செல்வச்செழிப்பும் மேற்கத்திய நாகரிகமும் நிறைந்த மோதிலால் நேருவின் இல்லமான 42 அறைகள் கொண்ட ஆனந்தபவன் மாடியில் விலை உயர்ந்த, மேற்கத்திய உடைகள், இறக்குமதி செய்யப்பட்ட மரச்சாமானங்கள், இன்னபிற ஆடம்பரப் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தன. அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்க காந்தி நாட்டுமக்களுக்கு விடுத்த அறை கூவலையொட்டி ஆனந்தபவனில் அரங்கேறிய இந்தக் காட்சியே சிறு குழந்தையான இந்திரா (இந்து) அறிந்துகொண்ட முதல் அரசியல் நிகழ்வு.
1921-ல் தாத்தா மோதிலால் நேருவின் மடியில் அமர்ந்துகொண்டு, அலகாபாத் நீதிமன்ற நடவடவடிக்கைகளைக் கவனிக்க முயன்றுகொண்டிருந்தார் நான்கு வயது இந்திரா. அதன் இறுதியில் தாத்தாவுக்கும் தந்தைக்கும் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அதுவே அவருக்குப் பழகிவிட்டது. ஒருகட்டத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்கும் இந்திரா, “வீட்டில் எல்லோரும் ஜெயிலுக்குப் போயிட்டாங்க” என்று பெருமிதத்தோடு சொல்லும் அளவுக்கு முன்னேறியிருந்தார்.
நாட்டுக்காக ஒரு குடும்பமே சிறைச்சாலைக்குச் செல்வது பெருமைதான். ஆனால் சிறுமி இந்திராவின் வாழ்வில் நேரு குடும்பத்தின் சிறைவாசம் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். அன்புசெலுத்த, அருகிலிருந்து கவனித்துக்கொள்ள, குடும்பத்தினர் யாரும் இல்லாத சூழல் அந்தச் சிறுமியின் வாழ்வில் தீராத தனிமையையும் மகிழ்ச்சியின்மையையும் ஏற்படுத்தியது. அதுவே அவரை இறுக்கமானவராகவும் மாற்றிவிட்டது. இதன் தாக்கம் அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.
ஐந்து வயது முதல் பதினேழு வயதுவரையுள்ள சிறார்களைக் கொண்டு தானே உருவாக்கிய ‘வானர சேனை’யோடு சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார் இந்திரா. அப்பொழுது அவருக்கு 12 வயது! கடிதங்கள், ரகசிய ஆவணங்களைக் காவல்துறையின் அடக்குமுறையை மீறி தலைவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது, தடியடியில் காயம்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகளின் காயங்களுக்கு மருந்திடுவது என்று நீண்டது ‘வானர சேனை’யின் பணி.
இந்தியா விடுதலை அடைந்ததும் பிரதமர் நேருவின் வீட்டு நிர்வாகம், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை மற்றும் உள்நாட்டு மதக் கலவரத்தில் அகதிகளானவர்களுக்கு காந்தியோடு சேர்ந்து பணியாற்றுதல், தனது தந்தையோடு வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணங்களை மேற்கொள்ளுதல் ஆகிய முக்கியப் பொறுப்புகளை இந்திரா ஏற்கவேண்டியிருந்தது. இது அவருக்கு அரசியல், வெளியுறவுக் கொள்கை, ராஜதந்திரம் தொடர்பான பயிற்சியாக அமைந்தது. அதீத கடமையுணர்ச்சியோடும் அர்ப்பணிப்போடும் இந்திரா அவற்றில் ஈடுபட்டார்.
நேரு மரணமடைந்தபோது, ஆனந்த பவனம் தேசத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. குடியிருக்க வீடுகூட இல்லாத நிலையில்தான் நேரு, இந்திராவை விட்டுச் சென்றிருந்தார். நேருவின் மரணத்துக்குப் பிறகு துயரத்தில் ஆழ்ந்திருந்த இந்திரா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர், பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவர்களின் வற்புறுத்தலால் சாஸ்திரி அமைச்சரவையில் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரானார்.
மூன்றாண்டுகளில் சீனா, பாகிஸ்தான் என இரண்டு போர்கள், நேரு, சாஸ்திரி இருபெரும் தலைவர்களின் மரணம், மழையின்மை, வறட்சி, உணவுப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி கையிருப்பின்மை, உலக சந்தையில் உணவுப் பொருட்களை வாங்க முடியாத சூழல், தானியங்களுக்கு அமெரிக்க பொதுச்சட்டம் என்று மிகவும் நெருக்கடியான, சவால்கள் மிகுந்த சூழ்நிலையிலேயே இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர் மானியத்தை ஒழித்தது, உணவுக்கு அமெரிக்காவைச் சார்ந்திருந்த பசியும், பஞ்சமுமான ஒரு தேசத்தைப் பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது, துணிச்சலோடும் ராஜதந்திரத்தோடும் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தைப் பிரித்துத் தனி நாடாக்கியது, வல்லரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அணுகுண்டு சோதனை நிகழ்த்தியது, நேருவின் தொடர்ச்சியாக விஞ்ஞான, அறிவியல் தொழில்நுட்பத் துறையை வளர்த்தெடுத்தது என்று இந்திராகாந்தியின் சாதனைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.
இந்திய வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டங்களை அசாத்திய துணிச்சலோடு கையாண்டு இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் சென்ற பெருமை அவருக்கு உண்டு.
இந்தியாவின் இரும்புப் பெண்மணி, வலிமையான பிரதமர் நாட்டிற்காக 66 வயதில் தனது உயிரையே அர்ப்பணித்தார். உயிரைவிட கொள்கை முக்கியம் என்பதை நிரூபித்தார். ஆக்ஸ்போர்டில் நவீன வரலாறு படிக்கச் சென்று, முடிக்காமல் தந்தையை கவனித்துக்கொள்ள பாதியில் திரும்பிவந்த இந்திரா, தானே ஒரு வரலாறானார்!
இந்திரா மறையும் முன்னர் கலந்து கொண்ட கூட்டத்தில்,
“I am alive today, I may not be there tomorrow. I shall continue to serve till my last breath and when I die every drop of my blood will strengthen India and keep a united India alive.” என்றார்.
இந்திராவின் மரணம், அவரின் ரத்தத்தை மட்டுமல்ல, எளியவர்களின் ரத்தத்தையும் சேர்த்தே சிந்தச்செய்தது !