மாதங்களில் நான் மார்கழி - பகவான் கிருஷ்ணர்
இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது.
இந்திரனைப் போற்றும் பண்டிகை
தான், மழை பொழிவதால் மட்டுமே, விவசாயம் செழிப்பாக இருக்கிறது என்ற கர்வத்துடன் இருந்தான் இந்திரன். இந்திரனுடைய ஆணவத்தைக் குறைக்க நினைத்த கிருஷ்ணர் இந்திரனின் வழிபாட்டைத் தடுத்து கோவர்த்தனமலைக்கு வழிபாடுகள் செய்வதற்கு மக்களைத் திசை திருப்பிவிட்டார். இதனை கண்ட கோபம் அடைந்த இந்திரன் ஏழு நாள்கள் விடாமல் பெருமழை பொழியச் செய்து மக்களைத் துன்புறுத்தினான்.
மக்களைத் துன்பத்திலிருந்து பாதுகாக்க, கோவர்த்தன மலையைக் குடை போன்று தன்னுடைய ஒற்றை விரலால் பிடித்து இந்திரனின் கர்வத்தை அடக்கினார்.
ஆணவத்தைத் துறந்த இந்திரன், கிருஷ்ணரைப் பணியவே, கிருஷ்ணர், போகிப் பண்டிகையன்று, இந்திரனை(போகியை)க் கொண்டாட வரம் நல்கினார்.
பழையவற்றையும், தேவையற்றதையும் தூக்கி எறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழமையான, துயரமான நினைவுகளை அழித்துப் போக்கும் இப்பண்டிகை "போக்கி' எனப்பட்டது. அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும்.
பல்வேறு தெய்வீகக் குணங்களைத் தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது.
போகியன்று, வீட்டின் கூரையில் வேப்பிலை, பூளைப்பூ மற்றும் ஆவாரம் பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கி இருந்த குப்பைகள், தேவையற்ற பொருட்களை வீட்டிலிருந்து தூக்கி எறிவார்கள். வீட்டிலிருந்து மட்டுமல்ல மனதிலிருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
மார்கழி மாதம், சாதாரணமாகவே சூரியோதய காலத்தில் பூஜை, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. தேவதைகளுக்கான வழிபாட்டுக் காலமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. அந்த சமயத்தில் பூஜை, பஜனை போன்றவை தவிர வேறெதுவும் செய்யும் பழக்கமே கிடையாது.
“மார்கழி மாதம் பக்தி செய்வதற்கே உண்டானது.அதனால் அதனை பீடுடை மாதம் (பெருமைக்குரிய மாதம்)என்பர். காலப்போக்கில் மக்கள் இதை மாற்றி, பீடை மாதம் எனத் தவறுதலாக அழைக்கத் தொடங்கிவிட்டனர். இதற்குப்பின், தை வந்த பிறகு தான் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும்”
மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முன்னோர்களுக்கு பூஜை காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் சிறப்பு. போகிப் பண்டிகையன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளைத் தீயிட்டுக் கொளுத்தி விடுவார்கள்.
இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். போகி தினத்தன்று, பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவார்கள் என்பது முன்னோர்கள் நம்பிக்கை. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய்- வெற்றிலை, பாக்கு, வாழை பழம் வைத்து தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும்.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்,- பவணந்தி முனிவரின் நன்னூல்
வழுவல கால வகையினானே’