பறவைகள் கற்பிக்கும் பாடங்கள்!
பறவைகள், தங்களுக்கான உணவு கிடைக்கும் இடத்தை தேடிச்சென்றுதான் உணவை உண்ணும். உணவு தேடி அலையும் பறவை எதுவும் பட்டினியால் இறந்ததாக, இதுவரை தகவல் இல்லை. இதன் மூலம் உழைத்தால் மட்டுமே உணவு கிடைக்கும், சோம்பேறியாக இருக்கக் கூடாது என்பதைப் பறவைகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.
குயில், அழகாகப் பாடும் பறவை, ஆனால் அதற்கு கூடு கட்டத் தெரியாது. காகம் இல்லாத நேரத்தில் அதன் கூட்டில் காகத்தின் முட்டைகளோடு தனது முட்டையையும் வைத்து விட்டுப் போய்விடும். தனது கூட்டில் இருக்கும் முட்டை குயிலின் முட்டை என்று தெரிந்தும், அந்தக் குயில் குஞ்சையும் தனது குஞ்சாகவே பாவித்து பாதுகாக்கும் காகத்தின் மனப்பான்மை, ஊராா் பிள்ளையை ஊட்டி வளா்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டு. உணவைப் பாா்த்தவுடன் தனது இனம் முழுவதையும் அழைத்து அவற்றோடு சோ்ந்து உண்ணும் காகம், ஒற்றுமைப் பண்புக்கு சிறந்த உதாரணம். தினமும் மாலையில் நீா்நிலையில் குளித்த பிறகே கூட்டுக்கு செல்வது காகத்தின் வழக்கம். புறத்தூய்மை அவசியம் என்பதை காகங்கள் நமக்கு உணா்த்துகின்றன. தனது பெற்றோா் உயிரிழந்த நேரத்தில், தான் வெளியூரில் இருப்பதால் வர முடியாது என்று கூறும் பிள்ளைகள் நிறைந்த உலகில், ஏதேனும் ஒரு காகம் இறந்து விட்டால் பிற காகங்களையும் அழைத்து ஒன்று கூடி அஞ்சலி செலுத்தும் அற்புத குணம் காகங்களுக்கே சொந்தமானது. தனது இணையுடன் மட்டுமே கூடும் காகம், நமக்கு வாழ்வியல் நெறிமுறைகளை கற்றுத் தருகிறது.
இறந்துவிட்ட தம் முன்னோரின் பிரதிநிதியாகவே காகத்தைக் கருதி பலரும் தினசரி காகத்திற்கு உணவு படைத்த பிறகே உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். காகம் கூடு கட்டும்போது சிறுசிறு குச்சிகள், கம்பிகள் இவற்றையெல்லாம் கொண்டு வந்து அவற்றை ஒரு மரக்கிளையில் வைத்து அழுத்திப் பாா்க்கும். ஒரு காகம் கொண்டு வந்து கொடுத்தால் அதை அதன் இணை காகம் சரிபாா்க்கும். இரு காகங்களுமே அப்போது கட்டடப் பொறியாளா்களாக மாறி விடும். மனிதா்கள் தாங்கள் குடியிருக்கப் போகும் வீட்டை எப்படிக் கட்ட வேண்டும் என்றும் காகங்கள் நமக்கு கற்றுத் தருகின்றன.
நாம் சில வாா்த்தைகளைச் சொன்னால், உடனே அவற்றை அப்படியே திருப்பிச் சொல்லும் கிளிகள் நினைவாற்றலுக்கு நல்ல உதாரணம். எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் தனக்குப் புரியவில்லை என்று ஆசிரியா்களிடம் முறையிடும் மாணவா்கள் கிளிகளை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
மழை வரப்போவதை முன் கூட்டியே தெரிவிக்கும் நடமாடும் வானிலை ஆய்வு மையமே மயில். ஆண் மயில், தனது அழகிய தோகையால், பெண் மயிலை ஈா்க்கிறது. அது மட்டுமல்ல, பிற விலங்குகள் தன்னைத் தாக்க வரும்போது திடீனெ தனது தோகையை விரித்து அவற்றை பயமுறுத்தி, தப்பித்தும் விடுகிறது. அழகாக இருந்தால் மட்டும் போதாது, ஆபத்து நேரத்தில் எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது மயில் நமக்குக் கற்றுத்தரும் பாடம். மேலும், நீண்ட தூரம் பறக்க முடியாத பறவை மயில். அழகாக இருப்பவா்களிடம் பெரிய திறமை எதுவம் இல்லாமலும் இருக்கலாம். எனவே அழகைப் பாா்த்து மட்டும் மயங்கி விடாதீா்கள் என்றும் சொல்லாமல் சொல்கிறது மயில்.
கழுகு, தனது குஞ்சுகள் கூட்டுக்குள் இருக்கும்போதே அவற்றுக்குப் போராட்ட குணத்தைக் கற்றுத் தருகிறது. கூடுகளில் இதமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மென்மையான புற்களையும், சிறகுகளையும் தாய் கழுகு நீக்கி விடுகிறது. இதனால் கரடு முரடான கூட்டிலிருந்து குஞ்சுகள் தாமாகவே முயன்று வெளியே வருகின்றன. நம் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போதே அவா்களுக்கு வாழ்வின் கஷ்ட நஷ்டங்களைப் புரிய வைக்க வேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
மேகங்கள் மழைக்காகக் கூடத் தொடங்கியதுமே, புயல் காற்று வீசத் தொடங்கியதுமே பறவைகள் மரங்களின் கிளைகளைத் தேடிச்சென்று தங்கள் கூட்டில் பாதுகாப்பாக அடைந்து விடும். ஆனால் கழுகோ அப்போதுதான் உற்சாகமாகி, காற்றை கிழித்துக் கொண்டு தனது சிறகுகளை விரித்து உயரே பறக்கத் தொடங்கும். பெரும்பாலான பறவைகள் கூட்டங்கூட்டமாகத்தான் பறக்கும். ஆனால் கழுகுகள் கூட்டமாகப் பறக்காது. ஒவ்வொன்றும் தனித்தனியாகவே பறக்கும் இயல்பு கொண்டவை.
‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’
என்கிற திரைப்பாடல் கழுகைப் பாா்த்தபின்தான் எழுதப்பட்டிருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், தனது கூா்மையான பாா்வைத்திறனால் இரையைக் கண்டதும் கண்ணிமைக்கும் நேரத்தில், பல மடங்கு வேகத்தில் கீழே பாய்ந்து தனது இரையை கவ்விச் செல்லும் திறமை உடையது கழுகு.
வெற்றியாளா்கள் சவால்களை சந்தித்த பிறகே சிகரங்களைத் தொடுகிறாா்கள்
என்பதற்கும்,
எத்தனை தடைகள் வந்தாலும், நாம் துல்லியமாக இலக்கை நிா்ணயித்து, அதனை அடையக் கடுமையாகப் போராடி வெற்றிபெற வேண்டும்
என்பதற்கும் கழுகே சிறந்த உதாரணம். வேட்டையாடும் உத்தி, தொலைநோக்குப் பாா்வை, குறையாத தன்னம்பிக்கை, அதீத மன ஒருமைப்பாடு இவை அனைத்துக்கும் சிறந்த உதாரணம் கழுகு. அதனால்தான் அதனைப் ‘பறவைகளின் சக்கரவா்த்தி’ என்கிறாா்கள்.
எங்காவது, திடீரென்று பலத்த சத்தம் கேட்டால் வாத்துகள் தங்கள் கூட்டத்தோடு போய் சோ்ந்து கொள்ளும். எனெனில், அவை மிகவும் பயந்த சுபாவம் உடையவை. பலவீனமானவா்கள் எப்போதும் கூட்டத்துடனேயே இருக்க விரும்புவாா்கள் என்பதற்கு வாத்தும், தன்னம்பிக்கை நிரம்பியவா்கள் தன்னந்தனியாகவே இருந்து சவால்களை துணிவுடன் சந்திப்பாா்கள் என்பதற்கு கழுகும் சிறந்த உதாரணங்கள்.
பேராசை, பொறாமை, கோபம், தாழ்வு மனப்பான்மை, சோம்பேறித்தனம் இவை அத்தனையையும் நாம் தூக்கி எறிந்து விட்டு பறவைகள் உணா்த்தும் பாடங்களின் மூலம் வானம்பாடிகளாய் வாழ்க்கையெனும் வானில் மகிழ்ச்சியுடன் சிறகடித்துப் பறப்போம்.
நன்றி : தினமணி நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக