2 பிப்ரவரி, 2022

உலக சதுப்பு நில நாள்

   உலக சதுப்பு நில நாள், சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்துகொள்ளக் கொண்டாடப்படும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும் நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியே சதுப்பு நிலங்கள் எனப்படுகின்றன.

    பூமியின் மொத்த பரப்பில் 6 சதவீதம் சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. 

    அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்த்தேங்கும் பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

    1971 இல் காஸ்பியன் கடற்பகுதியில் உள்ள ஈரான் நாட்டில் ராம்சர் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்பு நிலங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பது குறித்து முடிவு செய்து அது பற்றிய விவாத கூட்டத்தையும் அதே ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு உலக சதுப்பு நில நாளாக ஒவ்வோராண்டும் கொண்டாடப்படுகின்றது. 

      161 நாடுகள் அங்கத்தினர்களாக உள்ள இந்த ராம்சர் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கிறது. முதன்முதலில் ராம்சர் நகரில் கூடியதால், இந்த அமைப்புக்கு ராம்சர் அமைப்பு எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை ஆராய்ந்த இந்த அமைப்பு, அவற்றில் சிறப்பானவை என 1950 சதுப்பு நிலங்களைப் பட்டியலிட்டுள்ளது. 

    இந்திய அளவில் இந்த பட்டியலில் 25 சதுப்பு நிலங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் கோடியக்கரை, பழவேற்காடு ஆகியவை இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

    பெருகி வரும் நகர்மயமாக்கல், தொழிற்சாலைகளுக்கான ஆக்கிரமிப்புகள், புதிதாக உருவாகும் குடியிருப்புகள், ரியல் எஸ்டேட், சுற்றுலாத்தலங்கள் அமைத்தல், நீர்த்தேக்கங்கள் அமைத்தல், வேளாண் உற்பத்திக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் போன்றவைகளால் மிகப்பெரிய அழிவைச் சந்தித்து வருகின்றன.


    ஈர நிலங்களை "உயிர் பேரங்காடி" என்பார்கள். உள்ளூர், வெளியூர், வெளிநாட்டுப் பறவைகள் வாழ்விடமாகவும் ஈரநிலம் உள்ளது. 

    மண் அரிப்பைத் தடுத்து நிறுத்துதல், வாடும் பயிர்களுக்கு உயிர் நீராகச் செயல்படுதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், சுனாமி அலைகளை எதிர்கொள்ளுதல், வெள்ள நீரை உள்வாங்கி, வெள்ளச் சேதத்தைத் தடுத்தல் போன்றவற்றை ஈரநிலங்கள் செய்கின்றன. 

சதுப்பு நிலங்கள் அழிவதால் ஏற்படும் விளைவுகள்

    உயிர்ச் சங்கிலி உடையும், பல்லுயிர் வளம் பாதிக்கப்படும், சூழல் சூனியமாகும். நிலத்தடி நீர்வளம் நீர்த்துப்போகும். முக்கியமாக, நீரை வடிகட்டி நன்னீராக மாற்றும் செயல் நின்றுபோகும். உணவுச் சங்கிலியின் உறுதியான பிணைப்பை உறுதி செய்யும் ஈரநிலங்களின் அழிவு, பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

    ஆழிப்பேரலையான சுனாமியின் சீற்றத்தை தடுத்ததில் அலையாத்திக் காடுகள் ஆற்றிய மகத்தான பணியை மறந்துவிடக் கூடாது. இந்த ஈரநிலங்களை எந்த வகையிலும் சேதப்படுத்தாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...