13 பிப்ரவரி, 2022

உலக வானொலி நாள்

     


    தொழில்நுட்பங்கள் பெரிதாக வளர்ச்சி அடைந்திடாத காலகட்டத்தில் ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகக் கண்டு பிடிக்கப்பட்ட வானொலி இன்றும் அதன் மவுசை  இழக்கவில்லை. இப்போதும் உலக மக்கள் அதிகம் பேரைச் சென்றடையும் ஊடகமாக வானொலியே திகழ்கிறது.

    வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நாவின் துணை அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13 ஐ உலக வானொலி நாளாக 2011 இல் அறிவித்தது. 1946 இல் ஐ.நா வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 13 ,உலக வானொலி நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    இன்றளவில் தொலைக்காட்சி, இணையம் என, ஊடகம் பல்வேறு புதுமைகளுக்கு உட்பட்ட போதிலும், வானொலி என்பது பெரும்பான்மையோர் பயன்படுத்தும் ஊடகங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் பெரும்பான்மையான கிராமங்களில் மக்கள் வானொலியைப் பயன்படுத்தித்தான் அன்றாடத் தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.

உலக வானொலிநாள் 2022 - துணைக் கருப்பொருள்கள்

1. வானொலி இதழியல் மீது நம்பிக்கை 2. நம்பிக்கை மற்றும் அணுகல்  3. வானொலி நிலையங்களின் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மை

     பரபரப்புச் செய்திகளாகட்டும், பயனுள்ள தகவல்களாகட்டும் படிக்காத பாமரர்களுக்கும் அதனைக் கொண்டு சேர்த்ததில் வானொலியின் பங்கு அளப்பரியது. இன்று எத்தனையோ தொலைத்தொடர்பு சாதனங்களும் நிகழ்ச்சிகளும் வந்துவிட்டாலும், வானொலியில் கேட்ட , இன்று ஒரு தகவலோ, ஒலிச்சித்திரமோ தந்த அந்த உணர்வை, நிச்சயம் ஈடுசெய்ய முடியாது என்பதே அந்தக் காலத்து மக்களின் ஒரே குரல். 

    அடர்ந்த காட்டிலோ,யாருமற்ற தனிமையிலோ, மனக்கவலையிலோ, உற்சாகமற்ற வேளைகளிலோ, காத்திருக்க வேண்டிய நேரத்திலோ, உறக்கம் தவிர்க்கவோ, அறிவை வளர்க்கவோ, தெரிந்த அறிவைப் புதுப்பித்துக் கொள்ளவோ, உறங்க வைக்கவோ,மகிழ்ச்சியைக் கூட்டவோ…. இவ்வாறு வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் நம்மோடு உற்ற நண்பனாய் இருப்பது வானொலி.



செய்திகள் வாசிப்பது - சரோஜ் நாராயணசாமி

  

செய்திகள் வாசிப்பது - ஜெயாபாலாஜி

     மனதில் நின்ற செய்தி வாசிப்பாளர்கள் சிலரை நினைகூர்வோம்.சரோஜ் நாராயணசாமி, சாம்பசிவம், ஜெயாபாலாஜி…. இன்னும் பலர்.

எஸ்.பி.பி உடன் பி.ஹெச்.அப்துல் ஹமீது


நடராஜ சிவம்


    இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர்கள் - எஸ். பி. மயில்வாகனம் (இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில், திருப்பிப்பார், ஜோடி மாற்றம், இருகுரலிசை, ஒருபடப்பாட்டு போன்ற பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார்), கே. எஸ். ராஜா, பி.ஹெச்.அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம்,நடராஜ சிவம், புவனலோஜனி 

    
ஒரு காலத்தில் வானொலி வைத்திருப்பவர் வசதியானவர் என்று கருதப்பட்டது. வானொலி வைத்திருக்க உரிமம் ( License) வைத்திருக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறோம். ஆனால் இன்று பலவிதமான ஊடகங்கள் வந்தாலும், வானொலி, அன்று தந்த மகிழ்ச்சியை இன்று பெறமுடிவதில்லை. இலங்கை வானொலியைக் கேட்க, அங்கு மின் வசதி இல்லாத போது, சைக்கிள் டைனமோ மின்சாரத்தைப் பயன்படுத்தி வானொலி கேட்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். 

    இலங்கை வானொலியில் அடிக்கடி நேரம் சொல்வார்கள். ஒரு பாடல் ஒலித்து முடிந்த பிறகும் அடுத்த பாடல் ஒலிக்கப் போகும் முன்பும் நேரம் சொல்வார்கள். இதனால் அப்போதெல்லாம் உழைக்கும் மக்கள் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு இருக்கத் தேவையில்லை. சாலையிலே நடந்தாலும் சோலையிலே இருந்தாலும் யார் வீட்டு வானொலியில் இருந்தோ நேரம் ஒலிக்கும். காற்றலையிலேயே கடிகாரம் பார்த்துக் கொள்வார்கள். கடிகாரம் உள்ளவர்கள் நேரத்தைச் சரிபார்க்கவும் இலங்கை வானொலியை நம்பியிருந்தார்கள்.

    இலங்கை வானொலியில் அனைத்து அறிவிப்பாளர்களும் அழகான தமிழில் பேசுவார்கள் .ஆங்கிலக் கலப்பின்றி அவர்கள் இயல்பாகவும் விரைவாகவும் தமிழ் பேசுவார்கள் .

    'மைக்' என்று சொல்ல மாட்டார்கள் ’ஒலிவாங்கி’ என்றுதான் சொல்வார்கள் . ’வால்யூமைக் குறைத்துப் பேசுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள் .’ஒலி அளவைக் குறையுங்கள்’ என்பார்கள்..’பெல் அடித்தது’ என்பதற்கு ’மணி ஒலித்தது’ என்பார்கள். ‘பட்டனைத் தட்டுங்கள்’ என்பதற்குப் ’பொத்தானை அழுத்துங்கள்’ என்பார்கள்.’டைம் அப்’ என்பதற்குப் பதிலாக ’உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது’ என்றுதான் சொல்வார்கள்.

    சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..
இப்பாடலை அன்று முணுமுணுக்காத வாயே இல்லை என்று சொல்லுமளவுக்கு புகழ் பெற்ற ஈழத்துத் துள்ளிசைப் பாடல். இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் இப்பாடல் புகழ் பெற்றிருந்தது.

    கே.எஸ். ராஜா "திரைவிருந்து" என்ற இலங்கையில் ஓடும் திரைப்பட விளம்பர நிகழ்ச்சியை நடத்துவார்.

கே.எஸ்.ராஜா

    கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு...... வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா!

    "அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது" என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பானத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா!

பி.பி.சி தமிழோசை - சங்கரண்ணா

     பி.பி.சி - தமிழின்- சங்கரண்ணா, உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்குக் காற்றலை வழியே உறவுப்பாலம் அமைத்தவர் இவர். முப்பது நிமிட ஒலிபரப்பில் உலகின் முக்கிய செய்திகளோடு, அறிவியல், நாடகம், செய்தி விமர்சனம் என நறுக்காகக் கொடுத்து நிறைவான நிகழ்ச்சிகளைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர். வானொலி ஊடகம் சிகரத்தில் வைத்துப் போற்றப்பட்ட காலகட்டத்தில் மறக்கமுடியாத நாயகர்களில் ஒருவர் ஷங்கர் அண்ணா என்பதைக் கடந்த தலைமுறை இன்னும் நன்றியோடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வானொலி ஊடகத்துறையில் தன் பங்களிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியவர்.

ராஜேஸ்வரி சண்முகம்

    மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பசுமை நிறைந்த வாழ்வின் சுவடுகளில் வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் குரலும் பதியப்பட்டிருக்கும். காலையிலே இரண்டுவரிக் கவிதை குழைத்துத் தரும் பொங்கும் பூம்புனலில் இருந்து பெண்களுக்காகவே இவர் கொடுத்த பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி என்ற படைப்பைப் பால் வேறுபாடின்றி ரசித்த காலமும் நினைவுக்கு வருகின்றது. ஒருகாலத்தில் எட்டாக் கனியாக இருந்த இன்றைக்கு வானொலிப் பணி என்பது இன்று கையில் கிட்டிய பூமாலையாக வாய்த்திருக்கும் சூழலில் ஒரு வானொலி நிகழ்ச்சியை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு அளவுகோலாகத் திகழ்ந்தவர்களில் இவரும் ஒருவர். சொல்லப்போனால் வானொலித்துறையின் இலட்சணம் என்பது இவர் போன்ற அறிவிப்பாளர்களால் தான் துலங்கியது.

    இன்று ஒரு தகவல் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களது பேச்சுகள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பன.

    ஹாம் வானொலி, தற்போதைய சமூக வானொலிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.இன்று தனியார் பண்பலை வானொலிகள் பல வந்துவிட்டாலும் அகில இந்திய வானொலியின் சேவைகள் என்றும் தனித்து நிற்கின்றன. மணிப்பூர் மாநிலத்தில் அகில இந்திய வானொலி செய்துவரும் சேவை ஓர் உதாரணம். இன்றும் அந்தப் பகுதிகளில் வாழும் 30 லட்சம் மக்களுக்காக 30 வெவ்வேறு பேச்சுவழக்கு மொழிகளில் தனது சேவையைச் செய்துவருகிறது.

    சரி, ‘ஆகாஷ்வாணி’ என்ற பெயர் எப்போது வைக்கப்பட்டது? 

    1938 இல் ரவீந்திரநாத் தாகூர் அகில இந்திய வானொலிக்கு அந்தப் பெயரை வைத்தார். 

    ‘ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது…’ என்று கனத்த மெளனத்தை உடைத்துக்கொண்டு ஒலிக்கும் குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான ‘அகில இந்திய வானொலி’யின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும்.

    உலகின் பல்வேறு பகுதிகளிலிலும் இருந்த மக்களை ஒன்றிணைத்த ஒற்றைச் சாதனத்தின் வடிவம் இன்று மாறிப் போனாலும், அதன் நினைவுகள் என்றும் பசுமையாகவே இருக்கிறது. 

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...