தொழுநோய் ஹேன்சனின் நோய் என்றும் அழைக்கப்படும்.
தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தவும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரேசில், இந்தோனேசியா, இந்தியா ஆகியவையே அதிக நோய்பாதிப்புள்ள நாடுகள்.
தொழுநோய் என்றால் என்ன?
மைக்ரோ பேக்டீரியம் லெப்ரே (எம். லெப்ரே) என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்று நோயே தொழுநோய். எம்.லெப்ரே மிக மெதுவாகப் பெருகுவதால் தொற்று ஏற்பட்டு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் ஆகிய நீண்ட நாட்கள் கழித்தே நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்த நோய் பொதுவாகத் தோல், நரம்பு விளிம்புகள், மேல் மூச்சு மண்டலத்தின் சளிசவ்வுகள் மற்றும் கண்களையே பாதிக்கின்றன.
தொழுநோய் பாசிபெசில்லரி (PB) அல்லது மல்டி பெசிலரி (MB) என நீள்நுண்ணுயிரிகளின் தொகையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும். பாசிபெசில்லரி வகையில் ஒரு சில (அதிகபட்சம் 5) தோல்புண்களே காணப்படும் (வெளிறிய மஞ்சள் அல்லது சிவப்பு). மல்டி பெசிலரி வகையில் கூடுதல் (ஐந்துக்கும் மேல்) தோல் புண்கள், முடிச்சுகள், காறைகள், தோல் தடிப்புகள் அல்லது தோல் ஊடுருவிகள் காணப்படும்.
நோய் எவ்வாறு பரவுகிறது?
சிகிச்சை பெறாத தொழுநோயாளியே, இதுவரை அறிந்த நோய் பரவலுக்கான,ஒரே காரணம். தொழுநோயாளியின் உடலில் இருந்து நோய்க்கிருமிகள் பரவும் முக்கிய வழி சுவாச மண்டலமே: குறிப்பாக மூக்கு மூலமே அதிகம் பரவுகிறது.
சிகிச்சை பெறாதவர்களோடு தொடர்ந்து தொடர்பு வைக்கும் போது நோய்க்கிருமிகள் வாய் அல்லது மூக்குத் துளி வாயிலாக சுவாச மண்டலத்துக்குள் நுழைகிறது. உடலுக்குள் நுழைந்த நுண்ணுயிரிகள் நரம்புகள் மற்றும் தோலை அடைகின்றன.
ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் நரம்புகளுக்கு மேலும் சிதைவு ஏற்பட்டு நிரந்தர ஊனம் உண்டாகலாம்.
தொழுநோய் - அறிகுறிகள்
கீழ்க்காணும் குறிகளும் அறிகுறிகளும் தென்பட்டால் தொழுநோயாக இருக்கக் கூடும்.
அடர் நிறத் தோல் உடையவர்களுக்கு வெளிறிய தோல் திட்டுகளும், மங்கல் தோல் உடையவர்களுக்கு அடர் அல்லது சிவப்புத் திட்டுக்களும் இருக்கும்
தோல் திட்டுக்களில் உணர்வு குறைதல் அல்லது இழப்பு
கை அல்லது காலில் உணர்வின்மை அல்லது கூச்சம்
கை, கால் அல்லது இமை பலவீனம்
நரம்புகளில் வலி
முகம் அல்லது காது மடலில் வீக்கம்
கால் அல்லது கையில் வலியற்ற காயம் அல்லது தீப்புண்
சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களுக்குக் கண்கள், கைகள் பாதிக்கப்படுகின்றன. தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். மூக்கு, வாய் மூலம் இந்நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்நோய், தொற்றுநோய் என்பதால், தொழுநோயாளிகளை, நன்கு கவனிக்க வேண்டும். எனவே தொழுநோய் என்பது அறியப்பட்டவுடன் உடனடி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரையின்படி Multi Drug Therapy எனப்படும் சிகிச்சை தற்போது தொழுநோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தொழுநோய் பரவுதல் தடுக்கப்படுகிறது.
பன் மருந்து சிகிச்சை (MDT) என்றால் என்ன?
தொழு நோயை எந்த ஒரு தனி மருந்தாலும் குணப்படுத்த முடியாது. பல மருந்துகளின் கூட்டு சிகிச்சையே எம்டிடி.
தொழு நோயின் வகையைப் பொறுத்து ஒரு நன்கு பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரிடம் இருந்து முழு வேளை எம்டிடியை உட்கொள்ள வேண்டும்.
எம்டிடி இலவசமாகப் பெரும்பான்மையான மருத்துவ நிலையங்களில், கிராமப்புறங்களில் கூட, கிடைக்கிறது.
முக்கியச் செய்திகள்
தொழுநோய் பன்மருந்துச் சிகிச்சையால் குணப்படுத்தக் கூடியது.
தொடர்ந்து பன்மருந்து சிகிச்சையை மேற்கொள்ளும் போது நோய் முற்றிலுமாகக் குணப்படுத்தப்பட்டு, ஊனங்கள் தவிர்க்கப்பட்டு, பரவலும் தடுக்கப்படுகிறது.
ஆரம்பக்கட்ட நோயறிதல், தகுந்த சிகிச்சை மற்றும் முழுவேளை மருந்து தொழு நோயால் ஏற்படும் ஊனத்தைத் தடுக்கும்.
தொழுநோய் மரபுவழி நோயல்ல; இது பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்குக் கடத்தப்படுவதில்லை.
கைகுலுக்குதல், சேர்ந்து விளையாடுதல் அல்லது சேர்ந்து பணிபுரிதல் ஆகிய வழக்கமான நடவடிக்கைகள் மூலம் தொழுநோய் பரவுவதில்லை. சிகிச்சை பெறாத நேர்வுகளோடு நெருங்கியத் தொடர்பு வைத்துக் கொள்ளுவதால் பரவக் கூடும்.
தொழுநோய், பழைய பாவத்தாலோ கெட்ட நடத்தையாலோ ஏற்படுவதில்லை. மைக்கோபாக்டீரியம் என்ற ஒரு நுண்ணுயிரியால் ஏற்படுகிறது.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கண்ணியத்தோடு வாழ உரிமை உண்டு. மனிதாபிமானத்தோடு அவர்களை நடத்துவதே நாம் செய்யவேண்டிய இன்றியமையாத கடமை.