சர்வதேச தேயிலை தினம் ஒவ்வோராண்டும் டிசம்பர் 15 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆங்கிலேயரின் ஆட்சியில் முதலாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் நடத்திய முதலாவது சம்பளப் போராட்டத்தினை நினைவு கூறும் விதமாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் தேதியை அறிவிக்கலாம் என்று முடிவு செய்தனர்.
2004 மற்றும் 2005ல் முறையே இந்தியாவின் மும்பை மற்றும் பிரேசிலின் போர்டோ அலெக்ரி போன்ற இடங்களில் நடைபெற்ற உலகச் சமூக மன்றத்தில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களுக்கிடையேயான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 15 ஆம் தேதியைச் சர்வதேச தேயிலை தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
முதல்முறையாக 2005 டிசம்பர் 15ஆம் தேதி புதுடெல்லியில் இத்தினம் கொண்டாடப்பட்டது. தேயிலை உற்பத்தியாளர்கள், தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் போன்றோரின் மீது உலகத் தேயிலை வர்த்தகம் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும், தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலையைப் பயன்படுத்துவோர் எதிர்நோக்கும் பிரச்னைகளை, அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் கொண்டு செல்வதே இத்தினத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
உலகத் தேயிலை உற்பத்தியில், நம் நாடு, 2 ஆம் இடம் பெறுகிறது.தென் மாநிலங்களில், தமிழகம், 70 சதவீதம், கேரளா, 26 சதவீதம், கர்நாடகா, 4 சதவீதம் அளவுக்கு தேயிலையை உற்பத்தி செய்கின்றன.
தேநீர் உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் பானமாக உள்ளது. உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அருந்தப்படுவது தேநீர் என கூறப்படுகிறது. தேயிலைச் செடியில் உள்ள தளிர் இலைகளில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. சூடான நீரில் தேயிலைப் பொடியைக் கலந்து தேனீராக அருந்துகின்றனர். சிலர் தேநீரைக் குளிர்வித்தும் அருந்துகின்றனர்.
தேயிலையைச் சர்வ நோய் நிவாரண பானமாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தமையால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன.
தேயிலை வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, தென்மேற்கு சீனா, திபெத் ஆகியவை அடங்கிய பகுதிகளில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இங்கிருந்து உலகின் 52 நாடுகளுக்கு, தேயிலை அறிமுகமானது.
ஆனால், சீனாவின் யுனான் மாகாணமே தேநீரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இங்குதான் முதன்முதலில் தேயிலையை நீரில் ஊறவைத்து குடிப்பது சுவையானது என மனிதன் அறிந்து கொண்டான்.
தேநீர்களுள் பலவகைகள் இருந்தாலும், அதை அளவுடன் நுகர்வதே நம் உடலுக்கு நன்மைபயக்கும் என்பதை மனத்துள் கொள்வோம்.