20 டிசம்பர், 2021

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் - வள்ளலார்.

      உலகில் வளரும் நாடுகள் மற்றும் ஏழைநாடுகள் சந்திக்கும் இரு சவால்கள் வறுமையும்,வேலைவாய்ப்பின்மையும். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. என்றாலும் வறுமைக்கே இதில் முதலிடம். 

"உலகில் ஏதாவது ஓரிடத்தில், வறுமையால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களது மனித உரிமை மீறப்படுகிறது" என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. 

       சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், மக்களின் உடல்நலம், அவர்களுக்குக் கிடைக்கும் உணவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, உலகளவில் ஆய்வு செய்து, பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. உலகில் ஒன்பது பேரில் ஒருவர், பசியால் வாடுவதாகச் சொல்கிறது அந்தப் பட்டியல். 

      உண்ண உணவின்றி பசி, பட்டினியால் வாடுவதுதான் வறுமை என்ற வரையறையும் இப்போது மாறிவிட்டது. உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், போதிய சுகாதார வசதி, ஊட்டச் சத்து, வருமானம், கல்வி போன்ற வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை தான் வறுமை என இப்போது கூறப்படுகிறது.

     ஐ.நா சபை கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி சர்வதேச மனித ஒருமைப்பாடு தினத்தை அறிவித்தது. வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது, வேற்றுமையில் ஒற்றுமை காண்பது, மனித ஒருமைப்பாடு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவது மற்றும் மனித சமூக மேம்பாட்டுக்கு உதவுவதே இந்நாளின் நோக்கமாகும். 

      "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே" என்ற தாயுமானவரின் வரிகள், அனைவரது மகிழ்ச்சி குறித்தும் தமிழர்களுக்கு இருந்த அக்கறை உணர்வினை உணர்த்துகிறது. இந்தச் சூழலில் அனைத்து நாடுகளும் ஒற்றுமையுடன் பசிப்பிணி போக்கும்முயற்சியில் இறங்கவேண்டும். 

     வறுமை விலகும்போதுதான் மகிழ்ச்சி வரும். மகிழ்ச்சியைத் தொடர்ந்து வளர்ச்சியும் அமைதியும் நிரந்தரமாகும். பசியும் பட்டினியும் இல்லாத பூமி பூக்கட்டும். புன்னகை மட்டுமே இந்த பூமியின் அடையாளமாக மாறட்டும். அதற்கு உலக நாடுகள் கைகோர்க்கட்டும். சர்வதேச மனித ஒருமைப்பாடு தினத்தில், நாம் அனைவரும், இதுகுறித்துச் சிந்தித்தல் அவசியம்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...