மன அழுத்த விழிப்புணர்வு தினம்
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் முதல் புதன்கிழமை மன அழுத்த விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மன அழுத்த விழிப்புணர்வு தினமானது நமது வாழ்வில், மன அழுத்தம் செலுத்தும் பங்கினையும், அதன் விளைவுகளையும் பற்றி தெரிந்து கொள்ள நாம் நேரம் ஒதுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
மன அழுத்தமானது நமது பணியிடத்திலும், அன்றாட வாழ்விலும் நமக்கு கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாம் பணியில் எதிர் கொள்ளும் சவாலோ, அல்லது உறவு நிலைகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளோ நம்மை கடுமையான மன அழுத்தத்திற்கு ஆட்படுத்தும் அபாயம் உண்டு.
உலகளவில் ஏற்படும் நோய்களில் மன அழுத்தம்தான் முதலிடத்தில் உள்ளது. ஆனால், பெரும்பாலான நேரங்களில் பலரும் இதை ஒரு நோய் என்றே உணருவதில்லை. மன அழுத்தம் என்பது ஒரு தீவிரமான மனநோய்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது பதிமூன்று கோடி பேருக்கு இந்த தாக்கம் இருக்கிறது. தற்கொலை செய்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மனநோய் பாதிக்கப்பட்டவர்கள். பொதுவான புள்ளிவிபரங்களை பார்த்தால் ஏழை நாடுகளை விட பணக்கார நாடுகளில்தான் தற்கொலையும் அதிகம், மனநோயும் அதிகம். இந்தியாவை பொறுத்தவரை தற்கொலையும், மனஅழுத்த பாதிப்பும் அதிகம் இருந்த மாநிலம் கேரளா. இந்த பாதிப்பை வரிசைப்படுத்தும் போது கடந்த ஆண்டு வரை கேரளா முதலிடத்தில் இருந்தது. கடந்த ஆண்டுவரை 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது தற்கொலையிலும், மன அழுத்த பாதிப்பிலும் முதலிடத்தில் உள்ளது கவலைக்குரிய விஷயம்.
மன அழுத்தம் தவிர்க்க ஆலோசனைகள்:
* வாழ்க்கையில் பிரச்னைகளே வரக் கூடாது என்று எண்ணாதீர்கள். அது வரத்தான் செய்யும். பிரச்னையில்லாமல் வாழ்க்கை இல்லை. ஆகவே, அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றித் திட்டமிடுங்கள்.
* உங்களுக்கு ஒரு பிரச்னை வந்தால், அது உங்களுக்கானது மட்டும் அல்ல. அது உங்களைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதை உணருங்கள். அதனால், உங்களுடைய துயரங்கள் அனைத்தையும் நெருக்கமான நண்பர்களிடம் ஷேர் செய்யுங்கள்.
* அலுவலகத்திலிருந்து வெளியே வந்துவிட்டால், நம்முடைய பிரச்னைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும். வீட்டுக்கு வந்தும், அலுவலக வேலைகளைத் தொடரக் கூடாது. கூடுமானவரை இதைத் தவிர்க்கவேண்டும். வீடு என்பது வாழ்வதற்குத்தான்!
*வீட்டிலோ , பணி செய்யும் இடத்திலோ, நீங்கள் பாதுகாப்பாய் உணர்பவர்களுடன் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் சூழல் , உங்களைச் சுற்றி இருப்பவர்கள் பிரச்சினைகளை எளிதில் கையாளுபவர்களாக இருக்கட்டும்.
*எப்போதும் கேலி, கிண்டல், நகைச்சுவை இருக்குமிடத்தில் நீங்கள் இருந்தாலே போதும். தனிமையை நாடிச் செல்லாதீர்கள்
* தினசரி எட்டு மணி நேர உறக்கம் என்பது அவசியம். அப்போதுதான், அடுத்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளவும் வேலைகளில் கவனம் செலுத்தவும் முடியும்.
* நாம் சாப்பிடும் உணவு எப்படியிருக்கிறது.அந்த உணவுகளால் நம்முடைய மனநிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றியெல்லாம் மனநல மருத்துவர்கள் விவாதித்து வருகின்றனர். எனவே, உணவுப்பழக்கம் முக்கியமான ஒன்று. கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். துரித உணவுகளை அறவே தவிர்க்கலாம். ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியமானது.
* வாழ்க்கையில், நாம் நினைக்கிற மாதிரிதான் எல்லோரும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அது சாத்தியமில்லை. எதிர்மறைக் குணங்கள் கொண்டவர்களிடம் பழக வேண்டிய சூழல் ஏற்படும். அவர்களைப் புரிந்துகொள்ளவும் ஏற்கவும் பழகவேண்டும்.
* ஆக்கப்பூர்வமான செயல்களுக்கான நேரத்துக்கு முக்கியத்துவம் தரவும். பொழுதுபோக்கு விஷயங்களுக்கு முன்னுரிமை தருவதைத் தவிர்க்கவேண்டும். நேர மேலாண்மையில் கவனம் செலுத்தலாம். வாழ்க்கைக்கு எது அவசியமானது என்பது பற்றி யோசிக்கலாம். விருப்பத்துக்கும் தேவைக்குமான வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு, அதன்படி செயல்படுவது நலம் தரும். தேவைகள் நிறைவேறிய பின்னரே, விருப்பத்தை நோக்கி நகரவேண்டும்.
* உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த இடத்தில் எப்படியான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பது பற்றித் திட்டமிடலாம். நம்முடைய உணர்வுகள் பிறரைக் காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்வது மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.
* தோல்விகள் என்பது பிரச்னையில்லை. ஆனால், அந்தத் தோல்விகளிலிருந்து, நீங்கள் எப்படி வெளியே வருகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதற்குரிய பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
தற்காலிக மன அழுத்தம் என்பது அதுவாகவே சரியாகிவிடும். ஆனால், சில பிரச்னைகளால் சாப்பிட முடியாமல், தூங்கமுடியாமல் போனாலோ, வேலைகளில் பாதிப்பு ஏற்பட்டாலோ அது தீவிர மன அழுத்தம். இதற்கு, மனநல மருத்துவரைச் சந்தித்து, சிகிச்சை எடுத்துக்கொள்வதே சரியானது.
மகிழுங்கள், உங்களைச் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.