27 நவம்பர், 2021

வி.பி. சிங் நினைவுநாள்

     


    வரலாற்றில் சில பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டும் எஞ்சி நிற்பதில்லை. அவை, பெரும் வரலாற்றின் சாட்சியங்களாக, நீண்டதொரு கனவின் தொடக்கமாக உருப்பெற்று நிற்கின்றன. விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங்கின் பெயர், அப்படியான பெயர்களில் ஒன்று. 

      இந்திய வரைபடத்தின் கோடுகளைப் போல சமமற்றுக்கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்தியவர் வி.பி.சிங். இன்று அவரது நினைவு தினம். 

     உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக் கொண்டார். படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய வி.பி.சிங், அணுசக்தி விஞ்ஞானப் பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். 

    அரச குடும்பம், செல்வாக்கான வாழ்வு என்றிருந்தவர் வி.பி.சிங். வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தின் செயல்பாடுதான் வி.பி.சிங்கின் பொதுவாழ்வில் குறிப்பிடத்தக்க முதல் விஷயம். அவரின் பூமிதான இயக்கத்துக்குத் தனது சொந்த நிலங்களைத் தானமாக வழங்கினார்.

    எளிய மக்களின்மீது அக்கறையும், சமூக நீதி எண்ணமும் கொண்டிருந்த வி.பி.சிங், 1969 இல் தேர்தல் அரசியலில் வென்றார். உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் என்னும் பரமபதத்தை வி.பி.சிங் தனது நேர்மையாலும் திறமையாலும் திறம்பட எதிர்கொண்டு அதில் வெற்றியும் கண்டார். 

   எம்.எல்.ஏ-வாகத் தேர்வான அடுத்த இரண்டு ஆண்டுகளில்,   1971 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார். வி.பி.சிங்கின் திறமையை அறிந்த இந்திரா காந்தி, தனது அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக அவரை நியமித்தார். 

      நெருக்கடிகாலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட துறைகளில் வர்த்தகத் துறையும் ஒன்று. பதுக்கல் ஒழிக்கப்பட்டதன் வாயிலாக, விலைவாசி, அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அதற்கு வி.பி.சிங்கின் பங்கு உண்டு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பர். 

    குறுகிய காலத்திலேயே இந்திய அரசியலில் வி.பி.சிங்கின் பெயர் தவிர்க்க முடியாத ஒன்றானது. 1980 இல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது இந்திய தேசிய காங்கிரஸ். இந்திரா காந்தி, வி.பி.சிங்கை உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக நியமித்தார்.ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நிதியமைச்சர்,பாதுகாப்புத்துறை போன்ற பதவிகளை அலங்கரித்தார். 

    'ஜனமோர்ச்சா' என்ற கட்சியைத் தொடங்கினார். 1988 இல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து, ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

     1989 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய முன்னணியைக் கட்டமைத்து, ஆட்சியையும் அமைத்துப் பிரதமராகிக் காட்டினார், வி.பி.சிங். 

      பாபா சாகேப் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கையே சேரும்.

     இந்திய அரசியலில் மிக முக்கிய சீர்திருத்தத்தை அப்போது நிகழ்த்தினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார் வி.பி.சிங். அவரின் இந்தச் செயல், இந்தியாவின் அசமன்பாடுகளைத் தவிடுபொடியாக்கி, பல எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற உதவியது. 

     அவர் ஆட்சி செய்தது என்னவோ வெறும் 11 மாதங்கள்தான். அந்த 11 மாதங்களில், 'இந்திய அரசியலில் தன்னிகரற்றவர் வி.பி.சிங் ' என்ற பெரை அவருக்குப் பெற்றுத்தந்தது.

   பல ஆண்டுகளாய் காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு விடிவு கிடைக்காத வேளையில் தான் அங்கம் வகிக்கும் ஜனதா தளம், கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும்போதே "காவிரி நடுவர் மன்றம்" அமைக்க உத்தரவிட்டார். 

     வி.பி.சிங் நல்ல ஓவியரும் கூட. அவரது ஓவியங்கள் கவித்துவமானவை. அவரது கவிதைகள் ஓவியத் தன்மை வாய்ந்தது

   "ஒரு துளி வானம் ஒரு துளி கடல்" என்பது அவரது கவிதை நூலின் தலைப்பு. வானமும் கடலும் துளியாகத் தெரிந்த அவருக்குப் பதவி ஒரு தூசு தான்.

   பிரதமர் பதவியைவிட்டு விலகும்போது, "பிரதமர் பதவியைவிட முக்கியமானது, தேசத்தின் ஒற்றுமை" என முழங்கிய வி.பி.சிங், கடைசி வரை அதுபோல வாழ்ந்தும் காட்டினார். 

     ஏழைகளின் பகதூர், இடஒதுக்கீட்டின் நாயகன் எனக் கொண்டாடப்பட்ட வி.பி.சிங், புற்றுநோய் காரணமாக 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி காலமானார். அவரது பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. 

வி.பி.சிங் அரசியலின் அதிசயம். தமிழர்களாகிய நாம் நன்றியுடன் அவரை நினைவில் கொள்வோம்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...