எதிரிகளை எதிர்ப்பதற்கு வயதோ, பாலினமோ, அனுபவமின்மையோ எதுவும் தடையே இல்லை என்று தம் வாழ்வின் மூலம் முன் உதாரணமாகத் திகழ்ந்தவர் தில்லையாடி வள்ளியம்மை. பதின்வயதில் வள்ளியம்மையின் தீரம் மிக்கச் செயல்பாடுகள் இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரை நன்றியுடன் நினைவுகூரத்தக்கதாக விளங்குகின்றன.
தமிழகத்தின் புகழ்பெற்ற தரங்கம்பாடி அருகிலுள்ள சின்னக் கிராமம்தான் தில்லையாடி. அதுதான் வள்ளியம்மையின் பூர்வீகம். இவரின் முன்னோர்கள் தென் ஆப்பிரிக்காவில் குடியேறியவர்கள். தங்கச் சுரங்கங்களும், வைரச் சுரங்கங்களும் நிறைந்த ஜோகன்ஸ்பர்க் நகரில் முனுசாமி - மங்களத்தம்மாள் மகளாக, 1898 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அன்று பிறந்தவர் வள்ளியம்மை. எளிமையான குடும்பம் வள்ளியம்மையுடையது.
அந்நியர் ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்த நாடு விடுதலை பெற எத்தனையோ பேர் தன்னலம் மறந்து தளராது உழைத்த காலம் அது. எவ்வளவு இன்னல் நேரிடினும், உயிரை இழந்தாலும் தாய்நாட்டின் விடுதலையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று போராடிக்கொண்டிருந்த காலம் அது. இந்த மனநிலை உலகம் முழுவதும் அடிமைப்பட்டிருந்த நாட்டு மக்களிடையே நிலவியது. அம்மாதிரியான தீரம் மிக்க மனோ திடத்துடன் இருந்தவர்களில் முக்கியமானவர் வள்ளியம்மை.
`இருண்ட கண்டம்' என்று கருதப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் பொன்நகரம் என்று அழைக்கப்படும் இடம் ஜோகன்ஸ்பர்க். ஒரு காலத்தில் மக்கள் நடமாட்டமின்றி காய்ந்த புல் தரையாகக் காட்சி அளித்தது. அங்கு, தங்கச் சுரங்கங்கள் கண்டறியப்பட்டதனால் வளம் கொழிக்கும் பூமியாக மாறியது. தங்கச் சுரங்கம் உலகத்தின் கவனத்தை ஈர்த்த இந்த ஜோகன்னஸ்பர்க் நகரத்தில்தான் நமது வரலாற்று நாயகி வள்ளியம்மை பிறந்ததும், படித்ததும்.
தென் ஆப்பிரிக்காவில் குடியமர்ந்து அந்த நாட்டைப் பொன் விளையும் பூமியாக மாற்றிய இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம். அதை எதிர்த்துக் கேள்வி எழுப்பினால் கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. சின்ன வயதிலேயே சமூக நடப்புகளைக் கூர்ந்து கவனித்து வந்த வள்ளியம்மையின் எண்ணமெல்லாம் நிறவெறி கொடுமையை எதிர்த்து அண்ணல் காந்தியடிகள் நடத்திய அறப்போராட்டத்தையே சுற்றிச் சுழன்றது. இந்திய மக்களுக்கு இன்னல் விளைந்த போதெல்லாம் வள்ளியம்மைக்கு அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் கனன்றுகொண்டிருந்தது.
காந்தி, தனது சத்தியாகிரகப் போராட்டத்தின் உச்சகட்டமாக 1913 ஆம் ஆண்டு, எல்லைகளை அனுமதியின்றி தாண்டக் கூடாது என்ற விதிகளை மீறி நேட்டாலிலிருந்து டிரான்ஸ்வாலுக்குள் நுழைந்தார். அது அங்கு வாழ்ந்த மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது. காந்தியுடன் சென்ற ஆயிரக்கணக்கான தொண்டர்களில் 16 வயதே ஆன வள்ளியம்மையும் ஒருவர். அந்தப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார்.
எந்தச் சூழலில் இதிலிருந்து விலகி விடக் கூடாது என்ற மனநிலையில் இருந்தார் வள்ளியம்மை. அந்தப் போராட்டத்தில் காந்தியடிகளில் மனைவி கஸ்தூரிபாயும் கலந்து கொண்டிருந்தார். இறுதியில், அன்னை கஸ்தூரிபாயுடன் கைதாகி பீட்டர்மாரிட்ஸ்பர்க் சிறையில் கடுங்காவலில் வைக்கப்பட்டார் வள்ளியம்மை. சிறையில், கடுமையான உழைப்பும் அரை குறைச் சாப்பாடும் வள்ளியம்மையின் உடல்நிலையை வெகுவாகப் பாதித்தது. ஆயினும் தன் உறுதியைக் கைவிட வில்லை.
சிறையில் சொற்களால் சொல்ல முடியாத துன்பங்களைச் சந்தித்த வள்ளியம்மை நோயாளியாக விடுதலையானார். அவருக்கு இன்ன நோய்தான் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. 16 வயதே ஆகியிருந்த வள்ளியம்மை, 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாளில் மரணமடைந்தார்.