30 ஜனவரி, 2022

மற(றை)க்கப்பட்ட, தியாகிகளின் விளைநிலம் - கண்ணம்பாளையம்

 தியாகிகள் தினம்
------------------------------------------------------------------

    மற(றை)க்கப்பட்ட, தியாகிகளின் விளைநிலம் கண்ணம்பாளையம்

    கோவை மாவட்டத்தில், கண்ணம்பாளையம் என்றொரு கிராமம். இது தியாகத்தின் விளைநிலம். ஓர் ஊரே விடுதலைக்காகக் கிளர்ந்தெழுந்தது. நாட்டு விடுதலைக்காக, சுமார் 20 பேர், தீவிரப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    
    ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் அணிதிரண்டு, போராடிய வரலாறு இவ்வூருக்குண்டு.சூலூர் விமானப்படைத் தளத்தைத் தீக்கிரையாக்கியதற்காக, அலிப்பூர் உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

கண்ணம்பாளையத்தின் போற்றுதலுக்கும்,
வணக்குதலுக்கும் உரிய தியாகிகள்

    இன்னும் சில விடுதலைப்போராட்ட வீரர்கள், போராட்டம் தொடர்ந்து நடைபெறவேண்டி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் சிறைசெய்யப்பட்டனர். இன்றளவும் அவ்வூரில், தியாகிகளை மறவாது ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும், பள்ளி மாணவர்களது ஊர்வலம் - நாட்டுபற்றுடன் கூடிய கோஷங்கள், பதாகைகள் என நடைபெற்று, இறுதியில் தியாகிகள் மேடையில் முடிவடையும். 

    அங்கு, அலங்கரிக்கப்பட்ட தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்ச்சான்றோர்கள், அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் மரியாதை செலுத்துவர்.நாட்டு விடுதலைக்காகப் போராடிய இவர்கள் போன்றோரது ம(றை)றக்கப் பட்ட வரலாறுகளை வெளிக்கொணர்ந்து நாடறியச் செய்யவேண்டியது நாட்டுபற்றுடைய ஒவ்வோர் இந்தியக் குடிமகனுடைய கடமையும் ஆகும்.

------------------------------------------------------------------------------------

                    இந்திய விடுதலைக்காக அயராது பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் தேசத்தந்தை மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்குத் தெரிவிப்பதே இந்நாளின் நோக்கம்.

    “அவர்கள் முதலில் வாள்கள் கொண்டு வந்தார்கள். நாங்கள் துப்பாக்கிகள் கொண்டு அவர்களை வீழ்த்தினோம்”
 “அவர்கள் துப்பாக்கி பயிற்சி பெற்று வந்தார்கள். நாங்கள் வெடிகுண்டுகளால் தாக்கினோம்”
 “அவர்கள் வெடிகுண்டுகள் வீசினார்கள். நாங்கள் பீரங்கி கொண்டு அவர்களை வீழ்த்தினோம்”
 “இறுதியாக அவர்கள் அகிம்சை என்ற ஆயுதம் ஏந்தினார்கள். இதுவரை உலகிலே அகிம்சையை வெல்ல எந்த ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. நாங்கள் வெளியேற வேண்டியதாகிவிட்டது'' 
என்று ஆங்கிலேய அதிகாரி ஒருவர் நமது சுதந்திரப் போர் குறித்து பேசியதாகச் செய்தி உண்டு.

    அந்த அகிம்சைதான் மகாத்மாவை உலகின் தலைவராக மாற்றியது. எல்லோரிடமும் எளிதாகக் கொண்டு சேர்த்தது. இந்தியாவின் தேசத் தந்தை என்று   போற்றப்படும் அளவுக்கு அவரை உயர்த்தியது. 

    இருப்பினும்,அயல் நாட்டில் இருந்து படை திரட்டி பரங்கியரைப் பதறவைத்த சுபாஷ்சந்திர போஸ், ஆவேசம் கொண்ட இளைய பட்டாளமாக நின்ற மாவீரன் பகத்சிங் , வீரவாஞ்சிநாதன், கொடியினைத் தன் இறுதிமூச்சு இருக்கும்வரை கீழேவிழாமல் தடுத்து, தனது இன்னுயிர் ஈந்த கொடிகாத்த குமரன், இந்தியாவைக் குறைத்து மதிப்பிட்ட ஜெர்மனி அதிபர் ஹிட்லரை மன்னிப்புக் கேட்க வைத்து, ஜெய்ஹிந்த் என்ற சொல்லை இந்திய திருநாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்த ஜெய்ஹிந்த் செண்பகராமன், ஆங்கிலேயருக்கு எதிராகக் கப்பல் கம்பெனி நிறுவி, அதை இயக்க முயற்சித்த,மாவீரர் வ.உ.சிதம்பரனார், மாவீரன் உத்தம்சிங் போன்றோர்களது தியாக வரலாறுகளை எளிதாக மறந்து விட இயலாது.

    விடுதலைக்குப் போராடிய யாவரும், தனக்கான ஜாதி, மத, இன அடையாளங்களை துாக்கி எறிந்து இந்தியராகவே நின்றனர். அவர்களின் விருப்பமான  ஒரு தேசத்தைப் படைப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

'இமயச் சாரலில் ஒருவன் இருமினால்,குமரியில் வாழ்பவன் மருந்துகொண்டு ஓடுவான்'

    என்ற பாரதிதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள். இங்கே நமக்கான அடையாளம் நமது தேசம் மட்டுமே. தேசத்தில் இருப்பவர்கள் அனைவருமே நமது உறவுகள்தான்.தேசத்தையும் தாண்டி மனிதம் வளர்த்த நாடு நமது நாடு. 

    அத்தகு தியாக தீபங்களை இந்நாளில் நினைவுகூர்வுகூர்ந்து நன்றிகளைக் காணிக்கையாக்குவோம்.

ஜெய்ஹிந்த்

1 கருத்து:

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...