தினம் - நவம்பர் 20

       


      ஐ.நா-வின் யுனிசெஃப் ( UNICEF) எனும் குழந்தைகள் நல அமைப்பு நவம்பர் 20 ஐ, உலகக் குழந்தைகள் தினம் என அறிவித்துள்ளது. 

குழந்தைகள் நலனுக்காக, கருத்தரங்குகள் தொடங்கி, பரப்புரை எனப் பல்வேறு நிலைகளில் உலகத் தலைவர்களுக்கு, குழந்தைகள் நலம் குறித்து கொள்கை முடிவுகள் எடுக்கச் சொல்லி வலியுறுத்துவது வரை பலவற்றைச் செய்கிறது. 

     உலக மக்களிடையே, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு நிகரான அனைத்து வாழ்வியல் உரிமைகளும் சட்டப்பூர்வமாகத் தரப்பட வேண்டும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து GoBlue என்ற பிரசாரத்தை நடத்தப்பட்டுவருகிறது. நீல நிறத்தைக் குழந்தைகள் உரிமை காப்பதற்காக அடையாளப்படுத்துகிறது இந்த அமைப்பு.

     இதைத் தாண்டி உலகில் ஏறத்தாழ 85 நாடுகளில் குழந்தைகள் தினம் என்று வெவ்வேறு தினங்களில் பிரத்யேகமாகக் கொண்டாடப் படுகின்றது. 

     ஐக்கிய நாடுகள் அவை, இனம், நிறம், பால், மொழி, மதம், கருத்து, செல்வம், திறன் ஆகியவற்றைக் கடந்து  18 வயதிற்கு உட்பட்டோர்க்கு குறைந்த பட்சம் உரிமைகள் மற்றும் சுதந்திரம் அளிக்கப்படல் வேண்டும் என்று வரையறுக்கின்றது.


குழந்தைகளின் உரிமைகள்

               ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமே  “குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகள் அளிக்கப்படல் வேண்டும் “ என்பது தான். மேலும், குழந்தைகளின் உரிமைகள் நான்கு பரந்த பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பிரிவுகளும் சமூக, பொருளாதார, கலாச்சார , குடிமை உரிமைகளை அளிக்கக்கூடியதாகும். அந்த உரிமைகள் என்னென்ன ?

1.வாழும்உரிமை

               வாழும் உரிமையானது குழந்தை தன் தாயின் கருவில் இருக்கும் பொழுதே துவங்கி விடுகின்றது.  நம்  இந்திய  அரசாங்கத்தின்  கொள்கையின் படி குழந்தையின் வாழ்க்கையானது தாயின் கருவில் 20 வாரங்களிலேயே துவங்கி விடுகின்றது. வாழும் உரிமையில் குழந்தையின் பிறக்கும் உரிமை, குறைந்தபட்ச தர அளவிலான உணவு, உறைவிடம், உடை மற்றும் கண்ணியத்துடன் வாழும் உரிமை ஆகியனவும் அடங்கி விடுகின்றன.

2.பாதுகாக்கப்படும்உரிமை

               பாதுகாக்கப்படும் உரிமையானது குழந்தைகள் புறக்கணிக்கப்படுதலிலிருந்து காத்தல் , வீடு மற்றும் பிற இடங்களில் சுரண்டல் மற்றும் தவறாக நடத்தப்படுதலிலிருந்து காத்தல் ஆகியன ஆகும். ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேசக் குழந்தைகள் நிதியமான யுனிசெஃபும் இதனையே  வலியுறுத்துகின்றது.

3.பங்கேற்கும்உரிமை

               குழந்தைகளின் பங்கேற்கும் உரிமையானது, குழந்தைகள் சார்ந்து முடிவெடுக்கும் விஷயங்களில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குழந்தைகள் பங்கேற்கும் உரிமையினைப் பெற்றுள்ளமை ஆகும். மேலும், வயதிற்கேற்றாற் போலவும் முதிர்ச்சிக்கேற்றாற் போலவும் பங்கேற்கும் நிலையானது வேறுபடுகின்றது.

4.முன்னேற்ற உரிமை

               குழந்தைகள் அனைத்து விதமான முன்னேற்ற உரிமைகளைக் கொண்டுள்ளார்கள். அவை குறிப்பாக உணர்வு, உடல் மற்றும் மன ரீதியான முன்னேற்ற உரிமைகளை உள்ளடக்கியது. உணர்வுசார் முன்னேற்ற உரிமையானது முறையான வளர்ப்பு மற்றும் அன்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. மன ரீதியான முன்னேற்ற உரிமையானது கல்வி மற்றும் கற்றல் ஆகியவற்றை உள்ளடக்கியது.  அனைத்து உரிமைகளையும் குழந்தைகளுக்கு அளித்திடல் வேண்டும்.


 குழந்தைகளின் உரிமைகளை,அவர்களுக்கு முழுமையாக அளிப்போம். அவர்கள், உரிய முறையில் வளர்வதை உறுதி செய்வோம்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...