விழிமின், எழுமின், உழைமின், கருதிய காரியம்
கைகூடும்வரை...
கொல்கத்தா நகரில், மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் சாலையில் குதிரை வண்டி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த வண்டியின் உள்ளே தாயாகி ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் பயணித்துக் கொண்டிருந்த வண்டியில் பூட்டப்பட்டிருந்த குதிரை திடீரென்று கட்டுப்பாடற்று வேகமாக ஓடத் தொடங்கியது. குதிரை வளர்த்தவரோ சாலையில் விழுந்து கிடக்க, குதிரை வண்டி வேகமாக ஓடியது. உள்ளே செய்வதறியாத பெண் மரண பயத்துடன் அமர்ந்திருக்க, மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தது.
அப்போது சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஓர் இளைஞன் சட்டென குதிரையின் மீது பாய்ந்து அடக்க முயற்சித்து தோல்வி கண்டான். தரையில் விழுந்து கைகால்களில் ரத்தகாயங்கள் ஏற்பட்டது. இருந்தாலும் அவன் மனம் தளரவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்து குதிரையை அடக்கி, அந்த பெண்ணைக் காப்பாற்றினான். அப்போது அவனுக்கு வயது பதினைந்து.
இந்த சம்பவத்தை கண்கூடாகப் பார்த்து வியந்த மக்கள்கூட்டம் அவனது வீரத்தை வெகுவாகப் பாராட்டியது. ஆனால் அந்த இளைஞனோ,பாராட்டுகளையெல்லாம் சிறிதும் காதில் போட்டுக்கொள்ளாமல் இயல்பாக அந்த இடத்தைக் கடந்து சென்றான். அந்த இளைஞனால் தான் பல ஆண்டுகளுக்குப்பிறகு, அமெரிக்க மண்ணில், தனது ஆர்ப்பாட்டமில்லாத, ஆன்மீக உரையால், மிகப்பெரும் மக்கள் சமுத்திரத்தை ஆட்கொள்ள முடிந்தது. அந்த வீரமிக்க இளைஞன் நரேந்திரன் எனப்பட்ட விவேகானந்தர் தான்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதியை தேசிய இளைஞர் தினமாக இந்திய அரசு கடந்த 1984 ஆம் ஆண்டில் அறிவித்தது. அதற்கு அடுத்த ஆண்டான 1985, ஜனவரி12 ஆம் தேதி முதன்முதலாக இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வோராண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
விவேகானந்தர் என்னும் மாமனிதர் ஆன்ம யோகி என்பதைக்காட்டிலும் கர்ம யோகியாகவே அடையாளம் காணப்படுகிறார். காரணம் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், யோக மார்க்கம், கர்ம மார்க்கம் ஆகியவற்றில் அவர், செயலுக்கே முக்கியத்துவம் அளித்தார். அதுவே ஆன்மீக விடுதலைக்கும் வழிவகுக்கும் என்றார்.
கல்வி இன்றியமையாதது என்பதைத் தொடர்ந்து பறைசாற்றினார் விவேகானந்தர்.
“வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கிவைத்து அது செரிக்காமல் அழுகிப்போகவிடுவது கல்வி அல்ல. வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதும்தான் உண்மையான கல்வி”
என்றார். இந்தியச் சமூகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட அவர் முன்வைத்த சிந்தனைகளில் கல்விக்குத்தான் முதல் இடம் அளித்தார்.
“வாழ்க்கையோடு போராடச் சாமானியர்களுக்குக் கற்றுத் தராத, ஒருவருடைய குணத்தை வளப்படுத்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, சிங்கம் போன்ற துணிவைக் கற்றுத்தராதது கல்வியே அல்ல. தன்னிறைவு அடையக் கற்றுத்தருவது மட்டுமே உண்மையான கல்வி”
என்றார்.
“எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. உன்னால் அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். ஆனால் நீ பயப்படும் நொடிப்பொழுதிலேயே உன்னை இழக்கிறாய்.
இவ்வுலகில் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் அச்சமே. உனக்குள் சக்தி குடிகொண்டிருக்கிறது. அதை உணர்ந்தால் எதுவும் சாத்தியமே. நீ பலம் வாய்ந்தவள் (ன்) என்பதை நம்பு. பலவீனமானவள் (ன்) என்பதை நம்ப மறுத்திடு. எழுந்து நின்று உனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்து. ஆகையால், நிமிர்ந்து நில், விழித்திரு, உன்னுடைய இலக்கை எட்டும்வரை ஓயாதே!” என்று அறைகூவல் விடுத்தார்.
“நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுளர்கள் சக மனிதர்களே! பொறாமைப்பட்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிடாமல் சக மனிதர்களை தொழுதிட வேண்டும்” என்றார்.தெற்கே ராமேசுவரத்தில் இருக்கும் ஒருவர் வடக்கே காசிக்கு செல்லவேண்டும் என்றும், வடக்கே காசியில் இருக்கும் ஒருவர் தெற்கே ராமேசுவரத்திற்கு செல்லவேண்டும் என்று நினைக்கும் வரையில் நம்முடைய தேசம் கலாச்சார ரீதியில் ஒரு வல்லர சாகவே இருக்கும் என்றார் சுவாமி விவேகானந்தர்.
“ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். அதுவே ஆன்மீகத்தில் புதிய விடியல்”
என்றார் சுவாமி விவேகானந்தர்.
“எல்லாமே கிடைத்துவிடும். ஆனால் வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான இளைஞர்கள்தான் இன்றைய தேவை. அப்படிப்பட்ட 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகை மாற்றிக் காட்டுகிறேன்”
என எழுச்சி உரை ஆற்றினார். உன்னுள் அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன. உனக்கு நிகர் நீயே. உன் மீது நம்பிக்கை வை. உன்னால் எதுவும் முடியும். வழக்கமான சம்பிரதாயமான சடங்கில் விவேகானந்தருக்கு நம்பிக்கை இல்லை.
“மதம் என்பது ஆன்மிகம்” என்னும் தெளிவைக் கொண்டவர். நான் மறைந்த பின் ஆயிரம் ஆண்டுகள் என்னுடைய தாக்கம் இருக்கும் என்றார். இந்த தீர்க்க தரிசனம் யாருக்கு வரும்?
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை
ஒவ்வோர் இளைஞனும் தன்னை முதலில் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன்பின் தனக்கு வந்த உயர்வைக் கொண்டு, அதற்குக் காரணமாக இருந்த சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். சாதி, மத, இன பேதங்களைக் கடந்து ஒன்றுபட்ட கலாச்சாரமே, பாரத கலாச்சாரம்.
இதில் மலிவான சிந்தனைகளுக்கு இடமே இல்லை. பணம், பதவி, புகழ் போன்ற சாதாரண இலக்குகளை நோக்கமாகக் கொள்ளாமல் உலக நன்மை என்னும் பரந்துபட்ட சிந்தனையை இளைஞர்கள் தங்களின் மனத்தில் கொண்டு, உயர்ந்த நோக்கத்தை தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர்.
இப்படி, எது கல்வி என்பதில் தொடங்கி, உடலிலும் உள்ளத்திலும் இளைஞர்களுக்குப் பலம் அவசியம், சமூக நல்லிணக்கம் என்பதுவரை இளைஞர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார் விவேகானந்தர்.
ஆன்மிகத்தோடு சமய சார்பற்ற பார்வையும் கொண்டிருந்த அவருடைய சிந்தனைகளை, ஆன்மீகம் கடந்து புரிந்துகொள்ளத் தொடங்கினால், இந்திய தேசம் இளைஞர்களின் தேசமாக விரைவில் மாறும்.