31 ஜனவரி, 2022

நாகேஷ் நினைவு நாள்

     நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ், தாராபுரம் பகுதியில் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் கிருஷ்ணன் ராவ்-ருக்மணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை கிருஷ்ணன் ராவ் கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் உள்ள இரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்தார். நாகேஷ் அவர்களை சிறுவயதில் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் கிண்டலாக அழைக்கப்பட்டார்.

    தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பி. எஸ். ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்ததால் அவரது முகத்தில் தழும்புகள் உண்டானது. பின்பு நாகேஷ் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தனது தந்தை பணியாற்றிய இரயில்வே இலாக்காவில் திருப்பூர் இரயில் நிலையத்தில் எழுத்தாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால் சிறிது காலம் திரைக்கு செல்லும் காலம் வரை அங்கு பணியாற்றிவந்தார்.

    சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால், இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.

    வசன உச்சரிப்பு ஒரு நடிகருக்கு மிக அவசியம். முக பாவனைகள் மிக மிக அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக பாடி லாங்வேஜ் எனும் உடல்மொழி ரொம்பவே அவசியம். வசனம் பேசி, முகத்தில் உணர்ச்சியைக் காட்டி, உடல்மொழியிலும் அந்த உணர்வுகளை நமக்குக் கடத்துகிற நடிகர்கள் - கலைஞர்கள். மகா கலைஞர்கள். அப்படியான உன்னதக் கலைஞன் - நாகேஷ்.

    ஒல்லியான தேகம்தான். வேலை பார்த்துக்கொண்டே நாடகம், நாடகத்தில் நடித்தபடியே சினிமாவில் வாய்ப்பு தேடுதல் என தொடர்ந்த முயற்சிகளும், முயற்சிகளின் போது பட்ட அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஆனாலும் நாடகத்தில், அங்கே ஒன்று, இங்கே ஒன்று என வாய்ப்புகள் வந்தன.

    கவிஞர் வாலியும் நாகேஷும் நண்பர்கள். ஓர் அறையில் இருவரும் தங்கியிருந்தார்கள். ‘டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு’ என்பாராம் நாகேஷ். அவரும் கழற்றித் தருவார். பிறகு அந்த வாட்ச் அடகுக்கடைக்குச் சென்று பணமாகி, ஹோட்டலுக்கும் சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும். நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால், அது வாலிக்கானது. வாலியிடம் இருந்தால் அது நாகேஷின் பணம்.

    சினிமா தேவதை, நாகேஷை இருகரம் கொண்டு வரவேற்றாள். படங்கள் வரத்தொடங்கின. நாகேஷின் நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கே.பாலசந்தர், தன் முதல் படத்தில் இவரை இயக்கினார். நாடகங்களில் வாய்ப்பு தந்த பாலசந்தர், திரைத்துறையிலும் பயன்படுத்தினார். தன் முதல்படமான ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷை நடிக்கவைத்தார். நாகேஷ் தான் நாயகன். ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷின் நடிப்பைக் கண்டு திரையுலகமே வியந்து மிரண்டது.

    இதைத் தொடர்ந்து பாலசந்தர் தன் படங்களில், விதம்விதமான பாத்திரங்களைக் கொடுத்தார் நாகேஷுக்கு. அது சின்ன கேரக்டரோ, பெரிய கேரக்டரோ, ஆனால் அங்கே அசத்தலான நடிப்பில் நம்மையெல்லாம் அசரடித்திருப்பார் நாகேஷ்.

    எம்ஜிஆருக்கு நண்பன், சிவாஜிக்கு நண்பன், ஜெமினிக்கு நண்பன், முத்துராமனுக்கு நண்பன், பிறகு ஜெய்சங்கருக்கு நண்பன் என்றெல்லாம் நடித்து வந்த நாகேஷ், ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிக்கு நண்பனாகவும் ‘பாமா ருக்மணி’ படத்தில் பாக்யராஜுக்கு நண்பனாகவும் கூட நடித்திருப்பார்.

    அந்தக் காலத்தில், ஏவிஎம் படமாக இருந்தாலும் சரி, தேவர் பிலிம்ஸ் கம்பெனியாக இருந்தாலும் சரி, பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலுவாக இருந்தாலும் சரி, ஏபி.நாகராஜனாக இருந்தாலும் சரி, முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். பிறகுதான் நடிகர்களுக்கு கதை சொல்லுவார்கள். ‘நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிட்டீங்களா. அப்ப படத்தோட வெற்றிக்கு நாப்பது சதவிகிதம் கியாரண்டி’ என்று எம்ஜிஆரே சொல்லிப் புகழ்ந்த சம்பவங்கள், வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத புகழாரம்.

    ‘எங்க வீட்டு பிள்ளை’ படம் முழுக்க, ஒவ்வொரு முறை பேசும்போதும், வார்த்தையை மாற்றி மாற்றிப் பேசி காமெடி பண்ணுவார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வைத்தி எனும் கேரக்டரும் ‘திருவிளையாடல்’ படத்தின் தருமி கதாபாத்திரமும் சாதாரணன் மிகப்பெரிய நடிகனாகிற ‘சர்வர் சுந்தரம்’ படமும் சினிமாப் படமெடுக்கிற ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் ‘காதலிக்க நேரமில்லை’ செல்லப்பாவும் கற்பனையில் இருந்து நிஜமாகவே உருவெடுத்து உலவவிட்டதில் நாகேஷின் நடிப்புக்கும் உடல்மொழிக்கும் பெரும்பங்கு இருக்கிறது. 'பாமா விஜயம்’ ‘அனுபவி ராஜா அனுபவி’ என நாகேஷ் முத்திரை பதிக்காத படங்களே இல்லை.

    மாடிப்படி மாது (எதிர்நீச்சல்)வை எவராலும் மறக்கவே முடியாது. ‘வேட்டைக்காரன்’, ’பாமா விஜயம்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘நூற்றுக்கு நூறு’, ‘ஊட்டி வரை உறவு’ என நடித்த படங்களைப் பட்டியலிடுவது அசாதாரணம்.

    ஒருகட்டத்துக்குப் பிறகு, மீண்டும் நடிப்பில் பிஸியானார் நாகேஷ். நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக நடித்தவர் இந்த முறை வில்லனாக நடித்தார். அதிலும் வில்லன்களுக்கெல்லாம் பெரிய வில்லன் இவர்தான். அதுதான் ‘அபூர்வ சகோதரர்கள்’. இதைத் தொடர்ந்து, ‘இந்திரன் சந்திரன்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘நம்மவர்’, ‘அவ்வை சண்முகி’, ‘பஞ்ச தந்திரம்’ என அடுத்த ரவுண்டிலும் சிக்ஸர் சிக்ஸராக அடித்து வெளுத்து வாங்கினார் நாகேஷ். அதிலும் ‘நம்மவர்’ படத்தில் இவர் நடித்ததெல்லாம் வேற லெவல். மகளைப் பறிகொடுத்து அவர் புலம்புகிற அந்தப் பத்துநிமிடங்களும் நம்மை உலுக்கிப் போட்டுவிடுவார்.

    ‘பீம்பாய் பீம்பாய்’ அதுவொரு ரகம் காமெடி. ‘மேகின்னா ஸ்டெப்னியா?’ என்று கேட்கும் ‘பஞ்ச தந்திரம்’ காமெடி வேறு வகை சரவெடி. ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிணமாக நடித்ததைப் பார்த்து, பிணமே எழுந்து வாய்விட்டுச் சிரிக்கும்.

    எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் முத்திரையைப் பதித்துவிடுகிற, தனி முத்திரை பதித்துவிடுகிற மகா கலைஞன், நகைச்சுவை நாயகன் நாகேஷ். சாகாவரம் பெற்ற கலைஞன். பூமியும் வானமும் உள்ளவரை, பூமிக்கும் வானுக்குமாக விஸ்வரூபமெடுத்து நின்றிருப்பார் நாகேஷ். மக்கள் மனங்களின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.

    அடைமொழி கூடிய சினிமா உலகம். இரண்டு படங்கள் நடித்தாலே பெயருக்கு முன்னே பட்டம் வைத்துக் கொள்கிற உலகில், நாகேஷுக்கு எந்த அடைமொழியும் இல்லை என்பது ஆச்சரியம்தான். ஆனால் என்ன ? நகைச்சுவையின் இன்னொரு பெயர் -  நாகேஷ் என்கிறது சினிமா அகராதி.

நன்றி : இந்து தமிழ் திசை

எழுத்தாளர் அகிலன் நினைவுநாள்

     நாவல் ஆசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் வாய்ந்தவரும் தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவருமான அகிலன் அவர்களது நினைவுநாள் இன்று.

    நான் எழுதிய முதற் கதையும் சரி, இனி நான் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக்  கொண்டவைகளே. கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியைக் காணலாம். ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைக்கே.

     ஒருபுறம் அழகும் வனப்பும் நிறைந்த இயற்கை உலகம், மற்றொருபுறம் வேற்றுமையும் வெறுப்பும் நிறைந்த மனிதர்கள்-இதையே என் கதைக் கருத்து என்று சொல்லலாம்'' என்று கூறியுள்ளார் அகிலன்.

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் (1922) பிறந்தவர். இயற்பெயர் பி.வி.அகிலாண்டம். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்த பிறகு, அம்மாதான் கஷ்டப்பட்டு இவரைப் படிக்கவைத்தார்.

    பள்ளிப் பருவத்தில் ‘சக்தி வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார்.

    இதழ்களில் சிறுகதைகள் எழுதிவந்தார்.மாணவப்பருவத்தில் - 1938  முதலே அகிலன் எழுதத் தொடங்கினார். பள்ளி இதழுக்காக, பதினாறாவது வயதில் அவர் எழுதிய  "அவன் ஏழை' எனும் அவரது முதல் சிறுகதை, அவரது வாழ்க்கையின் பிரதிபலிப்பாய் அமைந்திருக்கிறது. இதை அவரே தனது "எழுத்தும் வாழ்க்கையும்' என்ற நூலில்  குறிப்பிட்டுள்ளார்.

    முதல் நாவல் ‘மங்கிய நிலவு’ 1944 இல் வெளிவந்தது. மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியம் மனிதனை மேம்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தவர். சமூக அக்கறை, சுவையான கதை, உயிர்த் துடிப்பான கதாபாத்திரங்கள், அழகிய, எளிய நடை இவரது படைப்புகளின் சிறப்பம்சங்கள்.

    அகிலனின் சிறுகதைகள், வாழ்வின் சத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டவை. எளிய நடையில், வலிமையான கருத்துகளை சுவாரசியமான தனது எழுத்து நடையால் வாசகரின் மனதில் பதிய வைப்பதே காலத்தை வென்ற படைப்பாளியான அகிலனின் தனித்துவம்.

    ஒரு படைப்பாளி எந்த உணர்வால் உந்தப்பட்டுப் படைக்கின்றானோ அதே உணர்வை, படிக்கும்போது வாசகரும் பெறுவதே அந்தப்  படைப்பின் வெற்றி, அத்தகு படைப்பாளி அகிலன்.

    இந்திய மொழிகள் மட்டுமின்றி, உலகின் பல மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள் என பல வடிவங்களில் உலகின் பல பகுதிகளிலும் இவரது படைப்புகள் வலம் வருகின்றன.


    இவரது ‘பாவை விளக்கு’ நாவல் அதே பெயரிலும், ‘கயல்விழி’ நாவல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற பெயரிலும் திரைப்படங்களாக வந்தன. ஆனந்த விகடன், குமுதம், கலைமகள், தினமணி ஆகியவற்றில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 2 பாகங்களாக வெளிவந்தன.

    ‘நெஞ்சின் அலைகள்’, ‘பெண்’, ‘எங்கே போகிறோம்’ ஆகிய நாவல்கள், ‘சத்ய ஆவேசம்’, ‘ஊர்வலம்’, ‘எரிமலை’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர் நூல்கள், பயண நூல்கள், கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

    ‘வேங்கையின் மைந்தன்’ நாவல் 1963 இல் சாகித்ய அகாடமி விருதையும் ‘சித்திரப்பாவை’ 1975 இல் ஞானபீட விருதையும் பெற்றன. பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன. சோவியத் லாண்ட் விருதும் பெற்றுள்ளார்.

    அகிலனின் "பாவை விளக்கு' அவரது சுய வாழ்வின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஓர் இலக்கிய வாதியின் போராட்ட  வாழ்வை மிக இயல்பாகக்  கூறிச் செல்லும் இந் நாவல், திரைப்படமாக்கப்பட்டு சிவாஜி கணேசனால் நடிக்கப்பட்டது. கலப்புமணப் பிரச்னையை "வாழ்வு எங்கே?' நாவல் அலசுகிறது. இது "குலமகள் ராதை' - என்ற பெயரில் திரைப்படமானது.

    காந்தியத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட அகிலன், மூன்று முறை அரசு அழைப்பை ஏற்று ரஷ்யா சென்றார். தமது பயண அனுபவங்களை "நான் கண்ட ரஷ்யா', "சோவியத்  நாட்டில்' என்ற புத்தகங்களில்  பதிவு செய்தார்.

    மு.வரதராசனார், கி.வா.ஜகன்னாதன், கி.ஆ.பெ.விஸ்வநாதம், சிவாஜி கணேசன், டி.கே.எஸ். சகோதரர்கள், ஏ.பி.நாகராஜன், கே.சோமு, டி.எம்.சவுந்தரராஜன், சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்சலம் என பல துறைகளின் ஜாம்பவான்களுடனும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர்.காமராஜர், சி.எஸ்., ஜீவா, மோகன் குமாரமங்கலம், கே.பாலதண்டாயுதம், கர்பூரி தாகூர், எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தி, கே.முத்தையா ஆகிய தலைவர்களுடனான அகிலனின் நட்பு குறிப்பிடத்தக்கது.

    எளிமை, உண்மை, மனித நேயம், கலைத்தன்மை, நேர்மை, அஞ்சாமை, என்கிற சத்திய ஆளுமைப் பாதையில் தானும் வாழ்ந்து, கலையழகுக் கொள்கைப் பிடிப்பும் நிறைந்த தன் படைப்புகளின் வழி - தமிழ் வாசகர்களையும் மேம்படவைத்த படைப்பாளி அகிலன், தனது 66 ஆவது வயதில் (1988) மறைந்தார்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...