3 நவம்பர், 2021

தேசிய இல்லத்தரசிகள் தினம்

 தேசிய இல்லத்தரசிகள் தினம்




         குடும்பத்தையும், வீட்டையும் நிர்வகிக்கும் தலையாய பொறுப்பு இல்லத்தரசிகளுக்கே உண்டு. கணவன், குழந்தைகள் மற்றும் வீட்டையும் பராமரிக்கும் பெண்கள் ஒரு குடும்பத்தின் கண்களாக இருக்கிறார்கள். அவர்களின் மனநிலை நலமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தின் மகிழ்ச்சியும் இல்லத்தரசிகளின் மகிழ்ச்சியை சார்ந்தே உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கும் குடும்பத் தலைவிகளால் தான் வீட்டின் தரத்தை உயர்த்த முடியும். நாட்டின் வளச்சியில் இல்லத்தரசிகளின் பங்கு மிகவும் இன்றியமையாதது.

       வீட்டில் இருக்கும் பெண்கள், பணிக்குச் செல்லும் பெண்களுடன் தங்களை ஒப்பிட்டு, தன்னால் வீட்டிற்கு வருமானம் பெற்றுத் தர முடியவில்லை, வீட்டிலேயே கிடப்பதால் யாரும் மதிப்பதில்லை என்பது போன்ற எண்ணங்களால் மனதில் பெரிய பாரத்தைச் சுமக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வீட்டைப் பராமரிப்பதும், நிர்வகிப்பதும் கூட ஒரு வேலை தான் என்பதை, குடும்பத் தலைவிகள் உணர்ந்திட வேண்டும்.

      மனதிற்கும் உடலுக்கும் ஊக்கமும், மகிழ்ச்சியும் தரும் தோட்டக்கலை, புதிய வகை உணவு தயாரித்தல், யோகா, உடற்பயிற்சி, ஓவியம், நடனம், பாட்டு, புத்தகம் வாசித்தல், கவிதை, கதை மற்றும் கட்டுரைகள் எழுதுவது, படிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனம் இலேசாகி சிந்தனைகளுக்குச் சிறகு முளைத்து, நீல வானில் பரவசமாய் பறக்கும்.

 'வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் 

மற்றைய எல்லாம் பிற'. 

       அதாவது மற்றவை எல்லாம் இருந்தும், ஒருவரது மனதில் உறுதி மட்டும் இல்லாவிட்டால், அவரது செயலிலும் உறுதி இருக்காது. உறுதியுடன் செயல்பட்டு, பயனுடன் ஈடுபட்டால், மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். இம்மகிழ்ச்சி குடும்பத்துடன் கலந்து வாழ்வியில் சூழலை அழகாக்கும். பயனுள்ள செயல்கள், சமுதாயத்தையும் நல்வழிப்படுத்தும். தீய எண்ணங்களும் அறவே ஒழியும். 

       நாடும் பொருளாதார வகையில் மேம்பட வேண்டுமெனில், அதன் துவக்கம், வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். நவீன கால இல்லத்தரசிகள் தங்கள் பங்களிப்பை செயல்படுத்தி வீட்டையும் நாட்டையும் தரம் உயர்த்த முன்வர வேண்டும்.

        இவ்வாறு நாட்டையும், வீட்டையும் முன்னேற்றப் பின்புலமாய் இருக்கும் இல்லத்தரசிகளைப்போற்றி, அவர்களின் மனம் நிறையும் வண்ணம், அவர்தம் சேவைகளை உணர்ந்து, மனமாற வாழ்த்துவோம்.


( பொறுப்புத் துறப்பு : இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் எனது சொந்தக் கருத்துகள் அல்ல )😀😀😀

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece