எங்களுக்கும் காலம் வரும்; காலம் வந்தால் வாழ்வு வரும்
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 23ஆம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்த நாளானது, கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து 21 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படுவதற்குத் தனிப்பட்ட காரணங்கள் உண்டு.
பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979ஆம் ஆண்டு, இந்தியாவின் 7 ஆவது பிரதமராகப் பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். பின்னர் 1980ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தைக் கொண்டு வந்தார். அதேசமயம் நிலச்சுவான்தார்கள், வட்டிக்குப் பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங்.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்திற்குட்பட்ட நூர்பூரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தார். உத்தரப்பிரதேச அரசில் வேளாண்துறை மற்றும் வனத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த நிலச் சீர்திருத்தங்களில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். கூட்டுறவு பண்ணைகள் இந்தியாவில் வெற்றி பெறும் என்று சரண்சிங் கருத்து தெரிவித்தார். சரண்சிங் அவரது குறுகிய பதவிக்காலத்தில் ஒரு நாள்கூட மக்களவையை சந்திக்காத இந்தியாவின் ஒரே பிரதமர் என்ற சாதனையையும் புரிந்துள்ளார்.
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில், எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதையும், உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தியும் விவசாயிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், தேசிய விவசாயிகள் தினத்தன்று அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது
'ஜமீன்தாரி முறை ஒழிப்பு', 'கூட்டுறவு பண்ணை முறை', 'இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்', 'வேலை செய்பவர்களுக்கு நிலம்' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவர்,1987 மே 29 ஆம் தேதி இயற்கை எய்தினார். புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 'கிசான் காட்' (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது.
'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றார், திருவள்ளுவர். 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்றார் பாரதி. அப்பெருமக்கள் போற்றிய வேளாண்மையை நாமும் போற்றுவோம். விவசாயிகள் துயர் நீக்கவும், தொழில் உயரவும், வருமானம் பெருகவும், வழிகாணவும், துணைநின்று விவசாயிகள் வாழ்வு வளம் பெற என்றும் பாடுபடுவோம்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அனுபவிக்கலாம் ஆனால் ஒருபோதும் அது உணவிற்கு மாற்றாக இருக்க முடியாது. எனவே, விவசாயிகள் சேற்றில் கால்வைத்தால்தான், நாம் நிலவில் மட்டுமல்ல, எங்கும் கால் பதிக்க முடியும். இதை உணர்ந்துகொண்டு விவசாயிகளின் வியர்வைக்கும், உழைப்புக்கும் மதிப்பளித்து எந்நாளும் அவர்கள் வாழ்வு செழிக்கப்பாடுபடுவோம் என உறுதியேற்போம்.
முடிவு விவசாயிகள் கையில்...