21 ஜனவரி, 2022

எம்.எஸ்.உதயமூர்த்தி நினைவுநாள்

     "உன்னால் முடியும் தம்பி" என்ற தாரக மந்திரத்தைச் சொல்லி இளைஞர்களின் இதயத்தில் தன்னம்பிக்கைப் பயிரை விதைத்து வளர்த்தவர் எம்.எஸ்.உதயமூர்த்தி. மயிலாடுதுறை சு.உதயமூர்த்தி என்பதன் சுருக்கமே எம்.எஸ்.உதயமூர்த்தி. 

    முன்னேற்ற உளவியலைப் பற்றி, தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக, இதழ்களில் கட்டுரைகள் எழுதியதோடு ஏறத்தாழ 40 நூல்களாகவும் வடித்திருக்கிறார். சிறந்த ஆசிரியருக்கான விருதும், Fulbright Scholar என்ற கெளரவமும் பெற்றவர். 

    இயக்குனர் பாலசந்தர் உதயமூர்த்தியின் மேல் உள்ள அபிமானத்தினால்  ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற திரைப்படத்தை எடுத்ததுடன், படத்தின் நாயகனுக்கு உதயமூர்த்தி என்றே பெயரிட்டார். இளைஞர்கள், தவறான திசையில் செல்லாமல் நெறிப்படுத்த, எழுத்து மூலமும், பேச்சு மூலமும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம் .

    எம்ஜிஆரால், அழைத்துப் பாராட்டப்பெற்றவர், தமிழக அரசால் விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டவர். அன்பானவர், மென்மையானவர், பழகுவதற்கு இனிமையானவர். ஏராளமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்தவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. தமிழில் சுயமுன்னேற்ற நூல் பற்றிக் கேள்விப்படாத அந்த நாள்களிலேயே இவரது நூல்கள் பல மனங்களில் ஒளி பாய்ச்சியுள்ளன. 




    'பிரச்சனைகளுக்குத் தீர்வு  காண்பது எப்படி?, 'உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்', 'எண்ணங்கள்', 'நீதான் தம்பி முதலமைச்சர்' உட்படப் பல நூல்களை எழுதியவர். “எண்ணங்கள்” புத்தகம் கிட்டத்தட்ட 10 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    தமிழ்ச் சமூகம் தலை நிமிர, வாழ்வின் இறுதி மூச்சுவரை சிந்தித்தவர், உழைத்தவர். இன்று தன்னம்பிகையாய் நடைபோட்டு சமூக அக்கறையுடன் களப்பணி செய்யும் இளைஞர்கள் பெரும்பாலும் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் தாக்கம் இல்லாமல் இருக்க முடியாது.நதிகளை இணைப்பதன் மூலம் நாட்டை வளம் கொழிக்கச் செய்யலாம் என்று விரும்பியவர். 

    பல சுய முன்னேற்ற நூலாசிரியர்களுக்கு,  இவரே முன்னோடியாவார். "ஐயாவின் நூல்கள்தான் என்னை வழிநடத்தியவை" என்று இன்றைக்கும் பலர் நெஞ்சாரக் கூறுவதை கேட்கமுடியும். கிராமத்தில் பிறந்த முதல் பட்டதாரி மாணவர்கள் பலர் இவரின் நூல்களைப் படித்து, தொழில் துறையிலும், வாழ்க்கையிலும் பல்வேறு வெற்றிகளை ஈட்டி, இன்று வெற்றியாளர்களாக இருப்பதே இதற்குச் சான்று. 

    தமிழர்களின் காவிரிப் பிரச்சினை,  மதுவிலக்கு, நதிநீர் இணைப்பு போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளில் மிகவும் தெளிவான சிந்தனையுடன் களப்பணி செய்தவர். சமூக அக்கறை உள்ள இளைஞர்கள் இவரது நூல்களை ஒருமுறை படித்தால் இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் அதற்கான தெளிவான தீர்வையும் பற்றிய தெளிவு கிடைக்கும். 

    விளநகர் என்ற குக்கிராமத்திலிருந்து அமெரிக்கா சென்றவர், 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றினார். 'சிறந்த தொழிலதிபர்' என்று அமெரிக்க நிறுவனங்களாலும், பத்திரிகைகளாலும் பாராட்டப் பெற்றவர். 


    தாய்மண்மேல் கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர். 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற அமைப்பை 1988 இல் தொடங்கியவர். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த இயக்கம் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புண‌ர்வை ஏற்படுத்தி வந்தது. இளைஞன் ஒருவன் முரசறைவது ‌போன்ற படம் இந்த இயக்கத்தின் சின்னம் ஆகும்.

    செம்பனார்கோயில் பகுதிகளில் இருக்கும் வற்றிய நீர்நிலைகளில், தொண்டர்களுடன் சேர்ந்து தூர்வாரி நீர்வளத்தைப் பெருக்கிக் காட்டியவர். இதன் மூலம் சாமான்ய மக்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு சான்றாக விளங்கியவர். இவரது இந்த செயலுக்கு பிறகுதான் பல கிராமங்களில் மக்கள் அரசை எதிர்பார்க்காமல் தாங்களே தங்களது கிராமத்திற்கான பாதையை போட்டுக் கொண்டனர், சாலைகளைச் சீரமைத்துக் கொண்டனர்.
---------------------------------------------------------------------------------------------------------------

    அவர், அடிக்கடி கீழ்க்காணும் மூன்று கருத்துக்களை, தொடர்ந்து வலியுறுத்தினார்:

1.நாம் இந்த மண்ணிலே பிறந்ததிற்கு இந்த மண்ணிற்கு ஏதாவது நல்லது செய்தாக வேண்டும்.

2.நாம் இந்த மண்ணை விட்டுச் செல்லும்போது, சில நல்ல அடையாளங்களை இந்த மண்ணில் விட்டு விட்டுச் செல்ல வேண்டும்.

3.நமக்கும்,பிறருக்கும்,இந்த சமுதாயத்திற்க்கும் ஆன வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை.உனக்காக மட்டும் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

---------------------------------------------------------------------------------------------------------------------------- 

    தூய்மையான அரசியலுக்கு அடிகோலியவர், அரசியலில் சூது, தந்திரம் அறியாதவர். தனது அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற ஒரு புதிய சமுதாயத்தை தமிழகம் பெறவேண்டும் என்று விரும்பி 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்டார். 

    நேர்மையான அரசு அமைய வேண்டுமென்றால் அரசியலில் ஆர்வம கொண்ட இளைஞர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம், சமுதாய ஈடுபாடு என்ற மூன்று நிலைகளில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர் இவர். இதற்காகப் பல நிகழ்ச்சிகளை இளைஞர்களிடையே அவர் நடத்தினார்.

    அவரது எண்ணங்கள் இன்று வரை தமிழகத்திற்கு வழி காட்டுகிறது. எம்.எஸ்.உதயமூர்த்தி 80வது வயதில்  ஜனவரி 21- 2013 அன்று காலமானார்.

    தானும் நிமிர்ந்து நின்று, தமிழர்களையும் தலை நிமிர்த்த முயன்ற, டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்திக்கு நமது அஞ்சலியைக் காணிக்கையாக்குவோம்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...