12 நவம்பர், 2021

பொதுச்சேவை ஒலிபரப்பு தினம் (Public Service Broadcasting Day)

        



காந்தியடிகளின் உரை👇

   


தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள், டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வருகை புரிந்த நாளான நவம்பர் 12, 1947 ஐ நினைவு கூரும் பொருட்டு  ‘பொதுச் சேவை ஒலிபரப்புதினம்’ (Public Service Broadcasting Day) ஆண்டுதோறும் நவம்பர் 12 அன்று கடைப்பிடிக்கப் படுகிறது. 

      இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது புலம்பெயர்ந்த மக்கள், ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில், தற்காலிகமாகத் தங்கியிருந்தனர்.அவர்கள் அமைதி காக்க வேண்டும் எனக்கூறுவதாக  காந்தியடிகளின் உரை அமைத்திருந்தது.

இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி பிறந்தநாள்

 

காக்கை குருவி எங்கள் ஜாதி’.‘நீள்கடலும்,மலையும் எங்கள் கூட்டம்‘ என்றார் பாரதியார். 

   அதை நிரூபித்த பெருமைக்குரிய, 'இந்தியாவின் பறவை மனிதர்' என்றழைக்கப்படும் சலீம் அலி பிறந்தநாள் இன்று.

    உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரான சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும் இவர் நவம்பர் 12, 1896 அன்று, மும்பையில் பிறந்தார்.

    இந்தியாவில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் புகைப்படத்துடன் பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரர் சலீம் அலி.

    இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர்.

    பறவைகளின் வாழ்வியல் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் பெற்றவை.

    சலீம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி இயற்கைப் பாதுகாப்பிலும் பெருநாட்டம் கொண்டவர்.

     பறவைகளின் நல்வாழ்வும் பாதுகாப்பும் இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை; பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு இன்றியமையாதவை என்ற சூழலியல் சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

    இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) மற்றும் தன் வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) ஆகிய நூல்கள் சலீம் அலியின் முக்கிய நூல்களாகும். Handbook of Indian birds புத்தகம், 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

     இவர், தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்து, அதைப்பற்றிய எல்லா விவரங்களையும் குறித்துக்கொண்டார். 1930 ஆம் ஆண்டு தான் திரட்டிய குறிப்புகளைக்கொண்டு, தூக்கணாங்குருவியின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவை பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இது முனைவர் பட்டத்திற்கான ஓர் ஆய்வேடு போல விளங்கியது. இக்கட்டுரை, பறவையியலில் சலீம் அலிக்குப் பெரும்புகழையும், பெயரையும் ஈட்டித்தந்தது.

    ஏறக்குறைய 65 ஆண்டுகள் இடைவிடாது பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்து, தான் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்ட பணியில் பெரும் சாதனைகளைப் புரிந்த சலீம் அலியை,மக்கள், “பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக்களஞ்சியம்” என்றே அழைத்தனர்.

    1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தப் பறவை மனிதனின் ஆவி, இவ்வுலகை விட்டு பிரிந்தது.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...