23 ஜனவரி, 2022

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள்

 “ரத்தம் கொடுங்கள் நான் சுதந்திரம் தருகிறேன்” 


     பார்வைக் குறைபாடு என்று ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட அந்த இளைஞர், பின்பு ஒரு ராணுவத்தையே தலைமையேற்று நடத்தினார் என்பது, தங்களது முயற்சிகளில் உள்ளம் சோர்ந்த இளைஞர்களுக்கெல்லாம் உற்சாகமும் ஊக்கமும் தரும் அனுபவப் பாடம். 

    ஓர் ஆன்மீகவாதி, சிறந்த தலைவர், தன்னார்வலர், தேசபக்தர், தனி ராணுவத்தைக் கட்டமைத்தவர், உலகத் தலைவர்களை நேர்கொண்டவர், மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் மதிக்கும் பண்பாளர் என,ஒரு சிறந்த தலைவருக்கு இருக்கவேண்டிய அத்தனை குணாதிசயங்களையும் ஒருங்கே பெற்றவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ். 

     நேதாஜி 1897-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கோதாலியா கிராமத்தில், வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஜானகிநாதர், தாய் பிரபாவதி தேவி. தந்தை கட்டாக் நகரில் வழக்குரைஞர் தொழில் செய்து வந்தார். கட்டாக்கிலுள்ள ஐரோப்பியப் பள்ளியில் படித்த சுபாஷ், பின்னர் கல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியில் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார். 

     சிறுவயதில் தாயிடம் துர்க்காதேவி புராணம் கேட்டு வந்ததால் அவர் கடவுள் பக்தியோடு, எளிய வாழ்க்கை முறையை கைக் கொண்டார். பகட்டான உடையுடுத்துவதில்லை. அடுத்தவர் துயர் கண்டு வருந்துவார் அடுத்தவர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தயங்கமாட்டார். 

    இராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் படித்ததில் அவருக்கு ஆன்மிக நாட்டம் ஏற்பட்டது.1919 இல் எம்.ஏ பட்டம் பெற்றவர் தந்தையின் வற்புறுத்தலுக்கிணங்கி இங்கிலாந்து சென்றார். தந்தை விரும்பியபடி ஐ.சி.எஸ் (Indian Civil Service) தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால்,அப்பணியை ஏற்றால், இந்தியர்களுக்கு எதிராக, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டியிருக்கும் என்பதால் ஐ.சி.எஸ் அதிகாரியாய் பணியாற்ற மறுத்து விட்டார்

    அவர் இந்தியா திரும்பியதும், சித்தரஞ்சன் தாஸுடன் இணைந்து சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டார். சித்தரஞ்சன் தாஸைத் தனது அர்சியல் குருவாக ஏற்றுக்கொண்டார். 1922 இல் இங்கிலாந்து இளவரசர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது நாடெங்கும் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன. வங்காளத்தில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கடையடைப்பு நடத்திய நேதாஜி கைதானார். ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

     1922 இல் ‘இளைஞர் கட்சி’ என்றோர் அமைப்பை ஏற்படுத்தினார் நேதாஜி. இளைஞர்களின் ஒத்துழைப்போடு 1924 இல் கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் வென்று தலைவரானார். அவருடைய பலம் நாளுக்கு நாள் பெருகவும், ஆங்கிலேய அரசு அவரை 1924 அக்டோபர் மாதத்தில் கைது செய்து சிறையிலடைத்தது. அலிப்பூர் சிறை, பர்ஹாம்பூர் சிறை என்று மாற்றிக் கொண்டே போய் பர்மாவிலுள்ள மாண்டலே சிறையில் அடைத்து வைத்தது.

     சிறைவாசத்தில் அவருடைய உடல் நலம் சீர்குலைந்தது. நேதாஜியை விடுதலை செய்யும்படி கோரி மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். அவரது உடல் நிலை மோசம் அடைவதைக் கண்ட அரசு அவரை விடுவித்தது. காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகப் போரை அறிவித்த போது, போராட்டம் நடைபெறுவதற்கு முன்பே நேதாஜி கைது செய்யப்பட்டார். பின்பு அரசுடன் காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். 

     1931 ஜனவரி 25 ஆம் நாள் நேதாஜி விடுதலை செய்யப்பட்டார். உடல் நலத்தைக் கருதி சுவிட்சர்லாந்து சென்றவர், அங்கிருந்து ரோம், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். முசோலினி, டிவேலரா (அயர்லாந்து) போன்ற தலைவர்களைச் சந்தித்தார். இந்தியா திரும்பியவரைக் கைது செய்த அரசு ஒன்றரை ஆண்டு சிறை வைத்தது. 

     மாகாண சுயாட்சி சட்டம் பற்றிய விவாதத்தில் காந்திஜியுடன் நேதாஜிக்குக் கருத்து மோதல் ஏற்பட்டது. 1939 இல் நேதாஜியே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஒருதரப்பினர் ஒத்துழைக்க மறுத்தனர். இதனால், நேதாஜி பதவியை உதறியதோடு, கட்சியைவிட்டு வெளியேறினார். 1940 இல் ‘பார்வர்டு பிளாக் என்று ஒரு புதிய கட்சியைத் துவக்கினார். 

    தம்முடைய தீவிரப் போக்கின் காரணமாய் நேதாஜி மீண்டும் சிறை செல்ல நேர்ந்தது. சிறையில் இருந்தபோது அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டிருந்தார். காந்தியின் அகிம்சைப் போராட்ட முறைக்கு மாறான ஒரு வழிமுறையை சுபாஷ் சந்திரபோஸ் தேர்ந்துகொண்டார். இந்தியா விடுதலை பெற வேண்டும் என்பதில் இருவருக்கும் இடையே எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை. அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட வழிமுறைகள் மட்டுமே வேறு வேறு. 

    விடுதலை பெற்ற இந்தியாவில் வெவ்வேறு சமய நம்பிக்கைளைச் சேர்ந்தவர்களும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றே இருவருமே மனதார விரும்பினார். அது வெளிநாடுகளின் ஆதரவோடு ஆங்கிலேயரை விரட்டியடிப்பது என்ற தீர்மானம். ஐந்து மாத சிறை வாசத்துக்குப்பின் வீடு திரும்பினார். அவருடைய வீட்டைச் சுற்றிலும் காவல் படையின் ரகசியக் கண்காணிப்பு இருந்தது.1941 ஜனவரி 14. அன்று நேதாஜி ஒரு முஸ்லீம் சந்நியாசி போல் வேடமிட்டு, வீட்டிலிருந்து வெளியேறினார். 

    பீகார் சென்று அங்கிருந்து, பெஷாவர், காபூல், மாஸ்கோ, இத்தாலி என்று பயணித்து ஜெர்மனியை அடைந்தார். பல இடையூறுகளைக் கடந்து 73 நாட்கள் பயணித்திருந்தார் அவர். ஹிட்லருடன் நடந்த சந்திப்பு பலனளிப்பதாயிருந்தது. 

    ஜெர்மனியில் ஹிட்லரை சுபாஷ் அவர்கள் சந்தித்து, இந்திய சுதந்திரத்திற்கு உதவி கேட்டார். என்னதான் உதவி கேட்கச் சென்றிருந்தாலும், சுபாஷின் தேசப்பற்று அவரை கோபமடையச் செய்தது. இந்தியர்களை காட்டுமிராண்டிகள் என்று ஹிட்லர் தனது புத்தகத்தில் குறிப்பிட, அதை எதிர்த்துப் பேசிய போஸ், அவ்வாக்கியத்தை திரும்பப் பெறச்சொன்னார்.

     “இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம்” என்று ஹிட்லர் கூற, “எனக்கு எவனும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்குக் கூறுங்கள்”

    என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லிவிட்டு கோபமாக வெளியேறினார் சுபாஷ். உலகின் மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லர் முன் முதல்முறையாக அப்படி ஒருவர் பேச, சுபாஷின் திராணியை நினைத்து வியந்தனர்

    ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.அப்போது பிரிட்டிஷ் அரசுக்காகப் போரிட்ட இந்தியப் படைவீரர்கள் ஜெர்மனியிடம் தோற்று, ஜெர்மனியிடம் யுத்தக் கைதிகளாயிருந்தனர். நேதாஜி அவர்களைக் கொண்டு ‘இந்திய சுதந்திரச் சங்கம்’ என்ற அமைப்பையும், அதன்கீழ் ஒரு தேசிய ராணுவத்தையும் உருவாக்கினார். 

    விவேகானந்தர், தாகூர், அரவிந்தர் போலவே நேதாஜியும் தமிழகத்தின் மனம்கவர்ந்த வங்க ஆளுமை. சென்னைச் சிறையில் சுபாஷ் அடைக்கப்பட்டது, இந்திய தேசிய ராணுவம் உருவாவதற்கு ஓர் வலுவான அடித்தளத்தை உருவாக்கியது. 


    இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயப் படைக்கு எதிரான நாடுகள், குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்தியச் சுதந்திரத்தை அடைய விரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அந்நாடுகளிடம் உதவி கேட்டார். ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது போகவே, ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் சென்று, ராணுவ ஜெனரல் டோஜோவைச் சந்தித்து உதவி கேட்டார்.
 

    ஆங்கிலேய அரசுக்கு எதிராக உருவாகி, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்குப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது.


    1943 அக்டோபர் 21 இல் சிங்கப்பூரில் போஸ், ”ஆசாத் இந்த்” என்ற சுதந்திர அரசுப் பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ஆம் தேதி அரசின் தலைவராக, தேசியக் கொடியை ஏற்றினார். அதை, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.

      ஹிட்லரின் உதவியாளர்கள். இந்தியாவிலுள்ள ஆங்கிலேய அரசுடன் போரிட அவர் தருணம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஜெர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் போர் மூண்டுவிட்டது. அதனால் அவருடைய திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. அங்கிருந்து அவர் 1914 இல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் இந்தோ-பர்மா எல்லை வழியே இம்பால் (நாகாலாந்து) வரை முன்னேறியது. ஆனால் பிரிட்டீஷ் அரசு, அந்தப் போர் முயற்சியை முறியடித்து அவர்களைச் சிறை பிடித்தது. 

     நேதாஜி ஜப்பானிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காகச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் நேதாஜி மரணமடைந்ததாக, ஜப்பானிய அரசு அறிவித்தது. இந்தியாவுக்கு வெளியிலேயே, ஓர் இந்திய அரசாங்கம் அமைத்து, படை நடத்திய தீரர் அவர். இந்த மண்ணின் வீரம், அவரைப் போன்றவர்களால்தான், உலக அளவில் உன்னதம் பெற்றது. 

     இன்று, பள்ளிகள் முதல் போர் முனைகள் வரை ஒவ்வொருவரும் சொல்லிவரும், ‘ஜெய் ஹிந்த்’ சுலோகத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் நேதாஜி தான். 

    இந்த வார்த்தையைச் சொல்லும்போதெல்லாம் நமக்குள் எழும் அந்த தேசப்பற்றுதான், அந்த மாபெரும் மனிதனுக்கு நமது காணிக்கை.

     நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களது பிறந்த  நாள்  “பராக்கிரம தினமாக”க் கொண்டாடப்படுகிறது

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...