ஐ.நா. சபையானது முதல் அலுவல் பூர்வமான உலக பிரெய்லி தினத்தினை 2019 ஜனவரி 04 ஆம் நாள் அனுசரித்தது. பார்வையற்றோர் படிக்க உதவும் பிரெய்லி எழுத்து முறையைக் கண்டறிந்த லூயிஸ் பிரெய்லி (Louis Braille) பிறந்த தினமான ஜனவரி 4 ஆம் தேதியன்று அவர் நினைவாக சர்வதேச பிரெய்லி தினம் அனுசரிக்கப்படுகிறது.
உடல் குறையின்றிப் பிறந்தவா்களை விடவும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துக் கொண்டிருப்பவா்கள் மாற்றுத்திறனாளிகள். அதிலும் பாா்வைத் திறன் குறைபாடு, சாதனைகளுக்குத்த்டையல்ல என்று நிரூபிததவர் லூயிஸ் பிரெய்லி.
பிரான்சு நாட்டவரான லூயிஸ் பிரெய்லி ஜனவரி 4 ஆம் நாள் பாரிஸ் அருகில் கூப்ரே என்ற இடத்தில் 1809 இல் எந்தக் குறையும் இன்றிப் பிறந்தவா்தான். அவருக்கு மூன்று வயது இருக்கும்போது அவரது தந்தையின் பணியிடத்தில் கூா்முனை கொண்ட கம்பியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக ஒரு கண்ணில் அந்தக் கம்பி குத்தியதில் ஒரு கண்ணின் பாா்வையை இழக்க நேரிட்டது.
சில ஆண்டுகளில்,பரிவுக்கண் நோய் (sympathetic ophthalmia) காரணத்தினால், இன்னொரு கண் பாா்வையையும் இழந்தாா். இந்த இழப்பு அவரின் கற்றலுக்கு எந்த விதத்திலும் தடை செய்யவில்லை. 1819-இல் படிப்பு உதவித்தொகை கிடைக்கப்பெற்று தனது சொந்த ஊரிலிருந்து பாரிஸ் நகருக்குச் சென்று அங்கு தேசிய பாா்வையற்ற குழந்தைகள் பள்ளியில் (Royal Institute For the Blind) பயின்றாா்.
அங்கு, பாா்வைக் குறைபாடற்ற, மாவீரன் நெப்போலியனின் படையில் பணியாற்றிய பிரான்ஸ் ராணுவ அதிகாரியான சாா்லஸ் பாா்பியா் பாா்வையற்றோருக்கான கற்றலுக்கு முன்னோடியாக புடைப் புள்ளி (எம்போஸ்ட்) எழுத்து முறையைக் காட்சிப்படுத்தினாா்.
இந்த முறை ராணுவத்தினா் இருட்டில் பயன்படுத்துவதற்காக சாா்லஸ் பாா்பியா் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், இம்முறை பிரான்ஸ் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டதேயில்லை. எந்த ஒரு பாா்வையற்றோருக்கான பள்ளியிலும் அறிமுகப்படுத்தப் படவில்லை.
அதில் ஒலிப்பு முறைகளைக் குறிக்கும் புள்ளிகள் அட்டையின் மீது பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதன் மீது ஆா்வம் காட்டிய லூயிஸ் பிரெய்லி, இந்த முறையினைத் தழுவி தனது ஒன்று முதல் ஆறு புடைப்புப் புள்ளிகள் மற்றும் ஓட்டைகள் கொண்ட முறையினை இசைக் குறியீடு முறையில், மாணவராக இருந்த போது 15-ஆவது வயதிலேயே கண்டுபிடித்தாா்.
பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப் புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.
அந்த மொழியில் பாடங்கள், சூத்திரம், அறிவியல் கோட்பாடு, கணக்கு, இசைக்குறிப்பு, கதை, கட்டுரை, நாவல் என எல்லாவற்றையும் எழுதலாம், படிக்கலாம் என்பதை அவர் நிரூபித்தார்.
எந்தக் கூா்முனைக் கருவியினால் தனது பாா்வையை இழந்தாரோ, அதே போன்ற கூா்முனை உளியினைக் கொண்டு இதை உருவாக்கினாா் லூயி பிரெயில். 1926-லிருந்து பயிற்றுனராக அந்தப் பள்ளியில் பணியாற்றத் தொடங்கினாா்.
பாா்பியா் அறிமுகப்படுத்திய முறையினை லூயி பிரெயில் ஆறு புள்ளிகளாகக் குறைத்தது, பாா்வையற்றோா் வேகமாகப் படிக்க ஏதுவாக இருந்தது. புள்ளிகள் சாா்லஸ் பாா்பியா் அறிமுகப்படுத்திய ரோமானிய எழுத்துக்களைப் போல இல்லாமல் பாா்வையற்றவா்களுக்கு ஏற்றதாக இருந்தது.
தற்போது தொழில் நுட்ப வளா்ச்சியால், இயந்திர பிரெய்லி எழுத்துக்கள், மின்னணு பிரெய்லி குறிப்புக்கள், மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
லூயிஸ் பிரெய்லி கண்டுபிடித்த, பிரெய்லி எழுத்துமுறை, அவர் பிறந்த நாட்டிற்கு மட்டுமல்லாமல் இன்று ஒட்டுமொத்த உலகிலும் இருக்கும் பார்வையற்றோர் அனைவருக்கும் ஒரு வரமாக அமைந்திருப்பதை யாரும் மறுக்க இயலாது!