31 அக்டோபர், 2021

தேசிய ஒற்றுமை தினம் - வல்லபபாய் படேல் பிறந்த தினம்



• ஜெர்மனியை ஒன்றிணைத்தவரும், இரும்புத் தலைவர் என்று போற்றப்பட்டவருமான ஆட்டோ வான் பிஸ்மார்க் போன்று, இந்தியாவை ஒன்றுபடுத்தி, ஒரே நாடாகக் கட்டமைத்தவர் சர்தார் வல்லபபாய் படேல்.அதனால் இவரை இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கிறோம்.

• இவர், குஜராத்தில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்தபோது உடம்பில் கட்டி வந்தது. நாட்டு வைத்தியரிடம் அழைத்துப் போனார்கள். இரும்புக் கம்பியை சூடாக்கி, கட்டியை உடைக்க முற்பட்ட வைத்தியர், சிறுவனின் பிஞ்சு முகத்தைப் பார்த்து தயங்கினார். ‘ஐயா! சீக்கிரம் வையுங்கள். சூடு ஆறிவிடப்போகிறது’ என்றதாம் அந்த இரும்புக் குழந்தை.

• படிப்பில் கெட்டிக்காரர். சட்டக் கல்வி முடித்து வழக்கறிஞர் ஆனார். நல்ல வருமானம் வந்ததால், முதலில் தன் அண்ணனை லண்டன் அனுப்பி, சட்ட மேற்படிப்பு படிக்க வைத்தார். அவர் திரும்பியதும் தானும் இலண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

• அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டு, வக்கீல் தொழிலை உதறி, சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.

• குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கரப் பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்குக் கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால், காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது!

• பர்தோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாகிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அவரது பங்களிப்பால் கவரப்பட்ட காந்தியடிகளால் ‘சர்தார்’ என்று அழைக்கப் பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போயின.

• வட்டமேஜை மாநாட்டுத் தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.

"சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய்" என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

• நாடு முழுவதும், ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த போது, அத்தகைய 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான், உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.

• அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக 'சகல' வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும், இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.

• இத்தகு மனவுறுதி படைத்த வல்லபபாய் படேல் தனது 75 ஆம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இவருக்காக 597 அடியில் (182 மீ) உலகிலேயே மிகப்பெரிய சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது.

•  “இந்தியாவின் பிஸ்மார்க்”,   “இந்தியாவின் இரும்பு மனிதர்” ,  “சர்தார்” வல்லபபாய் படேலின் 146 ஆவது பிறந்தநாள் - தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

ஒன்றுபட்ட இந்தியாவே, உலகிலுள்ள ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மைக் காக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

சர்வதேச குடும்ப தினம் - 2026

     பன்னாட்டுக் குடும்ப நாள் அல்லது உலகக் குடும்ப நாள் ( International Day of Families ) என்பது ஆண்டுதோறும் மே 15 ஆம் நாள் கொண்டாடப்படும...