அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான அறிவியல்தினத்தை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) 2001 இல் பிரகடனப்படுத்தியது. 2002 இல் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது.
அறிவியல் மக்களுக்கே, அறிவியல் நாட்டிற்கே என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இது அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அறிவியலைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், போர் ஆயுதங்களை உருவாக்க அறிவியலைப் பயன்படுத்துவதற்கு எதிராக வாதிடும் நாள்.சிறந்த ஆய்வுகளில் ஈடுபடும் இளம் விஞ்ஞானிகளுக்கு, யுனெஸ்கோ விருதுகள் வழங்கி இத்தினத்தில் கௌரவிக்கிறது.
அமைதியான உலகை உருவாக்குவதில் அறிவியலின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இந்த நாளின் நோக்கம்.
அறிவியலை சமுதாயத்துடன் மிகவும் நெருக்கமாக இணைப்பதன் மூலம், அறிவியல் முன்னேற்றங்கள் குறித்து குடிமக்களுக்கு தகவல் அளிக்கப்படுவதை, இந்நாள் உறுதிசெய்கிறது.
எண்ணற்ற அறிவியலாளர்கள் பல துறைகளிலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவந்தனர். இவைகளெல்லாம் மனிதகுலம் மேம்படுவதற்குத் தக்கனவாய் அமைந்தன. மருத்துவத்துறையில், மனிதன் மகத்தான புரட்சிகளைக் கண்டான்.
இதன் காரணமாக மனித ஆயுளை நீட்டிக்க முடிந்தது. உடலில் பழுதுபட்ட உறுப்புகளை நீக்கிவிட்டு மாற்று உறுப்புகளை வைத்துக்கொள்ள முடிந்தது. அதைப்போல, புவியீர்ப்பு விசையைத் தாண்டி ,வெளியே சென்று விண்வெளியில் வலம் வர முடிந்தது. சந்திரனில் கால் பதிக்க முடிந்தது. செயற்கைக் கோள்களை பூமிக்கு மேலே நிலைநிறுத்தி 24 மணி நேரமும் நாம் வசிக்கும் இப்புவியைக் கண்காணிக்கவும் முடிகிறது.
அறிவியல் புரட்சி மனித இனத்திற்கு மாபெரும் நன்மைகள் செய்தது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் பல்வேறு பாகுபாடுகளின் காரணமாக மனித இனத்தைக் கொத்துக்கொத்தாக அழிப்பதற்கும் பயன்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் நாட்டின் மீது அணுகுண்டு வீசப்பட்டு ஒரு சில நிமிடங்களில் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கவும் அறிவியல் வழிகோலியது.
அறிவியல் என்பது கூரான கத்தியைப் போன்றது. அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது, அதுயார் கைகளில் உள்ளது என்பதைப் பொறுத்தது.
அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் எல்லா காலத்திலும் எல்லாத் தரப்பினராலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.
இவற்றையெல்லாம் காணும்போது, நம்மை நாமே சுயபரிசோதனை செய்யும் இடத்திற்கு வருகிறோம்.அறிவியலை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதே அது.
கற்ற அறிவினை அன்றாட வாழ்வினில் பயன்படுத்துவதே அறிவியல் மனப்பான்மையாகும். அதுஒன்றின்மூலமே, மனித இனத்திற்குள் இடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒப்பற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும்.
“அறியாமையே மனித இனத்திற்கு ஏற்படும் எல்லா கேடுகளுக்கும் மூலகாரணம்” என்று புத்தர் கூறினார்.
இந்நாளில் அறியாமை என்னும் இருளை விரட்டி அறிவெனும் தீபத்தை ஏற்றுவோம்.