திருவாதிரையே ஆருத்ரா
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.திருவாதிரை நட்சத்திரத்தன்று தன்னை வழிபடும் தன் பக்தர்களுக்கு மனம் மகிழ்ந்து இன்னருள் புரிவார்.
பஞ்ச பூதங்களின் இயக்கத்திற்கும் ஆதாரமாக இருக்கும்
ஸ்ரீ சிவபெருமானை நிந்தித்து, ஒருமுறை தாருகாவனத்தில், முனிவர்கள் ஒன்று கூடி, முக்கண்ணனுக்கு எதிராக வேள்வி ஒன்றை நிகழ்த்தினார்கள். அதாவது, அவர்களின் கோட்பாட்டின்படி, கர்மத்தை மட்டும் செய்தால் போதுமானது. கடவுள் என்பவர் கிடையாது என்பதுதான்.
அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டி, கயிலைநாதன், பிட்சாடனர் (பிச்சை கேட்பவர்) ரூபமெடுத்து, பிச்சை கேட்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். பிட்சாடனரைக் கண்ட முனிபத்தினிகள் அனைவரும், அவரின் பின்னால் போகத் தொடங்கினார்கள்.
இச்செயலைக் கண்ட முனிவர்கள், மிகுந்த கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தார்கள்.
வேள்வித்தீயினில், மதயானை, மான், உடுக்கை, முயலகன். தீப்பிழம்பு ஆகியவற்றைத் தருவித்து, அனைத்தையும், ஸ்ரீ சிவபெருமான் மேல் ஏவி விட்டார்கள். சர்வேசன் ஆனவர், மத யானையைக் கொன்று அதன் தோலைத் தரித்துக் கொண்டார். மான், உடுக்கை, அக்னி அனைத்தையும் தானே சுவீகரித்துக் கொண்டார். முயலகனின் மேல் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியபடி நடனம் ஆடி, முனிவர்கள் உண்மையை அறியச் செய்தார். அதுவே ஆருத்ரா தரிசனம் என்று கூறப் படுகிறது.
ஸ்ரீ முக்கண்ணனுக்கு வருடத்தில் ஆறு முறைகள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மூன்று முறைகள் திதியன்றும், மூன்று முறைகள் நட்சத்திரம் அன்றும் செய்யப்படும் அபிஷேகத்தில், திருவாதிரை அன்று செய்யப்படும் அபிஷேகமே விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
ஆக்கல், காத்தல், அருளுதல், மறைத்தல், அழித்தல் இந்த என்ற ஐந்தொழிலை செய்யக்கூடிய பஞ்சாட்சர நாமத்தைக் கொண்ட சிவபெருமானை, நடராஜர் ரூபத்தில் இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் நாம் தரிசனம் செய்வது மிக சிறப்பு.
முந்தைய காலத்தில் சேந்தனார் என்கிற பெயர் கொண்ட விறகு வெட்டி ஒருவர் இருந்தார். அவர் சிறந்த சிவ பக்தர். தினமும் ஒரு சிவ பக்தருக்கு ஆகாரம் அளித்துவிட்டுத் தான் உண்ணுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள், நல்ல மழை பெய்ததில், வெட்டிய விறகெல்லாம் ஈரமாகி விட்டது.அதை விற்க முடியாமல் போனதால், கையில் பணம் இல்லாமல் போனது. அதனால் மனைவிடம் வீட்டுச் செலவுக்குப்பணம் கொடுக்க முடியாமல் போனது.
அன்றைய தினம் ஒரு சிவபக்தர், சேந்தனாரின் இல்லம் வந்து, பிச்சை கேட்டார்.
களியும் ,கறியும் படையல் ஆனது ஏன்?
அவரின் மனைவி, வீட்டில் இருந்த அரிசி மாவையும் வெல்லத்தினையும் சேர்த்துக் களி செய்தார். வீட்டில் மீதியிருந்த ஏழு காய்களில், கூட்டு ஒன்றினைச் செய்து, சிவனடியாரின் பசியைப் போக்கினார். பிறகே இருவரும் உண்டார்கள். அடுத்த நாள் கோயிலை வழக்கம் போல் திறந்த அர்ச்சகர், பகவானின் கருவறையில் களியும் கூட்டும் சிதறி இருப்பதைப் பார்த்தார். பிறகு உண்மையை உணர்ந்தார். சேந்தனாரின் பக்தியை உலகுக்குத் தெரியப்படுத்த ஆண்டவனே பிட்சாடனர் ரூபத்தில் வந்தார்.சிவபெருமான் எளியோன். அவனுக்கு இடும் படையல் எளிமையாக இருந்தாலும், அன்புளளத்தோடு தரும்போது மனமுவந்து ஏற்றுக்கொள்வான் என்பதே இதன் அடிப்படைக் கருத்து.
தாலிச் சரடு மாற்றுவதன் பின்னணி
ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன்? என்று கூறிக் கதறி அழுதாள்.
அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனம் கொடுத்து ஆசீர்வதித்தார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது. இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது மாங்கல்யம் நிலைக்கவேண்டி சுமங்கலிகள் பூஜை செய்வதும், புதிய தாலிச்சரடு மாற்றிக் கொள்வதும் இதன் அடிப்படியிலேயே.
சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக, அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.
ஈசனின் திருநடனத்தை, எல்லோரும் தரிசித்த வேளையில் சிவலோகத்தில் நிஷ்டையில் இருந்த வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனியும் மட்டும் காண முடியாமல் போனது. இதனால் இவர்கள் தில்லை வனத்துக்கு வந்து ஈசனை வேண்டி நெடுங்காலம் தவமியற்றினார்கள். அப்போது அவர்களுக்கு அருள் காட்சி தந்த ஈசன் அவர்களுக்காகவே தில்லையில் ஆடல் கூத்தனாக பொன்னம்பலத்தில் காட்சி தந்து ஆனந்த நடனமாடினார். இந்த நாளும் ஆருத்ரா புண்ணிய தினம்தான்.
பஞ்ச சபைகள்
பஞ்ச பூதங்களான ஆகாயம் என்பதற்கு சிதம்பரம் என்றும். அக்னி என்பதற்கு திருவண்ணாமலை என்றும், நீர் என்பதற்கு திருவானைக்காவல் என்றும், காற்றுக்கு காளஹஸ்தி என்றும் , நிலத்திற்கு காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்றும் இவைகளின் பெருமைகளைக் கூறும் வண்ணம் இந்த புண்ணியத் தலங்கள் அமைந்திருக்கின்றன.
நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
1.சிதம்பரம், 2.மதுரை, 3.திருவாலங்காடு, 4.திருநெல்வேலி, 5.குற்றாலம் ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே பொற்சபை, வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்பன.
|
வெள்ளி சபை -மதுரை |
1.வெள்ளி சபை : சிவபெருமானின் திருவிளையாடல்கள் பெரும்பாலும் நடைபெற்ற இடமாக மதுரை திருத்தலம் திகழ்கிறது. மீனாட்சி அம்மனின் அரசாட்சியும், அருளாட்சியும் நிறைந்திருக்கும் மதுரையில்தான் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயம்தான் நடராஜரின் திருநடனம் கண்ட ‘வெள்ளி சபை’யாக திகழ்கிறது. இதனை ‘வெள்ளியம்பலம்’, ‘வெள்ளி மன்றம்’ என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான், தன் பக்தனான (இறைவனுக்குக் கால் வலிக்கும் என்று வருந்திய) பாண்டிய மன்னனின்வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து, வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி நடனம் புரியும் நிலையில் காட்சி தருகிறார். இங்கு இறைவனின் நடனம் ‘சந்தியா தாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது.
|
சித்திர சபை - குற்றாலம் |
2. சித்திர சபை : தென்காசி மாவட்டம் திருக்குற்றாலத்தில் அமைந்திருக்கிறது, குற்றாலநாதர் திருக்கோவில். இது அகத்திய முனிவர் வழிபாடு செய்த திருத்தலம் ஆகும். இங்கு சிவபெருமான் நடனம் புரிந்த இடம், ‘சித்திர சபை’ என்று வழங்கப்படுகிறது. இங்கு எமனைக் காலால் எட்டி உதைத்த ஈசன் தன் மனைவி பார்வதியுடன், மார்கண்டேயருக்கு அருளியபடி சித்திர வடிவில் காட்சியளிக்கிறார். இங்கு இறைவன் ஆடிய நடனத்திற்குப் பெயர் ‘திரிபுர தாண்டவம்’ என்பதாகும். இந்த தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மதேவன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாக கருதப்படுகிறது. அந்த இடமே சித்திர சபை. இதனை ‘சித்திர அம்பலம்’, ‘சித்திர மன்றம்’ என்றும் அழைப்பார்கள்.
|
பொற்சபை - சிதம்பரம் |
3.பொற்சபை : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது, திருமூலட்டநாதர் ஆலயம். (சிதம்பரம் நடராஜர் கோவில்) இங்கு அருள்பாலிக்கும் ஆடல் அரசனான நடராஜர் வீற்றிருக்கும் இடமே, ‘பொற்சபை’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘பொன்னம்பலம்’, ‘கனக சபை’, ‘பொன் மன்றம்’ என்ற பெயர்களாலும் அழைப்பார்கள். இறைவன் தனது திருநடனத்தை, பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு காட்டி அருளிய தலம் இதுவாகும். இந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். இத்தல இறைவன் ஆடும் நடனம் ‘ஆனந்தத் தாண்டவம்’ ஆகும்.
|
தாமிர சபை - திருநெல்வேலி |
4.தாமிர சபை : திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான திருத்தலங்களில் ஒன்று, காந்திமதி உடனாய நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு நடராஜர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கும் இடத்திற்கு ‘தாமிர சபை’ என்று பெயர். இதற்கு ‘தாமிர அம்பலம்’, ‘தாமிர மன்றம்’ என்ற பெயர்களும் உண்டு. இந்த சபையில், இறைவன் தன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இந்த நடனத்திற்கு ‘திருத் தாண்டவம்’ என்று பெயர்.
|
இரத்தின சபை - திருவாலங்காடு |
5. இரத்தின சபை : வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவாலங்காட்டில் உள்ளது, இந்த ஆலயத்தில் காளியுடன் போட்டி நடனம் ஆடிய சிவபெருமான், முடிவில் தன்னுடைய ஒரு காலை தலைக்குமேல் தூக்கி ஆடி, காளிதேவியை வெற்றிகொண்டார் என்று தல புராணம் சொல்கிறது. இந்த ஆலயத்தின் இறைவன் - வடாரண்யேஸ்வரர், இறைவி - வண்டார்குழலி அம்மை. இங்கு இறைவன் நடனம் ஆடிய இடம் ‘ரத்தின சபை’ எனப்படுகிறது. ‘ரத்தின அம்பலம்’, ‘மணி மன்றம்’ என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இங்குள்ள இறைவன் எட்டு கரங்களுடன், வலது காலை தரையின் ஊன்றி இடது காலால் காதணியை மாட்டும் தோரணையில் காட்சியளிக்கின்றார். காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து சென்று, இங்குள்ள நடராஜரின் திருவடியில் அமர்ந்து, அனுதினமும் அவரது திருநடனத்தைக் காணும் பேறு பெற்றார். இங்கு இறைவன் ஆடும் நடனம் ‘ஊர்த்துவ தாண்டவம்’ என்று போற்றப்படுகிறது.
ஆருத்ரா தரிசன தினத்தன்று, திருநடனக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை, மனதால் நினைந்து தரிசித்தாலே, அவனருள் பூரணமாகக் கிட்டும்.
ஓம் நமசிவாய !