கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
ஒரு மனிதனுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிறருக்குக் கொடுக்கக் கொடுக்க குறையாத ஒரே செல்வம் கல்வி தான்.
அத்தகு கல்வியை நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு,வடிவமைத்த,அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில், கடந்த 2008 ஆம் செப்டம்பர் 11 ஆம் தேதி, மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவித்தது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின்போது சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய முஸ்லிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்து - முஸ்லிம் ஒற்றுமையுடன் இந்தியாவை மேம்படுத்தவேண்டும் என்று நாளும் உழைத்த நல்ல உள்ளம் கொண்ட பேரறிவாளர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டு முதல், தான் மறையும் 1958ம் ஆண்டு வரை கல்வி அமைச்சராக பணிபுரிந்தார். சுதந்திரம் பெற்ற இந்தியாவின் கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவுசெய்ய உறுதிபூண்ட இவர், அதற்கான அடித்தளத்தை அமைத்தார்.
இந்திய தொழில்நுட்ப கழகத்தை( IIT ) அமைத்ததும், பல்கலைக்கழக மானியக் குழு(UGC) என்ற அமைப்பிற்கு அடித்தளமிட்டதும், அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி மையம் (Centre for Scientific and Indusrial Research CSIR) உருவாக்கியதும் இவரது பெரும் சாதனைகளில் சில. சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954)உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளையும் தோற்றுவித்தார்.
உலக நாடுகளுக்குச் சவால் விடும் வகையில், இந்திய கல்வியில் பெரும் மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் கொண்டு வந்தார்.
உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தாம் பாரத ரத்னா விருது தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் மறுத்துவிட்டார். அவர் மறைந்த பிறகு இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இவருடைய அறிவாற்றலையும் செயல்திறத்தையும் உணர்ந்த காந்தியடிகள் இவரைப் ‘பிளாட்டோ, அரிஸ்டாட்டில், பிதாகரஸ் ஆகிய மூவரும் சேர்ந்த ஆளுமை உடையவர்’ எனப் புகழாரம் சூட்டிப் பாராட்டினார்.பேரறிவாளர் எனக் காந்தியடிகளால் போற்றப்பட்ட அபுல்கலாம் ஆசாத் நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்வோம்.
* எல்லா மாணவர்களுக்கும் சாதி,மத,இன பாகுபாடின்றி தரமான கல்வி வழங்க வேண்டும்.
* அனைத்துக் கல்வித் திட்டங்களும் மதசார்பற்ற அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
* 14 வயது வரை இலவசக் கல்வி யாவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
* பள்ளிக்கூடக்கல்வி தாய்மொழியில்தான் அமைதல் வேண்டும்.
இவையெல்லாம் ஆசாத் அவர்களால் விடுதலை பெற்ற இந்தியாவின் மேன்மைக்காக முன்மொழியப்பட்ட கல்விச் சிந்தனைகள்