" திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்ற அருந்தமிழ்க் கவிஞர் ஔவையாரின் பாடலுக்கேற்ப, மனிதன் உயிர் வாழ, நாடு விட்டு நாடு செல்வது இயல்பு. வெளிநாடு வாழ் இந்தியர் (Non-Resident Indian - NRI) எனப்படுவோர், இந்தியாவில் வாழாமல், வேறொரு நாட்டிற்குப் புலம்பெயர்ந்த இந்தியக் குடியினர்ஆவர்.
இவர்கள் இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள். இந்திய அரசு, வெளிநாட்டிற்குப் புலம்பெயர்ந்து, அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்களையும், அத்தகைய பெற்றோர்களின் குழந்தைகளையும் இந்திய வம்சாவளி நபர் (Person of Indian origin, PIO) என்று வகைப்படுத்துகிறது நமது நாடு. இவர்களுக்குக் கடவுச்சீட்டை ஒத்த, பிஐஓ அட்டை வழங்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து,கல்வி பெறவும், பொருள் சேர்க்கவும், வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள், காலப்போக்கில் அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்வது இயல்பாகி விட்டது. அங்கு வாழும் இந்தியர்களின் உறவை, நாம் இழந்துவிட இயலாது. அவர்களையும் நம் நாட்டின் உணர்வோடு இணைக்க வேண்டும் என முடிவு செய்த அன்றைய பிரதமர் வாஜ்பாய் 2003 இல் ஜனவரி 9 ஆம் தேதியை, வெளிநாடு வாழ் இந்தியர் தினம் என அறிவித்தார்.
அதன் பிறகு ஆண்டுதோறும் இந்தத் தினம் கொண்டாடப் படுகிறது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாள் ஜனவரி 9, 1915. அந்நாளே, வெளிநாடுவாழ் இந்தியர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது. .
விழாக் கொண்டாட்டத்தின்போது வெளிநாடுவாழ் இந்தியர்களில் சிறந்தவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. பிரவசி பாரதிய சம்மான் என்பது வெளிநாடுவாழ் இந்தியருக்கான விருதாகும்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி மத்திய, மாநில அரசுகளுடன் கலந்துரையாடவும், தொடர்புகளை மேற்கொள்ளவும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயவும் இவ்விழா உதவுகிறது.