3 பிப்ரவரி, 2022

அறிஞர் அண்ணா நினைவுநாள்

     தமிழகத்தில் இருமொழி‌க் ‌‌கொள்கையை கொண்டுவந்தவர், சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவர். இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொ‌ண்ட, “தெ‌ன்னாட்டு‌ பெர்னாட்ஷா” என்று ‌‌அழைக்கப்படு‌ம் அறிஞர் அண்ணாவி‌ன் நினைவு நாள் இன்று‌. 

     குள்ளமான உருவம், கறைபடிந்த பற்கள், கவலையில்லாத் தோற்றம், சீவாத தலை, பொருத்தமில்லாத உடைகள் - அறிஞர் அண்ணாவைப்பற்றி நாவலர் நெடுஞ்செழியன் கூறிய வர்ணனைகள் தான் இவை. 

    1937 தொடக்கக் காலக்கட்டத்திலும், அதற்கு‌‌ பின்பும்‌‌ தமிழ் மொழி அழியும் நிலை ஏற்பட்டபோது, மொழி பிழைத்தால்தான் இனம் பிழைக்கும், நாமும் தலைநிமிர்ந்து வாழ முடியும் என தமிழ்ச் சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுத்தவர். 

    தேர்தல் அரசியல் பாதையில் தமிழ்நாடு கண்டெடுத்த மாபெரும் தலைவர். தமிழர் என்ற சொல்லால் அனைத்து அடையாளங்கள் மற்றும் பேதங்களைக் களையும் கனவு அரசியலைத் தமிழர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, 1949 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் என்றொரு கட்சியை நிறுவினார். அடுக்கு மொழி வசனங்கள் மூலம், மக்களைத் தன்பால் ஈர்த்த அறிஞர் அண்ணா 1909ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில் பிறந்தார். 



    காஞ்சிபுரத்தில் நடராஜன் - பங்காரு அம்மாள் தம்பதிக்கு மகனாய்ப் பிறந்த அண்ணாதுரை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். நாடகத்தின் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பு, பின்னாளில், திரைப்படங்களுக்கு கதை, வசனங்கள் எழுதக் காரணமாக இருந்தது. ஓர் இரவு, வேலைக்காரி, நல்லதம்பி உள்ளிட்ட திரைப்படங்கள் வாயிலாக, வசனங்கள் மூலம் மக்கள் மனதில் பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பினார்.

     குறுகிய காலத்திலேயே அண்ணா தன்னுடைய ஆழமான கருத்துக்களினாலும், பேச்சாற்றலினாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தில் ஒரு பேரியக்கமாக வளர்த்தார். தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் அண்ணா பேச்சாற்றலில் ஈடு இணையற்றவராக இருந்தார். 

     அண்ணாவால் வேகமாக வளர்ந்த தி.மு.க. சட்டப்பேரவைத் தேர்தல்களில் பங்கு கொண்டு, 1957 இல் 15 உறுப்பினர்களுடனும், 1962 இல் 50 உறுப்பினர்களுடன் சட்டப்பேரவையின் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இருப்பினும், 1962 இல் அண்ணா காஞ்சியில் நடைபெற்ற தேர்தலில், பண பலத்திற்கு ஈடு கொடுக்க இயலாமல், வெற்றி வாய்ப்பினை இழந்தார் . அது ஒருவகையில் நல்ல சம்பவமாக மாறியது. 

    அண்ணா உடனடியாக, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய ஆங்கிலப் புலமையையும், பேச்சாற்றலையும், அறிவையும் இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்துவதற்கு நல்வாய்ப்பாக கிடைத்தது.

     அந்தக்காலத்தில் தி.மு.க. "திராவிட நாடு' கொள்கையில் உறுதியாக இருந்தது. மாநிலங்களவையில், தன்னுடைய கன்னிப்பேச்சில் , "I would rather have a committee of nations than a conglomeration of states" என்று தனது கம்பீரமான குரலில் பேசி முடித்தார். அன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த அடல் பிகாரி வாஜ்பாய், அண்ணா அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று "உங்களின் கருத்துக்களை நான் ஏற்கவில்லை என்றாலும், நீங்கள் பேசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது' எனக் கூறினார். 

     இந்நிகழ்ச்சி நடந்த ஆறு மாதங்களுக்குள் (1962 நவம்பரில்) சீன நாட்டின் ராணுவப் படைகள் நம்முடைய வடகிழக்குப் பகுதியான தேச்பூரை கடுமையாகத் தாக்கின. உடனடியாக அண்ணா, தன்னுடைய நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி தம்முடைய கட்சி, காங்கிரசை கொள்கை ரீதியாக எதிர்த்தாலும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் பாரதப்பிரதமர் பண்டித நேருவின் மத்திய அரசுடன் தி.மு.க. முழுமையாக ஒத்துழைக்கும் என அறிவித்ததுடன்" நாட்டின் பிரிவினை கொள்கையை கைவிட முடிவெடுத்துள்ளது' எனக் கூறி, "திராவிட நாடு' பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

     1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக வெற்றி பெற முதலமைச்சராக பொறுப்பேற்றார் அண்ணா. சுயமரியாதைத் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றியது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இவரின் காலத்திலேயே நடந்தது. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட 1969ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...