லா.ச.ரா எனும் மந்திரவாதி
திருச்சி மாவட்டம் லால்குடியில் 1916 அக்டோபர்30 ஆம் தேதி பிறந்தவர், ராமாமிர்தம். எழுத்துலகில் லா.ச.ரா., என்றழைக்கப்பட்டார். இவர், காஞ்சிபுரம் அருகேயுள்ள அய்யம்பேட்டையில் வளர்ந்தார். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றினார்.
தன் 16ஆவது வயதிலேயே கதை எழுதத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய கதைகள், 'மணிக்கொடி' இதழில் பிரசுரமாயின. ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஆறு நாவல்கள், இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்கள் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.
பச்சைக்கனவு, கஸ்தூரி, சுமங்கல்யன், பாற்கடல் போன்ற கச்சிதமான யதார்த்தக் கதைகளைப் படைக்கும் திறன் கொண்ட இவர், படைப்பின் கட்டற்ற போக்குக்கு வழி விட்டுக் கதையின் கட்டமைப்பைத் தியாகம் செய்யவும் தயங்குவதில்லை.
ஒவ்வொரு படைப்பும் எதைக் கோருகிறதோ அதைத் தருவதே ஒரு படைப்பாளியின் வேலை என்று நம்புபவர் லா.ச.ரா. அதனால்தான் அவரது பல கதைகளின் குவிமையம் சிதறுகிறது. சிறுகதைகளின் ஆதார பலமான குவிமையம் சிதறும்போது அதைப் பின் தொடர்ந்து செல்வது வாசகருக்குச் சிரமமாக இருக்கும். ஆனால், கிளை பிரியும் பாதைகளில் வெளிப்படும் தரிசனங்கள் படைப்பின் ஒவ்வொரு வரியையும் மதிப்பு வாய்ந்ததாக ஆக்குவதையும் உணரலாம்.
ஒளிக் குவியத்தின் அழகைப் பல படைப்புகளில் தரும் இவர், ஒளிச் சிதறலின் எண்ணற்ற அழகுக் கோலங்களையும் காட்சிப்படுத்துகிறார். இத்தகைய எழுத்தைப் படிக்கும்போது கதையம்சத்தின் எல்லைகளைத் தாண்டி வாசக மனம் பயணிக்கிறது. அந்தப் பயணம் படைப்பாளியின் பயணத்துக்கு இணை யான பயணமாகி, படைப்பின் தரிசனத்தை விரிவு படுத்துகிறது.
‘உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்’ என்று ஒருமுறை எழுதிய லா.ச.ரா.
ஒவ்வொரு சொல்லுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை உணர முடியும்.
‘வாசனாதி திரவியங்களின் மணத்தைத் தமிழாக்கிக் கொண்டுவந்தவர் லா.ச.ரா.’ என்று சுந்தர ராமசாமி எழுதியிருப்பது இவரது சொல்லழகு தரும் மயக்கத்தைக் கச்சிதமாக உணர்த்துகிறது.
இவரது படைப்புகள், இந்திய மற்றும் அயல் நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவரது,
'சிந்தாநதி' எனும் வரலாற்று நூல் 1989ல், 'சாகித்ய அகாடமி' விருதைப் பெற்றது.
சென்னையில் 2007 இல், தான் பிறந்த அதே அக்டோபர் 30ஆம் தேதி, தன் 92ஆவது வயதில் காலமானார்.
எழுத்தாளர் லா.ச.ரா.பிறந்த மற்றும் காலமான தினம் இன்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக