2 டிசம்பர், 2021

உலக கணினி எழுத்தறிவு தினம் (World Computer Literacy Day)


 
       ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 2 ம் தேதி உலக கணினி எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது. நம் அன்றாட வாழ்வில் கணினி ஓர் அத்தியாவசியப்பொருளாகி விட்டது. நாம் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ கணினியைச் சார்ந்து வாழவேண்டியுள்ளது. சிறு வணிகத்தலங்கள் முதல் செயற்கைக் கோள் ஈறாகக் கணினியின் பயன்பாடு இன்றியமையாதது. 

       அத்தகைய காலகட்டத்தில், ஒவ்வொருவரும், அடிப்படைக் கணினி அறிவையாவது பெற்றிருக்கவேண்டியது அவசியமாகிறது.கற்றதோடு மட்டுமல்லாமல், அவ்வறிவை அன்றாட வாழ்வில் செயல்படுத்தும் திறமையுள்ளவர்களே மிளிர முடியும்.

       தகவல், தொழில் நுட்பத்துறையினர் மட்டுமன்றி, ஆசிரியர்கள், மருத்துவர்கள், அறிவியல் அறிஞர்கள்,ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், நீதித்துறையினர், போக்குவரத்துத் துறையினர் எனப் பல்வேறு பிரிவினரும் தங்களை இத்துறையில் UPDATE செய்துகொள்வது அவசியம்.

     “அனுபவமே சிறந்த ஆசான்” எனும் வாக்கு இத்துறைக்கு மிகவும் பொருத்தமானதாகும். நாம் ஏட்டில் கற்றுக்கொண்டதை விட, அனுபவத்தில் கற்றுக்கொள்வதே நிலைத்து நிற்கும்.

       உலகில் தகவல் தொழில்நுட்பத்துறையை ஆள்பவர்கள் இந்தியர்களே. அதிலும் குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே.இதற்குக் காரணம் தாய்மொழிக்கல்வி வாயிலாக அறிவு பெறுவதும், ஐயம் தீரக் கற்பதும் ஆகும்.

    இத்தகு பெருமை மிகு நாளில், நாமும், நம்மைச் சார்ந்தோரையும் கணினி அறிவு பெற்றவர்களாக மாற்றுவோம். கணினி மற்றும் அதன் தொடர்புடைய தொழில்நுட்பம் பற்றி விரிவாக அறியச் சிறந்த வாய்ப்பாக இந்த நாளை எடுத்துக்கொள்வோம்.

  இன்றைய சூழலில், கணினியை இயக்குபவர்கள் மட்டுமல்ல,  நன்றாகக் கையாளத் தெரிந்தவர்களே, அதிகம் வேண்டப் படுபவர்களாக இருக்கிறார்கள். தாய்மொழியைக் கணினியில் கையாளுங்கள். உலகம், இன்னும் உங்களை அதிகம் மதிக்கும். 

சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினம்

     


     அடிமை முறை தொன்மைக் காலங்களில் இனங்களுக்கிடையே போரினால் ஏற்பட்டது. தோற்ற வீரர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். அவர்களின் பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாக்கப்பட்டனர். எகிப்தியர், போர்களில் தோற்றவர்களையும், மற்றவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கியவர்களையும் அடிமைப்படுத்தினர். 

       நாகரிக நிலையினால் உருவான தனிச்சொத்துகளைப் பெருக்கவும், உற்பத்தி முறையைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும் மனிதன் அடிமையை உருவாக்கினான். 

     கிரேக்கம், ரோம், எகிப்து, பாபிலோன் போன்ற தொன்மையான நாகரிகங்களின் வளர்ச்சிக்கு அடிமைகளின் உழைப்பே மூலாதாரமாக இருந்தது. இங்கு உழைப்பு என்பது எந்த வரையறைக்கும் உட்படாதது. அதனாலேயே 

அடிமைகளைப் ‘பேசும் கருவிகள்’ என்று அரிஸ்டாட்டில் குறிப்பிட்டார். 

    அடிமைகள் முதலில் அரசருக்குச் சொந்தம். அரசர் தனக்கு வேண்டியவர்க்கு அடிமைகளைப் பரிசளிக்கும் வழக்கம் இருந்தது. அடிமை முறை கிரேக்க நாகரிகத்தில் பெரும்பங்கு வகித்தது.

    அடிமைகளின் கொடூரமான வரலாறாகக் கருதப்படும் ரோமில் மன்னர்கள் தங்களின் பொழுதுபோக்கு பொருளாக அவர்களை நடத்தினார்கள். ‘கிளாடியேட்டர்’ எனப்படும் அடிமைகளை மற்றொரு அடிமையுடன் அல்லது சிங்கம், புலி என விலங்குகளுடன் மோதவிட்டு ரசிக்கும் வழக்கம் ரோமிலிருந்தது.

      “அமெரிக்காவே நீ இலக்கற்றுப் போய்விட்டாய். உனது சகோதரர்களை மிதித்துவிட்டுச் சென்று கொண்டிருக்கிறாய். ஏதோ சில மனிதர்கள் மட்டுமல்ல. எல்லோரும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். எழுந்திரு அமெரிக்கா. இலக்கு நோக்கித் திரும்ப வா” என போர்க் குரலெழுப்பி நிறவெறிச் சமத்துவத்தை நிலைநாட்டப் போராடிய மக்களின் போராளி மார்டின் லூதர் கிங்கின், அடிமை முறை ஒழிப்பிற்கான பங்களிப்பு ஈடு இணையற்றது. மகத்துவமானது. 

     உலக மக்களிடையே அடிமைத்தனத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், அடிமைத்தனத்தால் சமுதாயத்தில் உண்டாகும் தாக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் டிசம்பர் 2ஆம் தேதி சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. 

      1949-ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி அன்று ஆள்கடத்தலை ஒடுக்குதல் மற்றும் பிறர் பாலியல் தொழிலுக்குட்படுத்தப்பட்டுச் சுரண்டப்படுவதை தடுப்பதற்கான உடன்படிக்கை ஐ.நா.சபையின் பொது அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டதைக் குறிக்கும் விதமாக (United nations conventions for the suppression of the Traffic in person and of the exploitations of the prostitution of others) இத்தினம் கொண்டாடப்படுகின்றது. 

    ஆண்டுதோறும் வால்க் ப்ரீ பவுண்டேஷன் எனும் அமைப்பால் உலக அடிமைத் தன குறியீடு (Global Slavery index) வெளியிடப்படுகின்றது. இந்த அமைப்பானது சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (International labour Organisation) சார்பாக “நவீன அடிமைத்துவத்தின் உலகளாவிய மதிப்பீடுகள்”  (Global Estimates of modern slavery) என்ற அறிக்கையை வெளியிடுகிறது. இவற்றில் நாடுகள் வாரியான மதிப்பீடுகள் வெளியிடப் படுவதில்லை.இந்த அறிக்கையின் படி, உலகம் முழுவதும் 40.3 மில்லியன் அளவிற்கு நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். 

    சுதந்திர நாட்டில் மனிதர்களின் சம உரிமை நசுக்கப்பட்டு போராட்டக்களமாக்கப்படும் வெட்கக்கேடு. அழு என்றால் அழுவதற்கும், சிரி என்றால் சிரிப்பதற்கும், விழு என்றால் விழுந்து சாவதற்கும் அவர்கள் ஒன்றும் திக்கற்றவர்கள் அல்லர். 

   மக்களை அடிமைகளாக்கும்,குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு, உடனடி தண்டனையும் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிகளையும், சலுகைகளையும் வழங்குவதன் மூலமாக ஒரு பாதுகாப்பான மனிதக் கடத்தலற்ற சமூகத்தை உருவாக்க முடியும்.எனவே அடிமைளை மீட்டுப் புதிய சமூகம் படைப்பதில், நாம் ஒவ்வொருவரும் அர்த்தமுள்ள பங்களிப்பைச் செலுத்துவோம் எனச் சூளுரைப்போம். 

  “குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் 

    வடுவன்று வேந்தன் தொழில்” 

        குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும் குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும் என்பது வள்ளுவர் வாக்கு. கடும் சட்டங்கள் மூலம், மனிதன் அடிமையாவதைத் தடுத்து, மனிதநேயம் மலரச்செய்வோம்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...