எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நினைவு நாள்
எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்டுமே இலக்கியமல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தவர், எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.
1925-ம் ஆண்டு முசிறியில் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்பே 15 வயதில் ராஜத்துக்கு, அந்தக் காலத்தைய வழக்கப்படி திருமணம். கணவர் முத்துகிருஷ்ணன் மின்துறைப் பொறியாளர் என்பதால், தொடர்ச்சியாகத் தமிழகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் சூழல் அமைய, மனைவி ராஜமும் மகிழ்வுடன் பயணமானார். புதிய ஊர்களில், மனைவியின் தனிமையை விரட்டும் வகையில் எழுத ஊக்குவித்தார் முத்துகிருஷ்ணன்.
சார்லஸ் டிக்கென்ஸ், ஜேன் ஆஸ்டென் என ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து உள்வாங்கத் தொடங்கினார். திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் கழித்து, 1944-ம் ஆண்டு ராஜம் கிருஷ்ணனின் முதல் ஆங்கிலச் சிறுகதை இந்திய சிவிக் கார்ப்ஸ் நூலில் பதிப்பிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 20.
முறையான பள்ளிக்கல்வியற்ற, கல்லூரியில் காலடித்தடம்கூடப் பதிக்காத ராஜம், உலகமே போற்றும் எழுத்தாளராக வளர, அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும்தான் காரணம்.
200 சிறுகதைகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், 20 வானொலி நாடகங்கள், 20-க்கும் மேற்பட்ட புதினங்கள் எழுதி தமிழ் மொழியின் போற்றத் தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ராஜம்.
1946-ம் ஆண்டு முதல் ராஜம் கிருஷ்ணனின் தமிழ் சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகத் தொடங்கின. அவரது கதைமாந்தர்கள் அன்றாடம் நாம் காண்பவர்களாக, கடந்து செல்பவர்களாகவே இருந்தார்கள். பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி, அவர்களது போராட்டங்களைச் சொல்பவையாக இருப்பவை ராஜத்தின் படைப்புகள்.
முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே. சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமையும் பெற்றார்.
'நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன், சோவியத்லாண்ட் நேரு உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். கடந்த 2014 அக்., 20ம் தேதி தன் 89 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.