20 ஜனவரி, 2022

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்

     தென்னிந்தியாவின் ஜான்சிராணி என காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர், ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி, சுதந்திரப் போராட்டப் பெண் தியாகி அஞ்சலை அம்மாள். 

    கடலூர் முதுநகரில்,  ஓர் எளிய குடும்பத்தில் 1890 ஆம் ஆண்டில் பிறந்தவர் சுதந்திர போராட்டத் தியாகி அஞ்சலை அம்மாள். ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து, அஞ்சலையம்மாள் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

    1921 இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தனது குடும்பச் சொத்தாக இருந்த நிலங்களையும், வீட்டையும் விற்று இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்காக பணத்தைச் செலவிட்டார். 

    1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்தில் இந்திய விடுதலைக்காக போராடிய பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொலை செய்யக் காரணமாயிருந்த நீலன் என்பவனுக்குச் சென்னையில்,சிலை இருந்தது. இதை அகற்றுவதற்காக, சோமயாஜீலு தலைமையில் நடந்த போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார் அஞ்சலையம்மாள்.

    தான் மட்டுமல்லாமல் தனது ஒன்பது வயது மகள் அம்மாக்கண்ணுவையும் போராட்டத்தில் கலந்துகொள்ள வைத்தார். வெள்ளையர் அரசு, இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    தனது ஒன்பது வயதுக் குழந்தையைச் சிறையிலேயே வளர்த்தார். சிறையில் இருந்த அம்மாக்கண்ணு, அஞ்சலையம்மாள் இருவரையும் காந்தியடிகள் சிறைக்குச் சென்று  பார்வையிட்டுள்ளார். அம்மாக்கண்ணு என்ற பெயரை லீலாவதி என்று மறுபெயரிட்டு தன்னுடன் வார்தா ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தின் போது அஞ்சலை அம்மாள் கடுமையாகக் காயமடைந்தார்.

    1931 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரசு கூட்டத்திற்கு, அஞ்சலையம்மாள் தலைமை தாங்கினார். 1932 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் பங்கெடுத்து, கைதாகி, சிறைச் செல்லத் தயாரானார் அஞ்சலையம்மாள். வேலூர் சிறைக்குள் அவர் நுழைந்தபோது நிறைமாத கர்ப்பிணி. பலரும் அவரைத் தடுத்தும் இந்திய விடுதலைக்காக சிறைச் செல்ல தயக்கம் காட்டவே இல்லை. 

    சிறைக்குள், கடும் வேதனையை அனுபவித்தார். ஒரு மாதம் அவகாசம் கேட்டு வெளியே சென்று வீர மகனைப் பெற்றெடுத்தார்.பிறந்து இரு வாரங்களே ஆகியிருந்த பச்சிளம் குழந்தையோடு மீண்டும் சிறை சென்றார். கைக் குழந்தையோடு சிறை வாசத்தை ஏற்ற அவரின் உறுதி, அவருக்குத் தண்டனை கொடுத்தவர்களையே கண்டிப்பாக அசைத்திருக்கும். எந்தச் சூழலிலும் தாயக விடுதலைக்கான தன் பயணத்தில் பின் வாங்கத் தயாராக இல்லை அஞ்சலையம்மாள்.

    ஒருமுறை காந்தியடிகள், கடலூருக்கு வந்தபோது, அவரை அஞ்சலையம்மாள் சந்திக்க முயன்றார். ஆங்கிலேய அரசாங்கம்,  அஞ்சலையம்மாள், காந்தியடிகளைப் பார்க்கத் தடை விதித்தது. ஆனால் அஞ்சலையம்மாள், பர்தா அணிந்து, ஒரு குதிரை வண்டியில் வந்து, காந்தியடிகளைச் சந்தித்தார். இத்துணிவைக் கண்டு, காந்தியடிகள் இவரைத்  “தென்னிந்தியாவின் ஜான்சி ராணி” என்று அழைத்தார்.

    1947 இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், அஞ்சலையம்மாள் மூன்று முறை தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டுக்காகப் பாடுபட்ட தனக்கு தியாகி ஓய்வூதியம் வேண்டாம் என மறுத்தவர் அஞ்சலை அம்மாள்.மக்களுக்கான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர கடும் முயற்சி எடுத்தார். 

    அவ்வாறு எடுக்கப்பட்ட முயற்சிகளுள் ஒன்றுதான் தீர்த்தாம்பாளையத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்த்தது. கடுமையான குடிநீர்ப் பஞ்சத்துக்குள்ளான அக்கிராமத்து மக்கள், நீண்ட தொலைவு சென்று நீர் பிடித்து வர வேண்டியதாயிற்று. 

    அந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளியாகத்தான் புவனகிரிச் செல்லும் வீராணம் வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்காலை உருவாக்கி தீர்த்தாம்பாளையத்துக்கு கொண்டு வந்தார். குடிநீர்ப் பிரச்னையும் தீர்ந்தது. அதற்கான நன்றிக் கடனாகவே அஞ்சலை வாய்க்கால் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

    1961 ஆம் ஆண்டு, சீ-மூட்லூர் பகுதியில்,தமது 71 -வது வயதில் 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி திங்கள் கிழமை அஞ்சலை அம்மாள் காலமானார்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...