11 ஜனவரி, 2022

ராகுல் திராவிட் பிறந்தநாள்

     இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 

    ராகுல் திராவிட், இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்தூரில்,பிறந்தார். கர்நாடகாவில் வாழும் ஒரு மகாராஷ்டிரிய தேஷஸ்தா குடும்பத்தை சேர்ந்தவர். ராகுல் டிராவிட்டின் தந்தை வழி முன்னோர்கள் தமிழ் நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள். அவர் பெங்களூரில் வளர்ந்தார். மராத்தி மற்றும் கன்னட மொழிகளைப் பேசுவார்.

    திராவிட் அவரது பன்னிரெண்டாவது வயதில் இருந்தே கிரிக்கெட்டை விளையாடத் துவங்கி விட்டார். அவர், மாநில அளவில் அண்டர்-15, அண்டர்-17 மற்றும் அண்டர்-19 பிரிவுகளில் விளையாடி உள்ளார். முதன் முதலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேகி தாராபோரால், கோடை விடுமுறையில் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஒரு கேம்பில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர், அவரது பள்ளி அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே முதல் சதம் அடித்தார். பேட்டிங் செய்ததுடன், விக்கெட் கீப்பராகவும் இருந்தார். பின்னர் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் குண்டப்பா விஸ்வநாத், ரோஜர் பின்னி, பிரிஜேஷ் படேல் மற்றும் தாராபோரின் அறிவுரையின் பேரில் , விக்கெட் கீப்பிங்கை நிறுத்தி வைத்தார்.


    மகாராஷ்டிராவுக்கு எதிராக ரஞ்சி ட்ரோபியில் விளையாட அவர் முதன் முதலில் பூனேயில் பிப்ரவரி மாதம் 1991 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் அவர் ஏழாவது நிலையில் வருங்கால சக அணி வீரர்களான அனில் கும்ப்ளே மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்துடன் சேர்ந்து 82 ரன்கள் அடித்து ஆட்டத்தை சம நிலைப் படுத்தினார்.அவரது முழு முதல் சீசன் 1991-92 ஆம் ஆண்டில் இருந்தது. அப்பொழுது அவர் இரண்டு சதங்களை அடித்து தொடர் முடிவில் சராசரி 63.3 க்கு 380 ரன்கள் எடுத்திருந்தார்.இதன் பின்னர் திராவிட் சவுத் சோனில் நடக்கின்ற துலீப் ட்ரோபியில் ஆடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1996 ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் விளையாடிய வினோத் காம்ப்ளிக்கு பதிலாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான சிங்கப்பூரில் நடந்த சிங்கர் கப் ஒரு நாள் போட்டியில், தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் துவங்கிய டிராவிட் அமோகமான ஆரம்பத்தை காணவில்லை. இதற்கு பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்ட இவர், இங்கிலாந்து சுற்று பயணத்தில் தான் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் சஞ்சய் மஞ்ச்ரேகர் காயமுற்றார். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவர் முதன் முதலில் தோன்றினார். இவருடன் சவுரவ் கங்கூலியும் முதல் முதலில் களம் இறங்கினார்.

    1996 இல் இந்திய அணி சார்பாக ஆடத் தொடங்கிய திராவிட் ஒரு வலது கை ஆட்டக்காரர். சில சமயங்களில் விக்கெட் காப்பாளராகவும் செயற்பட்டுள்ள திராவிட், உலகின் முன்னணித் துடுப்பாளர்களுள் ஒருவர். ராகுல் திராவிட் அக்டோபர் 2005இல் இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், 2004 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயலாற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி வருகிறது. திராவிட் 'சிறந்த ஆட்டக்காரர்' மற்றும் 'சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரர்' ஆகிய விருதுகளை, தொடக்க ஆண்டிலேயே (2004) வென்றார். 


    திராவிட், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் 10,000 ஓட்டங்களைக் கடந்து சாதனை புரிந்தவர். டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் மட்டும் ஒரே வீரர் ஆவார். மேலும் திராவிட், டெஸ்ட் போட்டிகளில் அதிக கேச்சுகள் (210) பிடித்து சாதனை புரிந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 13000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை 24 நவம்பர் அன்று பெற்றார். 

    தேசிய இந்திய அணியின் மிகத் தேர்ச்சி பெற்ற கிரிக்கெட் வீரராக 1996 ஆம் ஆண்டு முதல் திகழ்ந்து வருபவர் ராகுல் ஷரத் டிராவிட் .இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் அந்த பதவியில் இருந்து 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விலகிக்கொண்டார். 2000 ஆம் ஆண்டில் டிராவிட் ஐந்து வீரர்களில் ஒருவராக இருந்து விஸ்டன் கிரிக்கேடர்ஸ் ஆப் தி இயர் விருதைப்பெற்றார். டிராவிடுக்கு ICC பிளேயர் ஆப் தி இயர் மற்றும் டெஸ்ட் பிளேயர் ஆப் தி இயர் விருதுகளும் 2004 ஆம் ஆண்டு துவக்க விழாக்களில் வழங்கப்பட்டன.

    நீண்ட நேரத்திற்கு நின்று பேட் செய்யக்கூடிய அவரது திறனைப்பார்த்து அவரை தி வால் என்று அழைக்கின்றனர். டிராவிட் பல தரப்பட்ட உலக சாதனைகளைப் புரிந்துள்ளார். இவர், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரையும் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது இந்திய வீரராக இருக்கிறார் 14 பிப்ரவரி 2007 அன்று உலக கிரிக்கெட் வரலாற்றில் ஆறாவதாகவும் இந்திய அணிவகுப்பில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலியை தொடர்ந்து மூன்றாவதாகவும் இருந்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளார்.

    இவர் டெஸ்ட் போட்டிகள் விளையாடும் பத்து அணிகளுக்கும் எதிராக சதம் எடுத்த முதல் மற்றும் ஒரே பேட்ஸ்மேன் ஆவார். 210 கேச்சுகளைப் பிடித்து டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேச்சுகளை பிடித்த வீரர் என்ற பெயரைப்பெற்றுள்ளார். 18 வீரர்களுடன் ஒருங்கிணைந்து பல்வேறு சமையங்களில் 75 க்கும் மேற்பட்ட சதங்களை எடுக்கப் பங்களித்துள்ளார் டிராவிட். 

கொடிகாத்த குமரன் நினைவு நாள்

 திருப்பூர் குமரன் 

    காந்தியடிகளின், ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறையின் தடையை மீறி ஆர்பாட்டம் நடந்தது. இதற்குத் தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.

    தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை நோக்கி குண்டு மழை பொழிந்தனர் காவலர்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 செ.மீ. நீளமுள்ள குண்டு ஒன்று அந்த இளைஞனின் மூளைக்குள் பாய்ந்தது.

    'வந்தே மாதரம்' என்று கூறியபடி, கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

    உயிருக்குப் போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை, அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான்.

    அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான்.

    1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ஏழை நெசவாளர் குடும்பத்தில் குமரன் பிறந்தார். போதிய வருவாய் இன்றி குடும்பம் வறுமையில் வாடியது. வாழ  வழியின்றித் தவிக்கும் மக்களுக்கு அடைக்கலம் தந்து வாழவைக்கும் திருப்பூர் மாநகரம் அன்று, குமரனுக்கும் வழிகாட்டியது.செம்மையாகவும், கௌரவமாகவும் வாழ்ந்த குமரன், 11 வயது நிரம்பிய ராமாயி என்ற பெண்ணுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்.

    இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.

    1932 ஆம் ஆண்டு ஜனவரியில், காந்தியடியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, வீரத்துக்கு பெயர் போன கொங்குமண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.

    காவலர்கள் தடியடி நடத்தி, துப்பாக்கிக் குண்டுகளை பாய்ச்சிய போதும் 'வந்தேமாதரம், வந்தே மாதரம்' என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதியாகும்.

    மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடிக்கு ஏற்படவிருந்த இழுக்கைப் போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்டியது.

    புதைக்கப்பட்டது இருபத்தெட்டே வயதான இளைஞன் குமரனின் சடலம். ஆனால் இன்றும் என்றும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது - குமரன், தன் உயிர்ச் சுடரால் ஏற்றிவைத்த தியாக தீபம்.


    ஆலமரம் கீழே விழும்போது, மரம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதன் அடியில் சிக்கிச் சிதறிய சிறு செடிகளை எவரும் நினைப்பதில்லை. திருப்பூர் குமரன் போன்ற உயிர் தியாகம் புரிந்த, எண்ணிலடங்காத தியாக உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூர்வதே, நாம் அவர்களுக்குச் செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்.

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece