19 டிசம்பர், 2021

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் நினைவுநாள்

 “பேச்சு பவளம்; பெருந்தொண்டு நல்முத்து
மூச்செல்லாம் தூயதமிழ்”  

        என்று உவமைக் கவிஞர் சுரதாவால் போற்றப்பட்டவர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதன்.

நன்றி : பட உதவி - தினமணி

         முத்தமிழ்க் காவலர், தமிழ்ச் செம்மல், தமிழ் வித்தகர், சித்த மருத்துவ சிகாமணி, வள்ளுவவேள், செந்தமிழ்க் காவலர், இலக்கியச் செல்வர், தனி நாயகர், உலகத் தமிழர்ச் செம்மல், கலைமாமணி, தமிழ்மறைக் காவலர் என பல பட்டங்களுக்குச் சொந்தக்காரர் கி.ஆ.பெ. விசுவநாதம். தமிழுக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், தமிழிசை மீட்சிக்காகவும் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்.

       ஒரு மொழியின் வளர்ச்சி என்பது ஓர் இனத்தின் வளர்ச்சி என்பார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சி ஒரு ஒட்டுமொத்த இனத்தையே கட்டிப்போடுவதாக இருக்கிறது. ஒருசில மொழிக்கே இப்படிப்பட்ட உள்ளார்ந்த பண்பு இருக்கும் என்பது அறிஞர்களின் கூற்று. அப்படிப்பட்ட தமிழ் மொழியை வளர்க்க உழைத்த ஏராளமான அறிஞர்களுள் முத்தமிழ்க் காவலர் என்று போற்றப்படும் கி.ஆ.பெ.விஸ்வநாதமும் ஒருவர். எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், ஏற்றுமதி வணிகர், தமிழறிஞர், அரசியலர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட கி.ஆ.பெ.விஸ்வநாதம், ‘சித்த மருத்துவத்துக்கு உயிர் கொடுத்த மாமனிதர்’ என்று போற்றப்படுபவரும்கூட.

        தமிழ் இலக்கியங்களை வெறும் பாடப்புத்தகமாக மட்டும் பார்க்காமல், அவை எப்படியெல்லாம் தினசரி வாழ்க்கைக்குப் பாடமாகவும் பாலமாகவும் இருக்கிறது என்பதைச் சொல்வதற்குத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் கி.ஆ.பெ.விஸ்வநாதம். அவருடைய படைப்புகள் எல்லாமே பாமரருக்கும் புரியும்படி எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. அவர் எழுதிய கதைகள், கட்டுரைகள், திருக்குறள் விளக்கங்கள், சங்க இலக்கியங்களின் இன்றைய தேவைகள் போன்றவையெல்லாம் காலத்துக்கேற்ற உதாரணங்களுடன் பள்ளி மாணவரும் புரிந்துகொள்ளும்படி படைக்கப்பட்டுள்ளன.

        தமிழ் மொழிக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட கி.ஆ.பெ.விஸ்வநாதம், தமிழ் படிப்பதற்காகப் பள்ளி சென்றதில்லை. ஆனால், எந்தப் பள்ளியிலும் படிக்காத இவரை, இரண்டு பல்கலைக்கழகங்கள் ஆட்சிக்குழு உறுப்பினராக ஏற்றுக்கொண்டதோடு, “டாக்டர்’ பட்டமும் வழங்கிச் சிறப்பித்தன.

       சிறு வயதில் முத்துசாமி கோனாரிடம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார். பிறகு, வேங்கடசாமி நாட்டார், வேதாசலம், கலியாணசுந்தரனார், சோமசுந்தர பாரதியார் போன்ற புகழ்பெற்ற தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கியங்கள் கற்றுப் புலமை பெற்றார். வாலையானந்த சுவாமிகளிடம் சைவத்தைக் கற்றறிந்தார். இந்த ஆளுமைகளுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் வகையில் தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டார் விஸ்வநாதம்.

      ஒரு முறை அறிஞர் கி.ஆ,பெ. விசுவநாதம் தமிழனின் சொத்துக்கள் எவை என்பது குறித்து உரையாற்றினார்."துளைக் கருவி, நரம்புக் கருவி, தோல் கருவி இந்த மூன்றிலும் அனைத்து இசைக் கருவிகளும் அடங்கிவிடும். இவற்றையே நம் பெரியோர், குழல், யாழ், முழவு என்றழைத்தனர். வேறெந்த மொழியிலுமில்லாத சிறப்பான "ழ' கரம் இந்த மூன்றிலும் இருப்பது வியப்பளிக்கிறது! இதுவே தமிழின் சொத்து!'' என்றவுடன் கூட்டத்தில் கரகோஷம் எழுந்தது!

       தமிழிசை இயக்கத்திலே முத்தமிழ்க் காவலரின் பங்கு மகத்தானது. தமிழகத்தில் இசை மேடைகளில் தமிழ்ப் பாட்டுப் பாடாமல் தெலுங்கு, சம்ஸ்கிருதப் பாடல்கள் பாடிவந்த நிலையை எதிர்த்து அண்ணாமலை அரசர் இயக்கம் கண்டபோது (1942), கி.ஆ.பெ. பொதுச் செயலாளராக இருந்து நாடெங்கும் சுற்றி, இசை இயக்கத்துக்கு வலுவூட்டினார்.

     அறிஞர் அண்ணா, தமிழக முதல்வராக இருந்து நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று, மாநாடு வெற்றிபெறத் துணை நின்றார்.

      உலகில் தொன்மையான பல மொழிகள் வழக்கொழிந்து போனதுபோல் தமிழும் அவ்வாறு ஆகிவிடக் கூடாதென்று, தமிழ் மொழியைப் பாதுகாத்து வளர்க்க, ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வந்தார்.அவருடைய வேண்டுகோளை ஏற்று அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தஞ்சையில் தமிழுக்கென்று தனியாக ஒரு பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். இது கி.ஆ.பெ.வியின் சாதனைகளுள் ஒன்றாகும்.

      தனிமனித ஒழுக்கம், நற்பண்புகளைப் பேணுதல், இல்லறத்தைச் செம்மையாக்குதல், தமிழ் மொழியுணர்வை ஊட்டுதல், சமூக ஒற்றுமையுணர்வின் மகத்துவம், தமிழைக் கற்க இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதல் போன்ற பணியைத்தான் கி.ஆ.பெ.விஸ்வநாதத்தின் புத்தகங்கள் செய்கின்றன. 

      விஸ்வநாதத்தின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

     வள்ளுவர் (1945), வானொலியிலே (1947), ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (1950), அறிவுக்கு உணவு (1953), தமிழ் மருந்துகள் (1953), வள்ளுவரும் குறளும் (1953), எண்ணக் குவியல் (1954), தமிழ்ச்செல்வம் (1955), திருக்குறள் புதைபொருள் - பாகம் 1 (1956), திருக்குறள் கட்டுரைகள் (1958), நான்மணிகள் (1960), ஆறு செல்வங்கள் (1964), தமிழின் சிறப்பு (1969), நல்வாழ்வுக்கு வழி (1972), திருக்குறள் புதைபொருள் - பாகம் 2 (1974), நபிகள் நாயகம் (1974), மணமக்களுக்கு (1978), வள்ளலாரும் அருட்பாவும் (1980), எனது நண்பர்கள் (1984), அறிவுக்கதைகள் (1984), திருக்குறளில் செயல்திறன் (1984), மாணவர்களுக்கு (1988), எது வியாபாரம்? எவர் வியாபாரி? (1994). 



    தனது 96ஆவது பிறந்த நாள் விழாவில் (1994) குன்றக்குடி அடிகளார் தலைமையில் கடைசியாகப் பேசினார். அவர் பேசும்போது, “”நான் அதிக காலம் உயிருடன் இருக்க மாட்டேன். உடல் நலம் குன்றிவிட்டது. இந்நிலையில் தமிழ் ஆட்சிமொழி, பயிற்றுமொழி குறித்து அரசு ஆணை வந்தால் மகிழ்ச்சியோடு உயிர் துறப்பேன்” என்று பேசினார். அதுவே அவரது நிறைவுரையாக அமைந்தது.

     “அரசு ஆணை வந்தால் பார்த்துவிட்டுச் சாவேன்” என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து ஏங்கியவாறு, 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி தம் பூத உடம்பு நீத்துப் புகழுடம்பு எய்தினார்.

          தமிழுக்கும் தமிழருக்கும் பாதுகாவலராகத் திகழ்ந்த கி.ஆ.பெ.விசுவநாதத்தின் தமிழ்ப் பணிகளை நினைத்துப் பார்த்தால், நிச்சயம் அவர் ஒரு முத்தமிழ்க் காவலர் என்பது விளங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...