1 பிப்ரவரி, 2022

பம்மல் சம்பந்தம் பிறந்தநாள்

     தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவருமான பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார் பிறந்த தினம் இன்று.

    சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பிறந்தவர். இவரது அப்பா தமிழாசிரியராக, பிறகு பள்ளி ஆய்வாளராக இருந்தவர். புத்தகங்களையும் வெளியிட்டுவந்தார். அவர்கள் வீட்டில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன.

    சிறு வயது முதலே, புத்தகங்களை ஆர்வத்துடன் படிப்பார். புராணக் கதைகளை அம்மா கூறுவார். கோவிந்தப்பர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரியில் பயின்றார்.

     'நாடக உலகப் பிதாமகர்' என்று அழைக்கப்பட்டு நடிகர்களால், நாடகத் தயாரிப்பாளர்களால் போற்றப்பட்ட சம்பந்த முதலியார், பிறந்த சிற்றூரான பம்மலுக்குப் பெருமையும் புகழும் சேர்த்தவர்.  சென்னை, மாநிலக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். சட்டம் படித்து வழக்குரைஞரானார்.

    அது 1891 ஆம் வருடம். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அப்போது புதிதாகத் திறக்கப்பட்ட விக்டோரியா பப்ளிக் ஹாலில் பெருங்கூட்டம்.  கார்களிலும், ஜட்கா வண்டிகளிலுமாக வந்திறங்கிய பெரிய மனிதர்களுடன், சாதாரண மக்களும் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்  எடுத்தபடி இருந்தனர். எதற்குத் தெரியுமா? ஆந்திராவிலுள்ள பெல்லாரியிலிருந்து (இன்று கர்நாடகாவில் உள்ளது இந்நகரம்) வந்த, ‘சரச  விநோதினி சபா’ என்ற நாடகக் குழு  தெலுங்கு மொழியில் அரங்கேற்றிய ‘சிரகாரி’ நாடகத்தைக் காண்பதற்காக!

    இதை நடத்தியவர் பெல்லாரியில் வக்கீலாகப் பணியாற்றிய கிருஷ்ணமாச்சார்லு. இவரது நாடகக் குழுவில் இருந்த பலரும் அரசுப்பணியாற்றி வந்தனர். அன்று நாடகம் என்றாலே கூத்து என்றும், அதைப் போடுபவர்களைக் கூத்தாடிகள் என்றும் மோசமாகவே  சித்தரித்தது சமூகம். 

    ஆனால், இந்நாடகத்தைத் தயாரித்தவர்கள் அனைவரும், நன்கு படித்து, அரசுப் பணியில் இருந்த மனிதர்கள். அதனாலேயே மொழி  புரியாவிட்டாலும் இதைப் பார்க்க வேண்டுமென பெரும் ஆவல், மெட்ராஸின் பெரிய மனிதர்களுக்கும் ஏற்பட்டது.

     இக்கூட்டத்தில்  நாடகத்தைக் காண, தன் தந்தையுடன் அந்தப் பதினெட்டு வயது இளைஞனும் சென்றிருந்தான். ஆயிரக்கணக்கான பேர் போய் பார்த்தாலும், அந்த இளைஞனுக்கே தமிழிலும் இப்படியொரு நாடக சபையை உருவாக்க வேண்டுமெனும் எண்ணம் தோன்றியது.

    அந்த இளைஞன்தான் தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார்! அவர் எண்ணப்படி, 1891 ஆம் வருடம் ஜூலை  முதல் நாள், ‘சுகுண விலாச சபா’ பிறந்தது. ‘‘மேற்கண்ட தேதியில் சபையை ஸ்தாபித்தவர் எழுவர். அவர்கள் ஸ்ரீமான்கள்  ஊ.முத்துகுமாரசாமி செட்டியார், வி.வெங்கடகிருஷ்ண நாயுடு, அ.வெங்கடகிருஷ்ண பிள்ளை, த.ஜெயராம் நாயக்கர், ஜி.இ.சம்பத்து  செட்டியார், சுப்பிரமணியப் பிள்ளை, நான்’’ என தன் ‘நாடக மேடை நினைவுகள்’ நூலில் குறிப்பிடுகிறார் பம்மல் சம்பந்த முதலியார்.

    தெருக்கூத்துதான் நாடகம் என்ற நிலையை மாற்றி, நகரங்களில் பிரம்மாண்டமாக மேடை அமைத்து பல வகையான நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி, மேல்தட்டு மக்கள், கற்றவர்கள், அறிஞர்களையும் பார்க்க வைத்தார். ஆர்.கே.ஷண்முகம் செட்டியார், எம்.கந்தசாமி முதலியார் ஆகியோரையும் நடிக்கவைத்தார்.

    மனோன்மணீயம் நாடகம் எழுதிய சுந்தரம்பிள்ளை, சி.வை.தாமோதரம் பிள்ளை, அஷ்டாவதானம் பூவை.கலியாணசுந்தரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் சம்பந்தனாரின் நாடகத்தைப் பார்த்துப் பெரிதும் பாராட்டினார்கள். 

    தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் "சாற்றுக் கவிதை' எழுதி அனுப்பினார்.  சம்பந்தனாரைவிட, பரிதிமாற் கலைஞர் வயதில் இளையவர் என்றாலும், அவர் நாடகம் நடத்தும் முறை, உரையாடல்கள் போன்றவற்றைப் பாராட்டினார்.

    அவரது முதல் நாடகம் "புஷ்பவல்லி'. அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும், மிகவும் புகழ்பெற்ற நாடகம் "மனோகரா'.

    சுப முடிவு என்ற வழக்கத்தை மாற்றி, சோக முடிவு கொண்ட நாடகங்களையும் அரங்கேற்றினார். நடிப்பவர்களை ‘கூத்தாடிகள்’ என்று அழைக்காமல் ‘கலைஞர்கள்’ என்று அழைக்கச் செய்தார்.

    22 ஆவது வயதில் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற அவரது முதல் நாடகம் அரங்கேறியது. ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற Hamlet, As you like it, Macbeth, Cymbeline, Merchant of Venice  உட்பட பல நாடகங்களை அவற்றின் நயம், சுவை குறையாமல் தமிழ் நாடகங்களாக ஆக்கினார்.

        சம்பந்தனார் எழுதிய  நாடகங்கள் மொத்தம் 94. அவைகளில் வெற்றிகரமாகத் திரையேறிய நாடகம் சபாபதிஆங்கில, வடமொழி நாடகங்களை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மேடையேற்றினார். மொத்தம் 94 நாடகங்கள் எழுதியுள்ளார். அதில் 850 முறை மேடையேறிய மனோகரா, 300 முறை நடிக்கப்பட்ட லீலாவதி-சுலோசனா குறிப்பிடத்தக்கவை.

    இவரது ‘இந்தியனும்-ஹிட்லரும்’, ‘கலையோ காதலோ’ உள்ளிட்ட 30 தமிழ் நூல்கள், அமலாதித்யா, லார்ட் புத்தா உள்ளிட்ட 30 ஆங்கில நூல்களை தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியுள்ளது.

    சங்கீத நாடக அகாடமி விருது, பத்மபூஷண் விருது, நாடகப் பேராசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார். நாடக உலகின் பிதாமகர் என்று போற்றப்பட்ட இவர் 91 வயதில் மறைந்தார்.நாடகக் கலைக்குத் தனிச் சிறப்பும் மரியாதையையும் ஏற்படுத்திய பம்மல் சம்பந்த முதலியார் நினைவு, நாடகக்கலை உள்ளளவும் அழியாது.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...